Published : 26 May 2016 12:11 PM
Last Updated : 26 May 2016 12:11 PM

வார ராசி பலன் 26-05-2016 முதல் 01-06-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

குரு, சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். மனதில் உற்சாகம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகளும் சொத்துகளும் சேரும். சொத்துகள் மூலம் வருவாயும் கிடைக்கும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத பொருட்சேர்க்கையும் நிகழும்.

வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். 5-ல் கேதுவும், 8-ல் சூரியனும் இருப்பதால் வயிறு, கால், கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பிள்ளைகளால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு உண்டாகும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். தந்தை நலனில் கவனம் தேவை. அரசியல், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படவும். வியாபாரிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 26, 28, 31.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், பொன்நிறம், இளநீலம்.

எண்கள்: 3, 4, 6.

பரிகாரம்: விநாயக ஸ்லோகங்களைச் சொல்லவும்.



விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் புதனும், 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. குரு 10-ல் இருந்தாலும் 2, 4, 6-ம் இடங்களைப் பார்ப்பது நல்லது. ராசிநாதன் செவ்வாயும் சனியும் ஜன்ம ராசியில் வக்கிரமாக இருப்பதும் கேது 4-ல் உலவுவதும் சிறப்பாகாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது அவசியம். பொருளாதார நிலை உயரும் என்றாலும் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. தாய் நலனில் அக்கறை தேவை.

சொத்துகள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. வண்டி, வாகனங்களின் பராமரிப்புச் செலவுகள் கூடும். விவசாயிகளுக்குப் பிரச்சினைகள் சூழும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கூட்டுத் தொழிலில் அதிக கவனம் தேவை. வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகள் ஆக்கம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 26, 28, 31.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு.

நிறங்கள்: பச்சை, வெண்சாம்பல் நிறம்.

எண்கள்: 4, 5.

பரிகாரம்: சுப்பிரமணிய புஜங்கம், கந்தசஷ்டி கவசம் கேட்கவும். விநாயகரை வழிபடவும்.



தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் சூரியனும், 9-ல் குருவும் உலவுவது சிறப்பு. செல்வாக்கும் மதிப்பும் அந்தஸ்தும் உயரும் நேரமிது. குடும்ப நலம் சீராக இருந்துவரும். மனத்துணிவு கூடும். தியானம், யோகா, பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். நிர்வாகத் திறமை வெளிப்படும். பொருளாதார நிலை உயரும். எதிர்ப்புகள் குறையும். புதிய சொத்துகள் சேரும்.

சொத்துகளால் ஆதாயமும் கிடைக்கும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகள் ஆக்கம் தரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறும். வாரப் பின்பகுதியில் முக்கியமான தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தர்ம சிந்தனை வளரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 26, 28, 31.

திசைகள்: வடமேற்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு , பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 7.

பரிகாரம்: மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடுவது நல்லது.



மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும், 5-ல் சுக்கிரனும், 11-ல் செவ்வாயும், சனியும் உலவுவது சிறப்பாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கைத் துணைவராலும், தொழில் கூட்டாளிகளாலும் அனுகூலம் உண்டாகும். கலைத் துறை ஊக்கம் தரும். பணவரவு சற்று கூடும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.

எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். மாணவர்களது நிலை உயரும். பெண்களின் நோக்கம் நிறைவேறும். மக்களால் மன அமைதி குறையும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். எதிரிகள் அடங்கிப்போவார்கள். வாரக் கடைசியில் நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். குரு பலம் இல்லாததால் சுப காரியங்கள் நிகழத் தடைகளும் குறுக்கீடுகளும் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 26, 28, 31.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை. பச்சை.

எண்கள்: 5, 6, 8, 9.

பரிகாரம்: கணபதி ஜப ஹோமம் செய்வது நல்லது.



கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 7-ல் குருவும், 10-ல் செவ்வாயும் சனியும் சஞ்சரிப்பதால் சுகமும் சந்தோஷமும் பெருகும். புதிய சொத்துகள் சேரும். சொத்துகள் மூலம் ஆதாயமும் கிடைத்துவரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். நல்லவர்கள் நலம்புரிவார்கள். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். பொருளாதார நிலை வாரப் பின்பகுதியில் உயரும். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் ஆகியோர் வளர்ச்சி காண்பார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கை நிகழும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். ஜன்ம ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும் உலவுவதால் சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 28 (பிற்பகல்), 31.

திசைகள்: மேற்கு, தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு, பொன் நிறம்.

எண்கள்: 3, 6, 8, 9.

பரிகாரம்: நாகர், ஸ்ரீ நரசிம்மரை வழிபடவும்.



மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சூரியனும் சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. குரு 6-ல் இருந்தாலும் அவரது பார்வை 10, 12, 2-ம் இடங்களுக்குப் பதிவது நல்லது. பண வரவு சீராகவே இருந்து வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. குடும்ப நலம் திருப்தி தரும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் இப்போது நிறைவேறும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும்.

வியாபாரிகள் அதிக லாபம் பெறுவார்கள். பேச்சாளர்கள், அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவி வரும். நண்பர்களும் உறவினர்களும் நலம் புரிவார்கள். வாழ்க்கைத் துணைவரால் அனுகூலம் ஏற்படும். தொழில் கூட்டாளிகளால் அனுகூலம் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட தேதிகள்: மே 26, 31.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, வெண்மை, பச்சை, இளநீலம், புகைநிறம்.

எண்கள்: 1, 4, 5, 6.

பரிகாரம்: பெரியவர்களின் வாழ்த்துகளைப் பெற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x