Published : 26 Jun 2014 12:00 AM
Last Updated : 26 Jun 2014 12:00 AM
ராமராஜ்யம் ஏற்பட வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தவரின் வாரிசுகள் இப்போது ஜனநாயகம் சிருஷ்டி செய்துகொண்டிருக்கிறார்கள். ராமர் புதுசாக ராஜநீதி எதுவும் செய்து ராஜ்ய பாரம் நடத்தவில்லை. தன் அபிப்ராயம், தன் கார்யம் என்று சொந்தமாக எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க சாஸ்திரத்தைப் பார்த்து, பூர்விகர்களின் வழியைப் பார்த்து அந்தப்படியே பண்ணினவர் ஒருவருண்டு என்றால் அது ராமசந்திர மூர்த்திதான். மநு நாடாண்ட காலம் முதலாக தசரத சக்ரவர்த்தி வரை எந்த தர்மசாஸ்த்ர ஆட்சி முறை நடந்ததோ அதையேதான் ராமரும் பின்பற்றி நடத்திக் காட்டினார்.
தசரதர் அவருக்குப் பட்டாபிஷேகம் செய்ய உத்தேசித்தபோது தன் குமாரன் ஸர்வ ஜன அபிமானத்தையும் பரிபூர்ணமாகப் பெற்றவன், சகல யோக்யதாம்சங்களையும் சம்பூர்த்தியாகப் பெற்றவன் என்று தெரிந்திருந்த போதிலும், சபை கூட்டி ஜனங்களின் பல தரப்புக்களைச் சேர்ந்த எல்லாப் பிரதிநிதிகளின் அபிப்ராயத்தையும் கேட்டார் என்று சொல்லியிருக்கிறது. அதிலே வைதிக தர்மத்துக்கு வேறாக இருந்த மிலேச்சர்களுடைய பிரதிநிதிகளைக்கூட வரவழைத்து ஆலோசனை கேட்டாரென்று இருக்கிறது. அதுதான் நிஜமான ஜனநாயகம். அதாவது அபிப்ராயங்களைக் கேட்பதில் அவர் இவர் என்ற பேதமில்லாமல், யோக்யதாம்சம் பார்க்காமல் எல்லாருடைய பிரதிநிதிகளையும் கலந்து கொள்ளத்தான் வேண்டும். இங்கேயும்கூட referendum என்பதாக அத்தனை ஜனங்களையும் அபிப்ராயம் கேட்பது என்றில்லாமல் அவர்களுடைய பல பிரதிநிதிகளைத்தான் கேட்டிருக்கிறாரென்பது கவனத்துக்கு உரியது.
சகல ஜன பிரதிநிதிகளிடமும் அபிப்ராயம் கேட்ட பின், தசரதர், ராமர் முதலான அரசர்கள் எப்படி முடிவு எடுத்தார்கள் என்று பார்க்கவேண்டும். Policy making (கொள்கை வகுப்பது), அநேக திட்டங்களைப் போடுவது என்பதாக முடிவுகள் செய்யும்போது அங்கே ஜனநாயக சமத்வத்துக்கு இடம் தரவில்லை. ஞான, சீல, வயோவ்ருத்தர் என்று சொன்னேனே அப்படிப்பட்ட அநேக யோக்யதாம்சங்களைப் பெற்ற பரம தர்மிஷ்டர்களான மந்த்ரிகளையே மூலஸ்தம்பமாகக் கொண்டுதான் தசரதரும், அவருக்கு முன்னாலிருந்த ரகுவம்ச ராஜாக்களும், பின்னால் வந்த ரகுராமனும் முடிவுகள் எடுத்திருக்கிறார்கள்.
பலவகை ஜனங்களின் பலவித அபிப்ராயங்களையும், அவர்களில் யார் வாயையும் அடைக்காமல் உள்ளது உள்ளபடி கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும். பொது ஜன அபிப்ராயத்தை ராமர் எப்படி வெகு முக்கியமான விஷயமாகக் கேட்டறிந்து வரச் செய்தார், அதற்காக எப்படித் தன்னுடைய பிரிய பத்தினியையே தியாகம் செய்தாரென்பது நமக்குத் தெரிந்ததுதானே? இப்போதுள்ள ஜனநாயகவாதிகளில் யாராவது அப்படி ஜன அபிப்ராயத்துக்கு மதிப்புத் தருவார்களா என்று தெரியவில்லை. இதிலிருந்து அக்காலத்தில் ஜனங்களுக்கு ராஜா - ராணியைப் பற்றிக்கூட எவ்வளவு ஸ்வதந்த்ரமாக வாய்விட்டு அபிப்ராயம் சொல்ல உரிமை இருந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. அதுதான் உண்மை ஜனநாயகம்.
ஒரு நாய்கூட ராமரிடம் நியாயம் கேட்க நேராகத் தானே வழக்குக் கொடுத்திருப்பதாக உத்தர காண்டத்தில் வருகிறது. மநு தர்மப்படி பரிபாலனம் செய்த மநுநீதிச் சோழன் திருவாரூரிலிருந்து கொண்டு ஆட்சி நடத்திய போது ஒரு மாடு ஆராய்ச்சி மணியை இழுத்துத் தன் கஷ்டத்தை விண்ணப்பித்துக்கொண்டது என்று கேட்டிருக்கிறோம். இப்படித் தங்கள் மனசிலிருப்பதை எவரும் ராஜாங்கத்தின் உச்ச ஸ்தானத்துக்குத் தெரிவிக்க இடம் தருவதுதான் ஜனநாயகம்.
ஆனால் இந்த அபிப்ராய சுதந்திரத்துக்கும், அதைச் சொல்லிக்கொள்ளும் சுதந்திரத்துக்கும் அதிகமாக ஜனங்களுக்கு உரிமை கொடுப்பது தேச நலமல்ல. ஆனபடியால் நிஜமான ஜனநாயகமும் அல்ல. ஜனங்களுக்கு வித்யாசம் பார்க்காமல் நல்லது செய்வதற்குத்தான் ஜனநாயகம். ஜனசமூஹம் முழுதும் சேர்ந்தே அமைந்த தேசத்துக்கு நன்மை செய்வதுதான் ஜனநாயகம் என்றால், அவர்கள் அபிப்ராயத்தை அறிவதோடு நிற்காமல், அந்த அபிப்ராயங்களின் மேல் முடிவு எடுக்கிற தகாத பாரத்தையும் விஷயம் தெரியாத அவர்கள் மேலோ அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் விஷயம் தெரியாத பிரதிநிதிகளின்
மேலோ போடுவது ஜனநாயகமே ஆகாது. இதனால்தான் சகல ஜனங்களின் அபிப்ராயங்களையும் ஒரளவு மறைவில்லாமல் தெரிந்துகொண்ட பின், முடிவு எடுப்பது என்பதற்கு நிரம்பத் தகுதி வாய்ந்தவர்களை மட்டுமே ராம ராஜ்யத்துக்கு, தர்ம ராஜ்யத்துக்கு அடிகோலியவர்கள் துணை கொண்டார்கள்.
முடிவெடுக்கும் நிர்வாகிகள் உள்பட எவருக்கும் தகுதியே நிர்ணயிக்காமல் அரசியல் நிர்ணயச் சட்டம் என்று ஒன்றைச் செய்து அதில் ஒவ்வொரு விதியாக கான்ஸ்டிட்யுவென்ட் அஸெம்ப்ளியில் பாஸ் செய்துகொண்டிருக்கிற இப்போது நான் செய்யக்கூடியது பழைய முறையை எடுத்துக்காட்டுவதுதான்.
'ராமாயணமா? அந்த த்ரேதாயுகத்து சமாசாரம் இப்போது சரிப்படாது' என்று ஒதுக்கி விட்டுப் போகாமலிருக்கத்தான், 'இது த்ரேதா யுக சமாசாரம் மட்டுமில்லை. ஆயிரம் வருஷம் முந்திகூட சரித்திர ஆசிரியர்களெல்லாம் பாராட்டும்படி சிறந்த அரசியலறிவுடன் ஆட்சி நடத்திய சோழர் காலத்திலும் அந்த மாதிரியே ஜனநாயக தத்துவம், திறமையான தூய்மையான நிர்வாகம் என்ற இரண்டையும் எந்த அளவில், எந்த விதத்தில் இணைக்கலாமோ அப்படிச் செய்திருக்கிறார்கள்' என்று காட்ட ஆசைப்பட்டேன். வெள்ளைகாரர்கள்
தங்களுடைய எழுதப்படாத சட்ட சாசனத்தைப் (unwritten constitution) பற்றி பெருமைப்படுகிறார்களென்றால், இந்தத் தமிழ் தேசத்தில் பிறந்த நமக்கோ ஆயிரம் வருஷத்துக்கு முன்பே உருவான எழுதப்பட்ட சட்ட சாசனம்) (written constitution) இருக்கிறது, நன்றாகக் கல்லிலேயே பொறிக்கப்பட்ட சிலா சாசனமாக இருக்கிறது என்று அதைவிடப் பெருமையாகக் காட்ட முடியும் என்பதற்காகக் கதை சொன்னேன்.
அது பழம் பெருமையாக மட்டும் நின்றுவிடாமல், ஆயிர வருஷத்துக்கு முந்திய சாசனமே இன்றைய சாசன கர்த்தர்களுக்கும் வழிகாட்டியாவதற்கு ராமசந்திர மூர்த்தி கிருபை செய்வாராக!
தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT