Last Updated : 03 Nov, 2016 12:08 PM

 

Published : 03 Nov 2016 12:08 PM
Last Updated : 03 Nov 2016 12:08 PM

நபிகள் வாழ்வில்: இறை நேசராகும் பண்பாளர்

தனது கண்ணியத்தைப் பறிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களை யாரொருவர் மன்னித்து பொறுத்துக்கொள்கிறாரோ அவரே மனிதரில் சிறந்தவர். கண்ணியமும் சமூக அந்தஸ்தும் இறைவன் வழங்கியதால் அந்த மன்னிப்பு இறைவனுக்கு செலுத்தும் நன்றி உணர்வாகவும் மாறிவிடுகிறது.

“கோபப்படுவதற்கான நியாயமான காரணங்களிருந்தும் அதைக் கட்டுப்படுத்திக் கொள்பவன் மறுமை நாளில் முதன் முதலில் உயிர் கொடுத்து எழுப்பப்படும் பேற்றைப் பெறுவார்கள்!” என்கிறார் நபிகளார்.

“சுவனத்தில் அழகிய மாளிகைகளையும், உயரிய சிறப்புகளையும் பெற்றுத் தரும் பண்புகள் குறித்து நான் உங்களுக்கு சொல்லட்டுமா?” என்று ஒருமுறை நபிகளார் தமது தோழர்களிடம் கேட்கிறார்.

இதைக் கேட்ட நபித்தோழர்கள், “அந்தப் பண்புகள் குறித்து தவறாமல் எங்களுக்குப் போதியுங்கள் இறைவனின் திருத்தூதரே!” என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு நபிகளார், “தோழர்களே, கல்லாதவர் போல அநாகரிகமாக நடப்பவரிடம் நீங்கள் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். அநீதி இழைப்பவர்களை மன்னித்துவிடுங்கள். உங்களுக்குத் தராமல் பறித்துக் கொள்பவர்களுக்கு நீங்கள் கொடுத்து வாழுங்கள். உறவுகளைத் துண்டித்து பிணங்கியிருப்பவரிடம், நீங்கள் இணைந்தே இருங்கள்” என்று பட்டியலிட்டார்.

“இறைவனின் மன்னிப்புக்கும், வானம் பூமி அகலத்துக்கு ஒப்பான சுவனத்துக்கும் விரைந்து கொள்ளுங்கள். அது பயபக்திமான்களுக்காகவே தயார்படுத்தப்பட்டுள்ளது. அந்த பண்பாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், செல்வ நிலையிலும், வறுமை நிலையிலும் தானம் செய்து கொண்டிருப்பார்கள். கோபத்தை விழுங்கிவிடுவார்கள். சக மனிதர்களின் குற்றங்குறைகளை மன்னித்துவிடுவார்கள்.”

திருக்குர்ஆன் நற்பண்புகளை, சுவனத்துக்கான பாதை என்பதோடு, இறைவனின் நேசிப்புக்கும் உரியது என்று ஊக்குவிக்கிறது.

மன்னித்தலுக்கு உதாரணம்

“அப்துல்லாஹ் பின் உபை” இந்தப் பெயர் இஸ்லாமிய வரலாற்றில் மறக்க முடியாத பெயர். முஸ்லிம்களின் மானம், மரியாதைக்கு பெரும் அறைகூவலாக இருந்தவர் இந்தப் பெயருக்குரியவர். சமூக அமைப்பில் சதா குழப்பங்களை விளைவித்தவர். கிடைக்கும் எந்தச் சந்தர்ப்பத்தையும் முஸ்லிம்களுக்கு விரோதமாக பயன்படுத்தத் தயங்காதவர். ஒரு கட்டத்தில் நபிகளார் குடும்பத்தார் மீது எல்லை கடந்த அபாண்டத்தைப் பரப்பியவர். இத்தகைய ஒரு கொடிய பண்பாளரிடம் நபிகளார் நடந்து கொண்ட முறைமை ஒறுத்தலுக்கு, மனித வரலாற்றில் மிகச் சிறந்த முன்னுதாரணம்.

மக்காவின் ஆட்சி அதிகாரம் முஸ்லிம்கள் வசமானபோது, அதை ஏற்றுக் கொள்ளாத மன அழுத்தத்துக்கு ஆளான அப்துல்லாஹ் பின் உபை நோய்வாய்ப்பட்டு மரணமுற்றார்.

அந்த நேரத்தில் அவருடைய இரண்டு பிள்ளைகள் நபிகளாரிடம் சென்றார்கள். தங்கள் தந்தையின் கடந்த கால தவறுகளை மன்னிக்க வேண்டி நின்றார்கள்.

நபிகளார், அப்துல்லாஹ் பின் உபையின் அனைத்து தவறுகளையும் மன்னித்துவிட்டார்.

தங்கள் தந்தையாரின் இறந்த உடலுக்கு நபிகளாரின் மேலாடையை போர்த்தி கண்ணியப்படுத்தும் விதமாக ஆடையைக் கேட்டார்கள். நபிகளார் புன்னகையுடன் தமது மேலாடையை எடுத்துக் கொடுத்தார்.

அதோடு நில்லாமல் தங்கள் தந்தையாரின் மரணத் தொழுகையை முன்னின்று நடத்தும்படியும், அவருடைய பிழைபொறுக்க இறைவனிடம் பிரார்த்திக்கும்படியும் வேண்டினார்கள்.

நபிகளார், இந்தக் கோரிக்கையையும் மறுக்கவில்லை. அவர்களது விருப்பத்தை மனநிறைவோடு நிறைவேற்றி வைத்தார் என்கிறது வரலாறு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x