Last Updated : 03 Nov, 2016 12:08 PM

 

Published : 03 Nov 2016 12:08 PM
Last Updated : 03 Nov 2016 12:08 PM

ஆழ்வார் ஜெயந்தி: திருமேனி கண்ட மூன்று ரத்தினங்கள்

பன்னிரு ஆழ்வார்களில், முதலாழ்வார்கள் என போற்றப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் ஆகியோர், “மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து நற்றமிழால் நூற்செய்து நாட்டையுய்த்த பெற்றிமையோர்” எனும் சிறப்புப் பெற்றவர்கள்.

எப்படி அவதரித்தனர்

துவாபர யுகத்தில் ஒரு ஸித்தார்த்தி வருடத்தில் ஐப்பசி மாதத்தில் சுக்லபக்ஷ அஷ்டமி திதியும், செவ்வாய்க்கிழமையும் கூடிய திருவோண நட்சத்திரத்தில் காஞ்சிபுரத்தில் திருவெஃகாவை அடுத்த பொய்கையில் பொற்றாமரையிலிருந்து அம்சமாகப் பொய்கையாழ்வார் அவதரித்தார். மறுநாள் அவிட்ட நட்சத்திரத்தில் கௌமோதகி என்னும் கதாயுதத்தின் அம்சமாய் திருக்கடல் மல்லையில் ( மாமல்லபுரம்) நீலோற்பல மலரில் பூதத்தாழ்வார் அவதரித்தார்.

மறுநாள் சதய நட்சத்திரத்தில் பெருமானின் நந்தகம் என்னும் வாளின் அம்சமாய் மயிலாப்பூரில் ஒரு கிணற்றில் செவ்வல்லி மலரில் பேயாழ்வார் அவதரித்தார். இவர்கள் மூவரும், சாமானியர்களைப் போல் ஒரு தாயின் வயிற்றில் ஜனிக்காததால், ‘அயோநிஜர்கள்’ எனப்படுகிறார்கள்.

இவர்கள் மூவரும் எம்பெருமானின் அருளாலே, சத்துவ குணம் மிக்கவர்களாய், ஒரு நாள் இருந்த இடத்தில் மறுநாள் தங்காமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் தங்குகிறவர்களாய், ஒருவரையொருவர் அறியாமல் தனித்தனியாக வாழ்ந்து வந்தார்கள்.

திருக்கோவலூர் வைபவம்

இம்மூவரைக் கொண்டு திவ்யப் பிரபந்தங்களை உலகு உய்ய அவதரிக்கச் செய்யத் திருவுள்ளம் பற்றியவனாய், எம்பெருமான் இவர்களைத் திருக்கோவலூரிலே ஒரு நாள் இரவு சந்திக்கச் செய்தான். முதலில் அவ்வூருக்கு வந்த பொய்கையாழ்வார் “மிருகண்டு” முனிவரின் ஆசிரமத்தின் இடைகழியில் சயனித்துக் கொண்டிருந்தார். அப்போது பூதத்தாழ்வார் அவ்விடத்திற்கு வந்து தங்க இடம் கேட்க, “இவ்விடம் ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்” என்று கூறிப் பொய்கையாழ்வார் அவரை வரவேற்றார்.

இருவரும் ஒருவருக்கொருவர் தண்டனிட்டு, பகவத் குணானுபவம் செய்து கொண்டு வீற்றிருந்தனர். அப்போது பேயாழ்வார் அங்கு வந்து தங்க இடம் கேட்க, “ இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்” என்று கூறி பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரை வரவேற்றனர். ஒருவருக்கொருவர் தண்டனிட்டு, மூவரும் அவ்விடை கழியிலே நின்று கொண்டு எம்பெருமானுடைய குணங்களை ஒருவருக்கொருவர் சொல்லியும், கேட்டும் மகிழ்ந்திருந்தனர். ஞானிகளான இவர்களோடு நெருக்கத்தை விரும்பிய எம்பெருமான் அங்கு வந்து இவர்களை நெருக்கத் துவங்கினார்.

இப்படி இருளில் நெருக்குபவர் யார் என்று காண்பதற்காக

“வையம் தகளியா, வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய

சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் – மாலை

இடர் ஆழி நீங்குகவே என்று”

என்று தொடங்கி வருத்தும் புறவிருள் மாற்ற மறையின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி, ஒன்றத் திரித்து அன்றெரிந்த திருவிளக்காக முதல் திருவந்தாதியைப் பாடினார் பொய்கையாழ்வார்.

“அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக,

இன்புருகு சிந்தையிடுதிரியா- நன்புருகி

ஞானச்சுடர் விளக்கேற்றினேன், நாரணற்கு

ஞானத்தமிழ் புரிந்த நான்”

என்று தொடங்கி, இறைவனைக் காணும் இதயத்து இருள்கெட, ஞானமென்னும் நிறைவிளக்கு ஏற்றுவது போலே இரண்டாம் திருவந்தாதியைப் பாடினார் பூதத்தாழ்வார்.

அதன்பின் அவர்கள் பலகாலம் திவ்யதேச யாத்திரை செய்து, திருமழிசைக்கு சென்று, திருமழிசைஆழ்வாரைக் கண்டு பேசி, அவரோடு கூடிக் களித்து, யோக பலத்தால் நெடுங்காலம் வாழ்ந்திருந்து முடிவில் திருக்கோவலூரையே அடைந்து அங்கேயே திருநாட்டுக்கு எழுந்தருளினர். மற்ற ஆழ்வார்களுக்கு முன்பே வந்து அவதரித்து அவர்களுக்கும் வழிகாட்டியாகத் திவ்யப் பிரபந்தங்களை முதன்முதலில் அருளிய பெருமையினால் இவர்கள் “முதலாழ்வார்கள்” என்று பெயர் பெற்றார்கள்.

திருவந்தாதிகளின் சாரம்

பொய்கையாழ்வார் பூமியை விளக்குத் தகளியாகக் கொண்டார்; பூதத்தாழ்வார் தம்முடைய அன்பையே தகளியாக்குகிறார். பொய்கையார் சமுத்திரத்தை நெய்யாக்கினார். பூதத்தார் தம்முடைய உள்ளத்தினுள்ளே சமுத்திரம் போல் பொங்கிக் கொண்டிருக்கும் ஆர்வத்தையே நெய்யாக்குகிறார். அவர் சூரியனை விளக்கொளியாகக் கற்பனை செய்தார். இவரோ உருகிக் கொண்டிருக்கிற தம்முடைய சிந்தையைத் திரியாக்கி ஞானத்தையே தீபச் சுடராக்குகிறார்.

இருவரும் ஏற்றி வைத்த ஞான தீபத்திலே, ஜோதி வெள்ளமாய், திவ்ய மங்கள சொரூபமாய் எம்பெருமான் காட்சியளிக்கிறார். பொய்கையாரும், பூதத்தாரும் உதவிய ஞான வெளிச்சத்தில், அந்த ஞானானந்த சொரூபத்தைக் கண்டு அனுபவிக்கும் பேயாழ்வார், “திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்” என்று வெளிப்படுத்துகிறார். நான்காவது ஆளாய் வந்தது நாராயணன்தான் என்று அறிந்து, மூவரும் பேரின்ப வெள்ளத்தில் ஆழ்ந்து, கண்ணீர் சொரிந்து, நெகிழ்ந்த உள்ளத்தோடு, பரவசம் மிக இரவெல்லாம் அந்தாதி பாடினர். பக்தி ரசம் சொட்டும் அந்த ஞானத் தமிழைக் கேட்பதெற்கென்றே எம்பெருமான் நேரில் வந்தார்.

முதல்வரான பொய்கையார், ‘வையம் தகளியா’ என தொடங்கி ஞானம் பிறந்த நிலையை வெளிப்படுத்தினார். இரண்டாமவரான பூதத்தாழ்வார், ‘அன்பே தகளியா’ என தொடங்கி ஞானம் முற்றிப் பக்தியாகும் நிலையை வெளிப்படுத்தினார். மூன்றாமவரான பேயாழ்வார் ‘திருக்கண்டேன்’ என்று தொடங்கி அந்தப் பக்தியாலே பரம்பொருளை நேரில் பார்த்ததை விளக்கினார்.

மூவர் பாடிய திருவந்தாதி, திவ்யப் பிரபந்தத்தில் “இயற்பா” என்ற பகுதியில் முதல் மூன்று அந்தாதிகளாகச் சேர்க்கப் பெற்றிருக்கின்றன. நூறு நூறு வெண்பாக்களாக அமைந்த இவற்றில், அமைப்பிலும், நடையிலும், தொனியிலும், சொல்லாட்சியிலும் ஒற்றுமைகள் உள்ளன.

“உளன் கண்டாய் நன்னெஞ்சே

உத்தமனென்னும் உளன் கண்டாய்

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்”

என்ற சொற்றொடர், மூன்று திருவந்தாதிகளிலும் இடம் பெற்றுள்ளது.

இம்மூன்று திருவந்தாதிகளும் பிரபந்தத்தில் ரத்தினங்களாக மிளிர்கின்றன.

இத்தனை சிறப்பு வாய்ந்த முதலாழ்வார்கள் அவதரித்த இந்த ஐப்பசி மாதத்தில் அவர்கள் தத்தமது, அகல் விளக்கின் மூலமாகக் காட்டிய வழியில் நாமும் சென்று, பிறவிப் பெருங்கடலை கடப்போமாக!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x