Published : 11 Oct 2022 07:29 AM
Last Updated : 11 Oct 2022 07:29 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 24 | திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப் பெருமாள் கோயில்

திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப் பெருமாள் கோயில்

முனைவர் கே.சுந்தரராமன்

108 வைணவ திவ்ய தேசங்களில், திருவாரூர் மாவட்டம் திருச்சிறுபுலியூர் தலசயனப் பெருமாள் கோயில் 24-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இக்கோயில் திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்கள் (பெரிய திருமொழி) பாடப்பட்டு மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.


கருமாமுகிலுருவா, கனலுருவா புனலுருவா

பெருமாள் வரையுருவா, பிறவுருவா, நினதுருவா

திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து

அருமா கடலமுதே உனதடியே சரணாமே.

மூலவர்: அருமாகடலமுதன் (ஸ்தலசயனப் பெருமாள்)

உற்சவர்: கிருபா சமுத்திரப் பெருமாள்

தாயார்: திருமாமகள் (தயா நாயகி)

தல விருட்சம்: வில்வ மரம்

ஆகமம் / பூஜை: பாஞ்சராத்ரம்

தீர்த்தம்: மானஸ புஷ்கரீணி

விமானம்: நந்தவர்த்தன விமானம்

தல வரலாறு

ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் பகை ஏற்பட்டது. கருடனைக் கண்டு அஞ்சிய ஆதிசேஷன் பல இடங்களில் ஓடித் திரிந்து, நிறைவாக இத்தலத்தை வந்தடைந்தார். இந்தப் பகை நீங்குவதற்காக ஆதிசேஷன் ஸ்தலசயனப் பெருமாளை நோக்கி தவம் இருந்தார். ஆதிசேஷனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் அவருக்கு மாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தில், காட்சி கொடுத்து, அவரை தன் சயனமாக்கிக் கொண்டார். இத்தலத்தில் பெருமாள் குழந்தை வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீரங்கத்தில் மிகப் பெரிய அளவில் சயனித்திருக்கும் பெருமாள், இத்தலத்தில் மிகச் சிறிய அளவில் (பாலகனாக) சயனித்திருக்கிறார். கன்வ முனிவர், வியாக்ரபாதர், பதஞ்சலி (ஆதிசேஷன்) ஆகியோருக்கு பெருமாள் அருள்பாலித்த தலம். சூரியன், துர்வாச முனிவர், மணவாள மாமுனிகள் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.

கோயில் அமைப்பும், சிறப்பும்

அருமாகடலமுதன் கோயில் 1,500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயில் ஆகும். அரிசிலாற்றின் கிளை நதிக்கரையில் ஏக்கர் நிலப்பரப்பில் இக்கோயில், கிழக்கு மேற்காக 142 அடி அகலமும் வடக்கு தெற்காக 225 அடி நீளமும், தெற்கு நோக்கி 72 அடி உயரம் கொண்ட 5 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோயில் ராஜ கோபுரத்தைக் கடந்து சென்றால், கொடிமரம், பலி பீடம், கருடாழ்வார் சந்நிதியை தரிசிக்கலாம். மூலவர் ஸ்தல சயனப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உடன் வியாசர், வியாக்ரபாதர், கங்கை உள்ளனர். மூலவர் கருவறை கோஷ்டத்தில் விநாயகர், திருமால், விஷ்ணு துர்க்கை உள்ளனர். உள் திருச்சுற்றில் விஷ்வக்சேனர் அருள்பாலிக்கிறார். வெளி திருச்சுற்றில் ஆண்டாள், பால ஆஞ்சநேயர், திருமாமகள் தாயார், ஆழ்வார் சந்நிதிகள், யாகசாலை, திருமடப்பள்ளி, திருவாய்மொழி மண்டபம் உள்ளன.

சிதம்பரம் நடராஜப் பெருமான் அருளியபடி வியாக்கிரபாதர் (புலிக்கால் முனிவர்) இத்தல பெருமாளை வணங்கி மோட்சம் பெற்ற காரணத்தால், இவ்வூர் திருச்சிறுபுலியூர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மிகச் சிறிய வடிவில் புஜங்க சயனத்தில் திருமங்கையாழ்வாருக்காக பெருமாள் பள்ளி கொண்டுள்ளார்.

கருடாழ்வாருக்கு பெருமாள் அபயமளித்த தலமாக இருப்பதால் பூமிக்கு கீழ் கருடன் சந்நிதி அமைந்துள்ளது. மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேஷனுக்கு சந்நிதி உள்ளது.

திருவிழாக்கள்

சித்திரை வருடப் பிறப்பு, வைகாசி பிரம்மோற்சவம், ஆடிப் பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி ஜேஷ்டாபிஷேகம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி பவித்ரோற்சவம், ஐப்பசி மணவாள மாமுனிகள் விழா, திருக்கார்த்திகை விழா, மார்கழி வைகுண்ட ஏகாதசி, பொங்கல் திருவிழா, மாசி மாத அனந்தாழ்வார் விழா, பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். நாக தோஷம் உள்ளவர்கள், எதிரிகளால் ஆபத்து உள்ளவர்கள் இத்தலத்தில் நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்வது வழக்கம்.

அமைவிடம்: மயிலாடுதுறை - திருவாரூர் செல்லும் இருப்புப் பாதையில் கொல்லுமாங்குடி ரயில் நிலையத்தில் இருந்து 2 மைல் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x