Published : 23 Aug 2022 07:26 AM
Last Updated : 23 Aug 2022 07:26 AM
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, நேற்று காலை சண்டிகேசுவரர் சந்நதியில் இருந்து கொடி புறப்பட்டு, கோயிலை வலம் வந்தது. தொடர்ந்து, கொடி மரம் அருகே உற்சவ விநாயகர், சண்டிகேசுவரர், அங்குசத் தேவர்எழுந்தருளினர். கொடி ஸ்தாபித்தல் பூஜைகளுக்குப் பின்னர், கொடியேற்றம் நடந்தது. இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் இன்று (ஆக. 23) முதல் வரும் 29-ம் தேதி வரை தினமும் காலை வெள்ளிக் கேடகத்திலும், இரவு சிம்மம், பூத, கமல, ரிஷப, மயில், குதிரை, யானை வாகனங்களிலும் வீதி உலா நடைபெறும். வரும் 27-ம் தேதி மாலை கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறும். வரும் 30-ம் தேதி காலை அலங்கரிக்கப்பட்ட தேரில்விநாயகர் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலையில் தேரோட்டமும் நடைபெறும். அன்று மாலை விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள் பாலிப்பார்.
வரும் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலை தங்க மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளல், அங்குசத் தேவருக்கு தீர்த்தவாரி, பிற்பகல் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT