Published : 29 Sep 2016 11:09 AM
Last Updated : 29 Sep 2016 11:09 AM
சுவாமி விரஜானந்தர், சுவாமி விவேகானந்தரிடம் 1897-ல் துறவறம் ஏற்றவர். அப்பொழுது அவருக்கு வயது இருபத்து மூன்று. கடுமையான தவ வாழ்க்கை வாழ்ந்தவர். ஒருமுறை சுவாமி விவேகானந்தர் விரஜானந்தரிடம், “நீ உன் முக்திக்கு மட்டும் பாடுபட்டாய் என்றால் நிச்சயம் நரகத்தைத்தான் அடைவாய். ஆனால் பிறரின் விடுதலைக்குப் பாடுபட்டால் இந்த நொடியிலேயே விடுதலை அடைவாய்” என்றார். சுவாமிஜியின் வார்த்தைகள் அவரின் மனதில் ஆழப் பதிந்தன.
ஒருநாள் சுவாமிஜியிடம் விரஜானந்தர் பணிவோடு சொன்னார்: “நான் எங்காவது தனித்திருந்து வீட்டுக்கு வீடு பிச்சையேற்று முழுமையாக ஆன்மிகச் சாதனைகள் புரிய விரும்புகிறேன்.” சுவாமிஜியோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை. “என் சீடர்கள் தங்களின் சொந்த ஆன்மிகப் பயிற்சிகளைவிடப் பிறருக்குத் தொண்டு செய்வதில் நாட்டம் கொள்வதையே நான் விரும்புகிறேன்” என்றார். சுவாமிஜியின் சொற்கள் விரஜானந்தருக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டின.
இமயத்தின் மடியில் தனிமையான ஆசிரமத்தில் சுவாமி விரஜானந்தர் தங்கியிருந்தார். அங்கிருந்த மாமரங்களில் பழங்கள் பழுத்திருந்தன. உதவியாளர்களிடம் எல்லாப் பழங்களையும் பறித்துக்கொண்டு தன் சமையலறைக்குக் கொண்டுவரச் சொன்னார். கூரையைத் தொடும்வரை அங்கே மர அடுக்குகள் இருந்தன. நிறைய அட்டைப் பெட்டிகளும் இருந்தன. அவரே பழங்களையெல்லாம் வகை வகையாகப் பிரித்தார். பழுத்தவை, சற்றுக் காய்களாக இருப்பவை, நன்றாகக் கனிந்தவை என்று பிரித்து அட்டைப் பெட்டிகளில் அடுக்கினார்.
அப்பொழுது அங்கே வந்தார் மடத்தின் பொதுச் செயலாளர் மாதவானந்தர். விரஜானந்தர் செய்வதை வியப்போடு பார்த்தார். உடனே “இந்தப் பழங்களையெல்லாம் பிரிக்கச் சொன்னால் உதவியாளர்கள் கனிந்த பழங்களையெல்லாம் அழுகியவை என்று தூக்கி எறிந்துவிடுவார்கள். அதனால்தான் நாள்தோறும் காலையில் உணவுக்குப் பின் இதை ஒரு கடமையாகச் செய்கிறேன். நாம் எல்லாவற்றிலும் மிகச் சிக்கனமாக இருக்க வேண்டும்” என்றார்.
கல்கத்தாவிலிருந்து ஒரு நாள் இளம் பக்தர் வந்தார். சுவாமிகள் தன் அருகில் அங்கு வருகிற விருந்தினர்களுக்கும் சாதுக்களுக்கும் தருவதற்காக அருமையான மாம்பழங்களை வைத்திருப்பதையும் தனக்கென்று அழுகிப்போகும் நிலையில் இருப்பதை வைத்திருந்ததையும் பார்த்தார். உடனே சில நல்ல பழங்களை விரஜானந்தருக்காகத் தட்டில் எடுத்துவைத்தார். ஆனால் சுவாமிகள் பக்தரின் தந்திரத்தைக் கண்டுபிடித்துவிட்டார். பழையபடி பழங்கள் மாறின. மன வருத்தத்தோடு மற்ற துறவிகளிடம் அந்தப் பக்தர் சொன்னார்: “என்ன கொடுமை. சுவாமிகளை ஒரு நல்ல மாம்பழத்தைச் சாப்பிட வைப்பதற்குக்கூட முடியவில்லையே.”
பிறர் வேண்டாமென்று தூக்கியெறிவதைக்கூட சுவாமிகள் ஏற்றுக்கொள்ளத் தயங்கியதில்லை. அவ்வளவு சிக்கனம். தேவையான மருந்துகள், பொருள்களை வாங்கி அனுப்பச் சொல்லிச் சில சமயம் அவருடைய உதவியாளர் கல்கத்தாவிலிருந்த பக்தர்களுக்குக் கடிதம் எழுதுவார். ஆனால் அந்தக் கடிதத்தையும் சுவாமிகள் கவனமாகச் சரிபார்ப்பார். “கவனமாக இரு. பக்தர்கள் தாங்கள் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தில் இவற்றையெல்லாம் வாங்கி அனுப்புகிறார்கள். நம் அவசியத் தேவைக்குரியதை மட்டுமே பெற வேண்டும்” என்பார்.
கல்கத்தாவைச் சேர்ந்த அதே இளம் பக்தருக்கு ஒரு கடிதம் எழுதினார் சுவாமிஜி. அங்கிருந்து ஆசிரமத்துக்கு வரும் ஒருவரிடம் நான்கு தேங்காய்களைக் கொடுத்தனுப்புமாறு கூறியிருந்தார். மகிழ்ச்சி பொங்கத் தேங்காய்களை வாங்கினார் பக்தர். ஆனால், கொண்டு செல்ல வேண்டியவர் புறப்பட்டுப் போய்விட்டார். பக்தரோ அவற்றைச் சிறுசிறு பொட்டலங்களாக் கட்டிப் பதிவஞ்சலில் அனுப்பிவிட்டார். எட்டுப் பொட்டலங்கள். பிரித்துப் பார்த்ததும் சுவாமிகளுக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. அடுத்த வராம் பக்தருக்கு விரஜானந்தரிடமிருந்து கடிதம் போனது. பிரித்துப் பார்த்த பக்தர் பதறிப்போனார். என்ன எழுதியிருந்தார் சுவாமிஜி?
“தேங்காயை எடுத்து உன் தலையில்தான் உடைக்க விரும்புகிறேன். நான்கு தேங்காய்கள்தான் தேவை. நீயோ எட்டுத் தேங்காய்களை அனுப்பியிருக்கிறாய். தேங்காயின் விலையைவிட அனுப்பிய செலவு பத்து மடங்கு.” தேவையற்ற செலவை முற்றும் தவிர்த்தவர் விரஜானந்தர்.
1943-ம் ஆண்டு வங்கத்தில் கடும் பஞ்சம். அங்கிருந்த சீடருக்கு சுவாமிகள் கடிதம் எழுதினார். “பூசைகளையெல்லாம் குறைத்துவிடு. அவற்றுக்குரிய செலவுத் தொகையைச் சேகரித்துப் பட்டினியில் வாடுவோர்க்கு உணவிடு. எவரும் உண்ணாமல் செல்லக் கூடாது. நிறைய கிச்சடி செய். அன்னை சாரதாதேவியாருக்கு நிவேதனம் செய்துவிட்டு ஏழை, எளிய திக்கற்றவர்கள் வடிவிலிருக்கும் கடவுளுக்குப் பகிர்ந்தளி.”
செலவைச் சுருக்கு. பிறர் பட்டினியைப் போக்கு என்பதுதான் சுவாமிகள் கருத்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT