Published : 05 Jun 2014 10:02 AM
Last Updated : 05 Jun 2014 10:02 AM
நதி நீர் பிரச்சினைகள் 21-ம் நூற்றாண்டில் மோசமான வடிவத்தை எட்டியிருக்கின்றன. புத்தர் வாழ்ந்த அந்தக் காலத்திலும் நதி நீர் பிரச்சினை இருந்தது. அது பெரிய சூழலியல் பிரச்சினையாகவும் இருந்தது. ஆனால் அதற்கான தீர்வைக் கண்டறிந்ததில்தான் புத்தர் துறவறம் மேற்கொண்டதற்கான காரணமும் அடங்கியிருக்கிறது.
புத்தர் பிறந்த சாக்கிய நாட்டு எல்லையில் கோலியர்களின் நாடு இருந்தது. கோலியர்களும் சாக்கியர்களுக்குச் சொந்தம் தான். இரண்டு பகுதிகளுக்கும் இடையே ரோகிணி ஆறு ஓடியது. இப்போதும் இந்த ஆறு நேபாளத்தில் தோன்றி உத்தரப் பிரதேசம் வழியாகப் பாய்கிறது.
போர் முடிவு
ரோகிணி ஆற்றின்மீது அணையைக் கட்டித் தண்ணீரைப் பங்கிட்டுக் கோலியர் களும், சாக்கியர்களும் வாழ்ந்து வந்தனர். ஒரு முறை கடும் வறட்சியும் பஞ்சமும் வந்தது. ஆற்றில் நீர் குறைந்தது. கிடைத்த நீரை யார் பயன்படுத்திக் கொள் வது என்பதில் இரண்டு பிரிவின ருக்கும் மோதல் வெடித்தது.
இந்தப் பிரச்சினைக்கு என்ன செய்வது என்று சாக்கியர்களின் சங்கம் கூடிப் பேசியது. கடைசியில் கோலியர்களுக்கு எதிராகப் போர் தொடுக்கச் சாக்கியர்கள் முடிவு செய்தனர். சாக்கிய சங்கத்தின் உறுப்பினரான புத்தர் (சித்தார்த்தர்) அந்த முடிவை எதிர்த்தார்.
புத்தரின் எதிர்ப்பு
“நான் அறிந்தவரை தர்மம் என்பது பகையைப் பகையால் வெற்றிகொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொள்வதுதான். அன்பால் மட்டுமே பகையை வெல்ல முடியும்" என்று சாக்கிய சங்கக் கூட்டத்தில் பேசினார். ஆனால், சாக்கிய சங்கத்தின் கூட்டு முடிவை எதிர்த்த தனிமனிதர் என்பதால், அவரது வாதம் ஏற்கப்படவில்லை.
சங்கத்தின் கூட்டு முடிவுப்படி புத்தரும் படையில் சேர்ந்து கோலியர்களுக்கு எதிராகப் போர் புரிய வேண்டும். இல்லை என்றால் சங்கம் தரும் தண்டனையை ஏற்க வேண்டும். அந்தத் தண்டனைகளில் ஒன்று தூக்கிலிடப்படவோ, நாடு கடத்தப்படவோ சம்மதிப்பது. புத்தர் மன்னரின் மகன் என்பதால், மன்னரின் அனுமதியில்லாமல் அது சாத்தியமில்லை. அப்படியானால் அடுத்த தண்டனை, அவருடைய குடும்பத்தினர் சமூகப் புறக்கணிப்பு செய்யப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள்.
என்ன தண்டனை?
இதையடுத்துப் புத்தர், “என் குடும்பத்தைத் தண்டிக் காதீர்கள். அவர்களது சொத்தையும் பறிமுதல் செய்யாதீர்கள். நான்தானே போர் முடிவை எதிர்க்கிறேன். தண்டனையை நான் ஏற்கிறேன். மன்னரிடம் முறையிடமாட்டேன்” என்றார்.
“மரண தண்டனை அல்லது நாடு கடத்தலுக்கு நீங்களே ஒப்புக்கொண்டால்கூட, தகவல் மன்னருக்குப் போகும். சங்கத்துக்கு எதிராக அவர் நடவடிக்கை எடுப்பார்" என்றார் நாட்டின் தளபதி.
“இதுதான் பிரச்சினை என்றால், நான் துறவு பூண்டு நாட்டை விட்டு வெளியேறி விடுகிறேன். அதுவும் நாடு கடத்தல்தானே” என்றார் புத்தர். வாக்குறுதி அளித்தபடியே 29வது வயதில் துறவு பூண்டு, நாட்டை விட்டுப் புத்தர் வெளியேறினார்.
எது மதிப்புமிக்கது?
அதற்குப் பிறகு ரோகிணி ஆற்றின் இரண்டு கரைகளிலும் கோலியர், சாக்கியர் படைகள் எதிரெதிராக அணிவகுத்து நின்றன. இதைக் கேள்விப்பட்ட புத்தர், போரைத் தடுத்து நிறுத்த விரும்பினார். உடனடியாக அப்பகுதிக்குச் சென்று இரண்டு படைகளுக்கும் நடுவே நின்றார்.
“ரத்தத்தைவிட தண்ணீர் மதிப்பு மிகுந்ததா? அப்படி இல்லையென்றால் சாதாரணத் தண்ணீருக்காக விலை மதிப்பற்ற ரத்தத்தைச் சிந்த எப்படித் தயார் ஆனீர்கள்?" என்று புத்தர் கேட்டார்.
இரு தரப்பினாலும் விடைதர முடியவில்லை. போரைக் கைவிட்டுப் பிரச்சினையைப் பேசித் தீர்த்துக்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT