Published : 01 Oct 2022 04:40 AM
Last Updated : 01 Oct 2022 04:40 AM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான இன்று இரவு கருட வாகனத்தில் மலையப்பர் அருள் பாலிக்க உள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-ம் நாளான நேற்று காலை கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியாக காலைமோகினி அவதாரமும் இரவு கருட சேவையும் நடைபெற உள்ளது. இது புரட்டாசி மாதம் என்பதாலும் ஏழுமலையானுக்கு உகந்த சனிக்கிழமை என்பதாலும் பக்தர்கள் கருடசேவையில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்தும் திருமலைக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் நேற்று நண்பகல் 12 மணியிலிருந்து திருமலைக்கு பைக்குகள் அனுமதிக்கப்படவில்லை.
திருமலையில் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,200 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாட வீதிகளில் பக்தர்கள் அமர்ந்து வாகன சேவையை காண அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சுமார் 3 லட்சம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட வசதிகளை தேவஸ்தானம் செய்துள்ளது.
மாடவீதிகளில் கருட சேவையின் போது சுவாமிக்கு ஆரத்திகொடுப்பது இம்முறை தவிர்க்கப் பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆரத்தி இடத்திலும் கூடுதலாக 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்யலாம். பக்தர்கள் நெரிசல் இன்றி கருட சேவையை கண்டு வெளியேற மாட வீதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பதி - திருமலை இடையே 5 நிமிடத்திற்கு ஒருமுறை அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது.
ஆண்டாள் சூடிய மாலை
ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி பிரம்மோற்சவத்தின் கருட சேவையில் ஆண்டாள் சூடிய மாலையும் கிளியும் இடம் பெறும். இதையொட்டி ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மலர்மாலை நேற்று மதியம் திருமலைக்கு வந்தது.
பெரிய ஜீயர் மடத்தில் பூஜை செய்யப்பட்டு, 4 மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பிறகு கோயிலை அடைந்தது. இந்த மலர்மாலைகளை மலையப்பர் சூடிக்கொண்டு இன்று கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT