Published : 28 Aug 2022 05:40 AM
Last Updated : 28 Aug 2022 05:40 AM

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம் - செப்டம்பர் 7-ம் தேதி பெரிய தேர்பவனி

பேராலயத்தின் அருகில் புனிதக் கொடியேற்றுவதற்காக தயார் நிலையில் உள்ள கொடிக் கம்பம்.

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நாளை (ஆக.29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி செப்.7-ம் தேதி நடைபெற உள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா நாளை (ஆக.29) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, பேராலய முகப்பிலிருந்து நாளை மாலை 5.45 மணிக்கு கொடி ஊர்வலம் தொடங்கி, கடற்கரைச் சாலை, ஆரிய நாட்டுத் தெரு வழியாக மீண்டும் பேராலய முகப்பை வந்தடையும்.

பின்னர், தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் கொடியை புனிதம் செய்து வைக்க கொடியேற்றம் நடைபெறும்.

ஆண்டுப் பெருவிழாவில், ஆக.30-ம் தேதி முதல் செப்.7-ம் தேதி வரை நவநாட்களில் தினமும் காலை 5 மணிக்கு பேராலயத்திலும், காலை 6 மணிக்கு மாதா குளத்திலும் தமிழில் திருப்பலி நடைபெறும். பேராலய கீழ்கோயிலில் காலை 6 மணிக்கு தமிழ், 7.15 மணிக்கு ஆங்கிலம், காலை 8.45 மணிக்கு மராத்தி, 10.15 மணிக்கு கொங்கனி, மதியம் 12.15 மற்றும் பிற்பகல் 3 மணிக்கு தமிழ் ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெறும்.

தொடர்ந்து, செப்.7-ம் தேதி மாலை 5.15 மணிக்கு பேராலய கலையரங்கத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலியுடன், இரவு 7.30 மணிக்கு பெரிய தேர்பவனி நடைபெற உள்ளது. செப்.8-ம் தேதி மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார் தலைமையில் உதவி பங்குத்தந்தைகள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x