Last Updated : 20 Oct, 2016 10:54 AM

 

Published : 20 Oct 2016 10:54 AM
Last Updated : 20 Oct 2016 10:54 AM

ஒளி வீசட்டும் நாச்சியார்கோயில் குத்துவிளக்குகள்

வீட்டில் நடக்கும் விசேஷமாக இருந்தாலும் சரி, அரசு சார்ந்த விழாக்களாக இருந்தாலும் சரி, விழா மேடையில் நிச்சயம் இடம்பெறுவது வி.ஐ.பி. குத்துவிளக்காகத்தான் இருக்கும். இந்த விளக்குகள் இரும்பு, வெள்ளி, பஞ்சலோகம் என்றிருந்தாலும் பித்தளையில் செய்த விளக்குகளுக்குத்தான் மவுசு அதிகம். அதிலும் நாச்சியார்கோயிலில் செய்யப்படும் பித்தளை குத்துவிளக்குகளுக்குத் தெய்வீகத் தன்மை உண்டு என்னும் நம்பிக்கையும் மக்களிடம் உண்டு.

அப்படி விளக்குகள் என்றாலே நம் மனதில் முதலில் நினைவுக்கு வரும் நாச்சியார்கோயிலில் செய்யப்படும் விளக்குகளைப் பற்றியும் அதைத் தயாரிக்கும் கலைஞர்களைப் பற்றியும் ஓர் ஆவணப்படத்தைத் தயாரித்து அதை யூடியூபில் பதிவேற்றியிருக்கிறார் நூற்றுக்கணக்கான ஆவணப்படங்களை எடுத்திருக்கும் சுரேஷ் கிருஷ்ணசாமி.

ஒவ்வொரு இந்துப் பண்டிகைகளிலும் வழிபாட்டு முறைகளிலும் விளக்குகளின் முக்கியத்துவம் அதிகம். அதனாலேயே நாச்சியார்கோயிலில் தயாராகும் குத்துவிளக்குகள் அதிகம் பிரசித்தி பெற்றதாகக் கருதப்படுகிறது.

குத்துவிளக்கின் மகிமை

“தமிழக மாநிலத்தின் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தின் அருகில் உள்ளது இந்த நாச்சியார்கோயில். இங்கு தயாரிக்கப்படும் குத்துவிளக்குகள் அனைத்தும் வார்ப்பு முறையில் ஆகம விதிப்படி செய்யப்படுகின்றன. இந்த விளக்குகளைச் செய்யும் கலைஞர்களின் நகாசு வேலைப்பாடுகள் மிகவும் நுணுக்கமானவை. இதன் செய்முறையும் மற்ற இடங்களில் செய்யப்படும் தயாரிப்புகள்போல் இருக்காது.

தனித்துவம் மிகுந்த நாச்சியார்கோவில் குத்துவிளக்கு செய்பவர்கள் தங்களுடைய தயாரிப்புகளுக்கான காப்பீட்டு உரிமையை 2010-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி பெற்றிருக்கின்றனர்” என நாச்சியார்கோயில் விளக்குகளுக்குப் பின்னணியான பல செய்திகள் இந்த ஆவணப்படத்தில் நமக்குத் தரிசனமாகின்றன.

மண்ணின் பெருமை

குத்துவிளக்கு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் கலைஞர்களைப் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படுத்தும் இந்த ஆவணப்படத்தில் அந்தத் தொழிலில் இருக்கும் நுட்பமான பல விஷயங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. அதில் முக்கியமானது இந்தத் தொழிலாளிகள் வார்ப்புக்காகப் பயன்படுத்தும் மண். இந்த மண்ணுக்காகவே இந்தப் பகுதியில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக இவர்கள் குடியிருக்கக் கூடும் என்னும் தகவலும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

“காவிரி ஆற்றின் வண்டல் மணலும் களிமண்ணும் இவர்களின் வார்ப்புத்தொழிலுக்கு உதவியாக இருந்தன என்பதனால், குமரி மாவட்டத்திலிருந்து 19-வது நூற்றாண்டில் இவர்கள் நாச்சியார்கோயிலில் குடியேறினர் என்று கூறப்படுகிறது” என்கிறார் சுரேஷ் கிருஷ்ணசாமி.

கைவினையா, இயந்திரமயமா?

“வளரும் அடுத்த தலைமுறையினரின் அதிருப்தி, வருமான நெருக்கடி, சந்தையின் ஏற்றத்தாழ்வு ஆகிய காரணங்களால் காப்புரிமை பெற்றிருந்தாலும் இந்தத் தொழில் நொடிந்து போய்தான் உள்ளது. இயந்திரத்தால் செய்யப்படும் குத்துவிளக்குகள் விலை குறைவாக விற்கப்படுகின்றன. பாரம்பரியமான இந்தத் தொழிலை விஞ்ஞான வளர்ச்சி வீழ்த்தியுள்ளது. இதை முறியடிக்க ஒவ்வொரு வீட்டிலும் நாச்சியார்கோவிலில் செய்யப்படும் குத்துவிளக்குகள் ஒளிவீச வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே இந்த ஆவணப்படத்தை தயாரித்தேன்” என்றார் சுரேஷ் கிருஷ்ணசாமி.