Published : 28 Jun 2022 06:34 AM
Last Updated : 28 Jun 2022 06:34 AM
திருப்பதி: திருப்பதியில் பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தி ஊடகத்தினருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் 2 நாள் பயிற்சி முகாமை நேற்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி தொடங்கி வைத்தார். இதில் தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் பேசியதாவது:
ஏழுமலையான் கோயிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் உள்ளதால் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பை அதிகரிக்க திருப்பதி - திருமலை இடையே உள்ள மலைப்பாதையில் வேக கட்டுப்பாடு அமைக்கப்படும். வாகனங்கள் அதிவேகமாக வந்தால் உடனுக்குடன் அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாகன எண் பலகை ஸ்கேனர் அமைக்கப்படும். இதன் மூலம் விபத்து நடந்தாலோ அல்லது திருட்டு நடந்தாலோ உடனடியாக விவரம் அறிய இது உபயோகமாக இருக்கும்.
தீவிபத்தை தடுக்கும் விதத்தில் கோயில், பூந்தி தயாரிக்கும் இடம், நெய் டேங்க், கேஸ் பைப் லைன் ஆகிய இடங்களில் நைட்ரஜன் கார்ப்பெட்டுகள் அமைக்கப்படும். அலிபிரியில் இருந்து திருமலைக்கு வாகனங்கள் தங்கு தடையின்றி வர விரைவில் ஃபாஸ்ட் டேக் அமைக்கப்படும். உண்டியல் பணம் எண்ணும் இடத்தில் குண்டு துளைக்காத கண்ணாடி அமைக்கப்படும். இதேபோன்று ஏழுமலையானின் நகைகளை கொண்டு செல்லும் வாகனத்திற்கும் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்படும்.
ஏழுமலையானை கோடை காலத்தில் சராசரியாக தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இதுவே புரட்டாசி மாதத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 1 லட்சம் பக்தர்கள் தரிசிப்பார்கள். பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களில் 10 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசிப்பார்கள். இதில் கருட சேவைக்கு மட்டுமே 3 லட்சம் பக்தர்கள் வருவார்கள். ரத சப்தமியன்று ஒரு லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்வார்கள்.
தற்போது தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கின்றனர். சேவாக்கள் மூலம் 3,500 பேரும், விஐபி பிரேக் மூலம் 4 முதல் 5 ஆயிரம் பேரும், சர்வ தரிசனம் மூலம் 25 முதல் 45 ஆயிரம் பேரும், முதியோர், மாற்றுதிறனாளி பக்தர்கள் என 2 ஆயிரம் பேரும் என சராசரியாக 80 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தினமும் தரிசித்து வருகின்றனர். இதனால் ஏழுமலையானுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஓய்வு அளிக்கப்படுகிறது. இவ்வாறு தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT