Published : 20 Oct 2016 11:22 AM
Last Updated : 20 Oct 2016 11:22 AM
சிங்கப்பூரில் இன்று நடுநாயகமாக நிற்கும் கோயில்களையும், அரசாங்கக் கட்டிடங்களையும் சாலைகளையும் அமைத்த பெருமைக்குரியவர்கள் கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட கைதிகள்தான். அவர்கள்தான் இங்குள்ள கலைநயமிக்க ஆலயங்களை முதலில் உருவாக்கியவர்கள். 1827-ல் முதன்முதலில் கட்டப்பட்ட மாரியம்மன் கோயிலைத் தொடர்ந்து இன்று சிங்கப்பூரில் மொத்தம் 32 இந்துக் கோயில்கள் உள்ளன. இவற்றில் பிரபலமாக உள்ள, விரல் விட்டு எண்ணக்கூடிய சில கோவில்களுள் ஒன்று ஸ்ரீவடபத்திர காளியம்மன் கோயில்!
சிங்கப்பூரில் வாழவந்த இந்தியக் குடியேறிகளுக்கு ஆறுதல் அளிப்பதற்காக 1830-ல் உருவான சக்தித் திருக்கோயில்தான் ஸ்ரீ வடபத்திர காளியம்மன் திருக்கோயில். ‘கம்போங் கிர்பாவ்’ பகுதியில் இருந்த கிணறுகள் அந்தப் பகுதி மக்களுக்குக் குறைவின்றிக் குடிநீரை வழங்கின. இதனால் ‘தண்ணீர்க் கம்பம்’ என்று அந்த இடம் பெயர் பெற்றது. தண்ணீர் சுத்திகரிப்புக் கம்பத்தைச் சேர்ந்த பணியாளர்கள் ஆரம்பத்தில் இந்தக் கோயிலை உருவாக்கினர்.
ஆஞ்சநேயரும் கருடாழ்வாரும்
சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள இக்கோயிலுக்குள் நுழைந்தபோது, வாயிலின் இருபுறமும் ஆஞ்சநேயரும் ஸ்ரீ கருடாழ்வாரும் பிரம்மாண்ட உருவத்தில் நின்று நம்மை வரவேற்றனர். தமிழ்நாட்டு மேளமும் நாகஸ்வரமும் இசையில் ஆர்ப்பரித்து நம் செவிகளை ஈர்க்க, கோயிலுக்குள் அக்கினி கொழுந்து விட்டு எரிய, யாகம் நடந்து கொண்டிருந்தது.
பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன் ஆகியோரைத் தரிசித்த பிறகு மூலவராக வீற்றிருக்கும் அன்னை வடபத்திரகாளியம்மனைத் தரிசித்து, மனமுருகித் தொழுதோம். காளியைத் தவிர அருகாமைச் சந்நிதியில் ராமர் சந்நிதி மற்றும் ஜெய வீர ஆஞ்சநேயரையும் கண்டு வியப்படைந்தோம். இது எங்குமே காணக் கிடைக்காத ஒன்று!
வைணவப் பிரிவைச் சார்ந்த திருமாலின் அவதாரமான ஸ்ரீராமர் அவரின் தாசனான ஸ்ரீஆஞ்சநேயர் மற்றும் சைவப் பிரிவைச் சார்ந்த ஸ்ரீவடபத்திர காளியம்மன் ஆகியோர் ஒரே கோயிலில் சம அந்தஸ்தில், அருகருகே உள்ள சன்னிதிகளில் உள்ளனர்.
தமிழ் கிராமத் தெய்வங்கள்
தமிழ்நாட்டில் மண் மணக்கும் கிராமங்கள் போற்றும் தெய்வங்களாகக் குறிப்பிடப்படும் பெரியாச்சி அம்மன், மதுரை வீரன், முனீஸ்வரன் ஆகியோர் தனியாக அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். தவிர, நாகேஸ்வரி பாம்புக் குடை நிழலில் வீற்று, தன்னை நாடி வருவோரின் நாக தோஷம் மற்றும் சகலவிதமான தோஷங்களையும் போக்கி, விடுதலை அளிக்கிறாள்.
சப்த மாதா ஒரு பக்கம் காட்சியளிக்க, தனிச் சந்நிதிகளில் துர்க்கையம்மன் மற்றும் சனீஸ்வரனும் காட்சி கொடுத்து பக்தர்களின் கவலைகளைப் போக்குகிறார்கள்.
சிங்கப்பூரில் உள்ள 32 ஆலயங்களில் சிற்பங்கள், ஓவியங்கள் ஏராளமாக உள்ள கோயில் இது. சுவாமி சந்நிதிகளின் வெளிப்புற மேற்சுவரில் இராமாயணம், ஸ்ரீகிருஷ்ணர் வரலாறு, சுதைச் சிற்ப வடிவில் வண்ணக் காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
குடும்பத்தில் குழப்பம் நீங்கவும், வாழ்வில் எதிர்ப்புகள் நீங்கி சகல வளங்களும் பெருகவும், பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெறவும், பிறந்த குழந்தை ராமர், ஆஞ்சநேயரைப் போல நற்குணங்கள், வலிமை, வெற்றி, புகழ் ஆகியவற்றைப் பெறவும் வேண்டி இங்கு வந்து பக்தர்கள் பிரார்த்திக்கிறார்கள். சகல தோஷங்களையும் விலக்கி அருள்கிறாள் ஸ்ரீநாகேஸ்வரி. ஸ்ரீபெரியாச்சி, மதுரை வீரன் மற்றும் முனீஸ்வரன் ஆகியோர் மக்களின் அனைத்துக் கவலைகளையும் போக்கி அருள்கிறார்கள்.
சிங்கப்பூருக்குச் சுற்றுலா செல்பவர்கள் தரிசிக்கத் தவறவிடக் கூடாத ஒரு ஆலயம், ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT