Published : 13 Oct 2016 12:34 PM
Last Updated : 13 Oct 2016 12:34 PM

வார ராசிபலன் 13-10-2016 முதல் 19-10-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் 11-ல் கேதுவும் உலவுவது நல்லது. முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் ஈடேறும். முக்கியஸ்தர்களின் சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் உண்டாகும். வியாபாரம் பெருகும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். ஆன்மிக, அறநிலையப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் மனத்தெளிவு பெறுவார்கள்.

எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வயிறு, முதுகு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் வேலைப்பளு கூடும். 14-ம் தேதி முதல் சுக்கிரன் 8-ம் இடத்திற்கு மாறுவதால் எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். 17-ம் தேதி முதல் சூரியனும் புதனும் 7-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சகிப்புத் தன்மை தேவை. கூட்டுத் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 14, 19.

திசைகள்: கிழக்கு, வடக்கு, வடமேற்கு, தெற்கு.

‎நிறங்கள்: மெரூன், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு.

எண்கள்: 1, 5, 7, 9.‎

பரிகாரம்: குருவுக்கும் சனிக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்யவும்.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. 14-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ம் இடத்திற்கு மாறுவது குறை. 17-ம் தேதி முதல் சூரியனும் புதனும் 6-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். தெய்வப்பணிகளில் நாட்டம் அதிகமாகும். எதிரிகள் அடங்கியே இருப்பார்கள். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். மக்களால் அனுகூலம் ஏற்படும். வார முன்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும்.

அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகரிக்கும். மந்திர, தந்திர, இயந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் மருத்துவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். இயந்திரப்பணியாளர்கள், பொறியாளர்கள் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது. பயணத்தின்போதும் விளையாட்டுகளில் ஈடுபடும்போதும் தீ, மின்சாரம், ஆயுதங்கள் பக்கம் நெருங்கும்போதும் பாதுகாப்பு தேவை. உடன்பிறந்தவர்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் பிரச்னைகள் சூழும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 14, 19

திசைகள்: வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 7

பரிகாரம்: சுப்பிரமணிய புஜங்கம், கந்தசஷ்டிகவசம் படிப்பதும் கேட்பதும் நல்லது.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 4-ல் புதனும் 5-ல் சுக்கிரனும் 6-ல் சனியும் உலவுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். திரவப்பொருட்கள் லாபம் தரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். புதியவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் ஏற்படும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பு கூடும். வியாபாரிகள் லாபம் பெறுவார்கள்.

எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் கணிதத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். தரகர்களுக்கு அதிக கமிஷன் கிடைக்கும். 14-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடத்திற்கு மாறுவதால் குடும்பத்தில் சங்கடம் ஏற்படும். 17-ம் தேதி முதல் சூரியனும் புதனும் 5-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. மனத்தில் சலனம் ஏற்படும். பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 14, 16.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.

நிறங்கள்: புகை நிறம், வெண்மை, பச்சை, நீலம்.

எண்கள்: 4, 5, 6, 8.

பரிகாரம்: விநாயகரை வழிபடவும். ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டகம், ஸ்ரீசூக்தம் சொல்லி மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.



கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும், 4-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. வார ஆரம்பத்தில் சந்திரன், கேதுவுடன் கூடி 8-ல் உலவுவதால் சிறு சங்கடம் ஏற்படும். மனத்தில் அமைதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிவரும். 16-ம் தேதி முதல் நல்ல திருப்பம் ஏற்படும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பணவரவு சற்று அதிகரிக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள்.

கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலபுலங்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். 3-ல் குருவும், 5-ல் சனியும் இருப்பதால் மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. தொழிலதிபர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும். உடன் பணிபுரிபவர்களை நம்பி உங்கள் பொறுப்புக்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். பரிச்சயமில்லாதவர்களிடம் விழிப்புடன் இருக்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 14 (பிற்பகல்), 19.

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, ஆரஞ்சு, இளநீலம், சிவப்பு.

எண்கள்: 1, 6, 9.

பரிகாரம்: நாகரை வழிபடவும்.



சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் குருவும் 3-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. பேச்சில் திறமை வெளிப்படும். குடும்பநலம் திருப்தி தரும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழிபிறக்கும். சுப காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் பங்கு கொண்டு மனம் மகிழ்வீர்கள். முக வசீகரம் கூடும். உடல் நலம் சீராகும். 14-ம் தேதி முதல் சுக்கிரன் 4-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. புதிய பொறுப்புக்களும் பதவிகளும் கிடைக்கும்.

ஆடை, அணிமணிகள் சேரும். 17-ம் தேதி முதல் சூரியன் 3-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. புதன் 3-ம் இடத்திற்கு மாறுவது குறை. அரசாங்கம் சம்பந்தமான காரியங்கள் ஈடேற வழிபிறக்கும். தந்தையால் நலம் ஏற்படும். வியாபாரிகள் விழிப்புடன் இருப்பது நல்லது. வாரப் பின்பகுதியில் தொழில்ரீதியாக நல்லதொரு திருப்பம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல், ஊகவணிகத் துறைகள் லாபம் தரும். அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கவே செய்யும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 17, 19.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 9.

பரிகாரம்: துர்க்கையையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது. நாக வழிபாடு நலம் தரும்.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் சனியும், 6-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். ஜன்ம ராசியில் புதன் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் புரிவார். எதிர்ப்புக்களை வெல்லும் சக்தி பிறக்கும். ஆன்மிக, அறநிலையப்பணிகளில் ஈடுபாடு கூடும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். கலைஞர்களது நோக்கம் நிறைவேறும். மாதர்களது எண்ணம் ஈடேறும். ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.

உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் நிச்சயம் கிடைக்கும். இனிமையான பேச்சால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களிலும் கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். 14-ம் தேதி முதல் சுக்கிரன் 3-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. 17-ம் தேதி முதல் புதன் 2-ம் இடத்திற்கு மாறுவதும் சிறப்பாகும். சூரியன் 2-ம் இடத்திற்கு மாறுவது குறை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். பண நடமாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 14, 19.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், மெரூன், பச்சை.

எண்கள்: 5, 6, 7, 8.

பரிகாரம்: சூரியனையும் துர்க்கையையும் சுப்பிரமணியரையும் வழிபடுவது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x