Published : 18 Sep 2022 06:02 AM
Last Updated : 18 Sep 2022 06:02 AM
108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகப் போற்றப்படும் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், 7 சுற்று மதில்களுடன் இக்கோயில் அமைந்துள்ளது.
பஞ்சரங்கத் தலங்களுள் (ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கப்பட்டணம், ஸ்ரீரங்கநாதர் கோயில், ஸ்ரீரங்கம், சாரங்கபாணி கோயில், குடந்தை, அப்பால ரங்கநாதர், கோவிலடி, பரிமள ரங்கநாதர் கோயில், மயிலாடுதுறை) ஒன்றாக இத்தலம் போற்றப்படுகிறது. 12 ஆழ்வார்களில் மதுரகவியாழ்வார் தவிர ஏனையோரால் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. கம்பராமாயணத்தை கம்பர் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரம்:
பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
ஊர் இலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர்களைக் கணம்மா அரங்கமா நகருளானே!
மூலவர் / உற்சவர்: ரங்கநாதர் / நம்பெருமாள்
தாயார்: ரங்கநாயகி
தலவிருட்சம்: புன்னை
தீர்த்தம்: சந்திர தீர்த்தம் மற்றும் 8 தீர்த்தங்கள்
ஆகமம் / பூஜை: பாஞ்சராத்திரம்
விமானம்: பிரணாவாக்ருதி
தல வரலாறு
திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய ரங்கநாதரை, நெடுங்காலமாக பிரம்மதேவர் பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜைகள் செய்ய, சூரியன் நியமிக்கப்பட்டார். சூரிய குலத்தில் தோன்றிய ராமபிரானும், அயோத்தியில் இருந்த ரங்கநாதரை வழிபட்டு வந்தார். ஸ்ரீராம பட்டாபிஷேகத்துக்கு வருகை புரிந்த விபீஷணனுக்கு, ராமபிரான், தான் பூஜித்து வந்த ரங்கநாதர் சிலையை பரிசாக அளித்தார். விபீஷணன், இலங்கை திரும்பும் வழியில், சற்று நேரம் ஓய்வெடுக்க எண்ணினார்.
ரங்கநாதர் சிலையை கீழே வைக்க விரும்பாத விபீஷணன், காவிரி ஆற்றங்கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக் கூடாது என்று கூறிவிட்டு, சற்று நேரம் ஓய்வெடுத்தார். ஆனால் அச்சிறுவன், ரங்கநாதர் சிலையைக் கீழே வைத்துவிட்டான். சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு வந்த விபீஷணன், சிறுவனைக் கடிந்து கொண்டார். தரையில் இருந்து மீண்டும் ரங்கநாதர் சிலையை எடுக்க இயலவில்லை. கலங்கிய மனநிலையில் இருந்த விபீஷணனுக்கு, அப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னர் தர்மவர்மன் ஆறுதல் கூறினார்.
ரங்கநாதருக்கு காவிரிக் கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று விருப்பம். அதனால் குடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டி, விபீஷணன் இருக்கும் தென் திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டு அருள்வதாக உறுதியளித்தார். சிறுவனாக வந்தது விநாயகப் பெருமான் என்று கூறப்படுகிறது. அவரே மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.
ரங்கநாதரின் விருப்பத்துக்கு ஏற்ப தர்மவர்மனும், இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டார். காலப்போக்கில் இக்கோயில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்து போனதாக கூறப்படுகிறது. மன்னர் தர்மசோழர் மரபில் வந்த கிள்ளிவளவன், இக்கோயிலை மீண்டும் அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
கோயில் சிறப்பு
இத்தலத்து ராஜ கோபுரம், இந்தியாவின் மிகப் பெரிய ராஜ கோபுரம் ஆகும். பல ஏக்கர் (ஏறத்தாழ 156 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலில் அழகிய மண்டபங்கள், திருக்குளங்கள், தனி சந்நிதிகள், 21 கோபுரங்கள், 7 சுற்றுப் பிரகாரங்கள் அமைந்துள்ளன. மேலும் 7 மதில்கள், 7 தாயார்கள், 7 உற்சவங்கள், 7 திருவடி சேவை, 7 கண்டுகளிக்கும் சேவை என்று சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
பொன்னால் வேயப்பட்ட ஸ்ரீரங்க விமானம், ‘ஓம்’என்ற பிரணவ வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளது. இதற்கு 24 கி.மீ தொலைவு சுற்றி எங்கிருந்து வழிபட்டாலும் இறைவனின் திருவடியை அடையக் கூடிய முக்தி நிச்சயம் என்று ஸ்ரீரங்க தலவரலாறு உரைக்கிறது. ரங்கவிலாஸ் மண்டபத்தில் உள்ள கல் கொடிமரத்தை வணங்கி, உயர்ந்து நோக்கினால், கொடிமரம் அசைவது போன்று தோன்றும்.
தனது 120-வது வயதில் (கிபி 1137) சாயுஜ்யம் அடைந்தார் ஸ்ரீராமானுஜர். இத்தனை ஆண்டுகள் கடந்தும் இக்கோயிலில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
ரங்கநாதர் அணிந்து கொண்டிருக்கும் காலணிகள் கொஞ்சம், கொஞ்சமாகத் தேய்வதாக கூறப்படுகிறது. 6 மாதங்களுக்கு ஒருமுறை ரங்கநாதரின் திருப்பாதத்தில் இருந்து காலணிகள் கழற்றப்படும்போது, அவரே பயன்படுத்தப்பட்டவை போல தேய்ந்து காணப்படும்.
ரங்கநாதரின் திருக்கண்கள், விபீஷணனால் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் நெல் சேமிப்பு கிட்டங்கிகள் வட்ட வடிவமாக அமைக்கப்பட்டன. 20 அடி விட்டமும், 30 அடி உயரமும் கொண்ட 5 பிரம்மாண்ட நெற்குதிர்கள் உள்ளன. எவ்வளவு நெற்கதிர்கள் கொட்டினாலும், அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் விரிவடையும் தன்மை கொண்டதாக நெற்குதிர்கள் அமைந்துள்ளன.
ரங்கநாச்சியார் சந்நிதிக்கு வெளியில் அமைந்துள்ள ஐந்து குழி மூன்று வாசல் குறிப்பிடத்தக்கது. அர்த்த பஞ்சக ஞானத்தை ஐந்து குழி குறிப்பதாகவும், மூன்று வாசல் பிரம்மத்தின் வழி என்றும் கூறப்படுகிறது. ஐந்து குழிகள் வழியே ஐந்து விரல்களை வைத்து தென்திசை நோக்கினால் பரமபத வாசல் தெரியும் என்பதால் இவ்விதம், தாயார் பெருமாளை சேவிக்கிறார் என்பது ஐதீகம்.
இக்கோயில் சந்திர புஷ்கரணி, வில்வ தீர்த்தம், சம்பு தீர்த்தம், பகுள தீர்த்தம், பலாச தீர்த்தம், அசுவ தீர்த்தம், ஆம்ர தீர்த்தம், கதம்ப தீர்த்தம், புன்னாக தீர்த்தம் ஆகிய 9 தீர்த்தங்களைக் கொண்டுள்ளது.
சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம், காடுகாண் காதை, அகநானூறு உறையூர் முதுகூத்தன்னார் பாடல்களில் திருவரங்கம் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்களில், 247 பாசுரங்கள் திருவரங்கம் மீது அமைந்துள்ளன. திருமங்கையாழ்வார் 73 பாடல்களையும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் 55, பெரியாழ்வார் 35, குலசேகராழ்வார் 31, திருமழிசையாழ்வார் 14, நம்மாழ்வார் 12, திருப்பாணாழ்வார் 10, ஆண்டாள், 10, பூதத்தாழ்வார் 4, பொய்கையாழ்வார் 1 பாடலையும், பேயாழ்வார் 2 பாடல்களையும் பாடியுள்ளனர்.
ரங்கநாதரும் 7 அதிசயமும்
ரங்கநாதர் கோயில் உள்ள ஏழு மதில் சுற்றுகள் ஏழு உலகங்களாக கருதப்படுகின்றன. மாடங்கள் சூழ்ந்த திருச்சுற்று - பூலோகம், திருவிக்கிரம சோழன் திருச்சுற்று - புவர்லோகம், அகலங்கனென்னும் கிளிச்சோழன் திருச்சுற்று - சுபர்லோகம், திருமங்கை மன்னன் திருச்சுற்று - மஹர்கோகம், குலசேகரன் திருச்சுற்று - ஜநோலோகம், ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று - தபோலோகம், தர்மவர்ம சோழன் திருச்சுற்று - சத்யலோகம் என்று கருதப்படுகின்றன.
பெரிய கோயில், பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார், பெரிய கருடன், பெரியவசரம் (நைவேத்தியம்), பெரிய திருமதில், பெரிய கோபுரம் என்ற பெருமைகளைக் கொண்டதாக இக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்கநாச்சியார் என்று 7 நாச்சியார் உள்ளனர்.
ஸ்ரீரங்கம் கோயிலில் வருடத்துக்கு 7 முறை (விருப்பன் திருநாள், வசந்த உற்சவம், விஜயதசமி, வேடுபறி, பூபதி திருநாள் - அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, பாரிவேட்டை, ஆதி பிரம்மோற்சவம்) நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார். வருடத்துக்கு 7 முறை (சித்திரை, வைகாசி, ஆடி, புரட்டாசி, தை, மாசி, பங்குனி) நம்பெருமாள் கோயிலை விட்டு வெளியே எழுந்தருள்வார். ஏழு உற்சவத்தின்போது, 7-ம் நாள் (வருடத்துக்கு 7 முறை - சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி, பங்குனி) நெல்லளவு கண்டருள்வார்.
தாயார் சந்நிதியில் வருடத்துக்கு 7 உற்சவங்கள் (கோடை உற்சவம், வசந்த உற்சவம், ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை, நவராத்திரி, ஊஞ்சல் உற்சவம், அத்யயநோற்சவம், பங்குனி உற்சவம்) நடைபெறும்.
நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாளில் ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும். தமிழ் மாதங்களில் 7-ம் மாதமான ஐப்பசி 30 நாட்களும் தங்க குடத்தில் புனிதநீர் யானை மீது கொண்டு வரப்படும். திருமாலின் 7-ம் அவதாரமான ராமாவதாரம் பூஜித்த தலம் ஸ்ரீரங்கம் கோயில்.
பன்னிரெண்டு ஆழ்வார்களும் 7 சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். முதல் சந்நிதியில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், இரண்டாம் சந்நிதியில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், மதுரகவியாழ்வார், மூன்றாம் சந்நிதியில் குலசேகர ஆழ்வார், நான்காம் சந்நிதியில் திருப்பாணாழ்வார், ஐந்தாம் சந்நிதியில் தொண்டரடிப்பொடி ஆழ்வார், ஆறாம் சந்நிதியில் திருமழிசை ஆழ்வார், ஏழாம் சந்நிதியில் பெரியாழ்வார், ஆண்டாள் எழுந்தருளியுள்ளனர்.
இராப்பத்து 7-ம் திருநாளில் பராங்குச நாயகி திருக்கோலத்தில் நம்மாழ்வார் அருள்பாலிப்பார்.
பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள தென் திசையில் 7 கோபுரங்கள் (நாழிகெட்டான் கோபுரம், ஆர்யபடால் கோபுரம், கார்த்திகை கோபுரம், ரெங்கா ரெங்கா கோபுரம் தெற்கு கட்டை கோபுரம், தெற்கு கட்டை கோபுரம் - ஐஐ, ராஜ கோபுரம்) உள்ளன. 7 உற்சவ காலங்களில் (வசந்த உற்சவம், சங்கராந்தி, பாரி வேட்டை, அத்யயநோற்சவம், பவித்ரோற்சவம், ஊஞ்சல் உற்சவம், கோடை உற்சவம்) ரங்கநாதர் குறிப்பிட்ட மண்டபங்களில் மட்டும் எழுந்தருள்வார்.
வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாக 7 சேவைகள் உள்ளன. அவை பூச்சாண்டி சேவை, கற்பூர படியேற்ற சேவை, மோகினி அலங்காரம், ரத்னாங்கி சேவை, வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாகனம், உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீராமநவமி சேர்த்தி சேவை, தாயார் திருவடி சேவை, ஜாலி, சாலி அலங்காரம் ஆகும்.
திருவிழாக்கள்
ஆடிப்பெருக்கு உற்சவத்தின்போது பெருமாள் அம்மா மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். காவிரித் தாய்க்கு அவர் சார்பில் பட்டுப் புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை போன்றவை சீதனமாக அளிக்கப்படும். வைகுண்ட ஏகாதசி 21 நாள் வைபவம், 3 பிரம்மோற்சவ விழா, மாசி மாத தெப்பத் திருவிழா, தமிழ், ஆங்கில புத்தாண்டு, சனிக்கிழமை தினங்களில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT