Published : 26 May 2016 12:41 PM
Last Updated : 26 May 2016 12:41 PM
சிவத்தலங்களில் காரைக்கால் அம்மையார் உட்பட பல சிவ பக்தைகள் தங்களின் பக்தி சிரத்தையால் இறைவனின் பரிபூரண அருளைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் சிவ பக்தைகளின் பக்தியாலேயே சிறப்பு பெற்ற தலம், ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதிக்கரை சமீபத்திலிருக்கும் ஸ்ரீசைலம். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மல்லிகார்ஜுனரும், 18 சக்தி பீடங்களில் ஒன்றான பிரம்மராம்பா தேவியும் அருள் பாலிக்கும் ஆலயம் இது.
பக்தையால் கிடைத்த ஸ்ரீ
திரேதாயுகத்தில் வசுமதி என்னும் முனி கன்னிகை இருந்தாள். சிறு வயது முதலே சிவபக்தையான அவள், சிவனை நோக்கித் தவம் செய்தாள். அவள் தவத்தால் மகிழ்ந்த சிவன், உனக்கு வேண்டும் வரத்தைக் கேள் என்றார். உடனே வசுமதி, எனக்கு ஸ்ரீ என்னும் பெயர் வேண்டும். என் பெயரில் இந்த ஆலயம், பெரும் புண்ணிய க்ஷேத்திரமாகப் பிரசித்தி பெற வேண்டும் என வேண்டினாள். அப்படியே ஆகட்டும் என்றாராம் சிவபெருமான். அதன் காரணமாகவே இந்த ஆலயம் ஸ்ரீபர்வதம், ஸ்ரீகிரி, ஸ்ரீசைலம் எனப் பெயர் பெற்றதாம்.
பக்தைக்கும் விக்கிரகம்
கர்நாடகத்தில் வீரசைவ மரபில் பிறந்தாள் அக்கமஹாதேவி. சிறு வயதிலேயே சிவ வழிபாட்டில் ஈடுபட்டாள். ஜைன அரசனான கௌசிகன் அவளை மணம் முடிக்க ஆசைப்பட்டான். அரசனின் விருப்பத்தை எப்படி மறுப்பது என அவளின் பெற்றோர் கவலைப்பட்டனர். அரசனை வீரசைவத்துக்கு மாற்றியே மணமுடிப்பேன், நீங்கள் கவலையை விடுங்கள் எனப் பெற்றவர்களுக்கு ஆறுதல் கூறி, அரச பல்லக்கில் ஏறிச் சென்றாள் அக்கமஹாதேவி.
தன்னை விரும்பிய அரசனிடம் அக்கமஹாதேவி, “தாங்கள் வீரசைவத்துக்கு மாற வேண்டும். நான் சிவபூஜையில் இருக்கும்வரை என்னை நீங்கள் தொடவும் கூடாது” என நிபந்தனை விதித்தாள். பகல், இரவு என எப்பொழுதும் சிவபூஜையிலேயே இருக்கிறாள் அக்கமஹாதேவி. நாட்கள் பல கடந்தும் பூஜை அறையிலிருந்து அக்கமஹாதேவி வெளியே வரவில்லை.
அக்கமஹாதேவியின் மீது கொண்ட அளவு கடந்த ஆசையால் பொறுக்க முடியாமல் பூஜை அறைக்குள் நுழைந்தான் அரசன். உடனே கோபத்தோடு பூஜையை நிறுத்திய அக்கமஹாதேவி, தன் ஆடைகளைக் களைந்து தனது நிர்வாணத்தைத் தனது கூந்தலால் மறைத்து, உடல் அவயங்களின்மீது ஆசை கொண்ட அரசனை நிந்திக்கிறாள். அக்கமஹாதேவியின் உருவில் ஜைன தீர்த்தர்களை தரிசித்த அரசன் அவள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டான்.
அரண்மனையிலிருந்து வெளியேறிய அக்கமஹாதேவி ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை வணங்கி, ஆலயத்தின் அருகிலுள்ள குகையிலும், உத்தியான வனத்திலும் தவம் செய்தாள். மல்லிகார்ஜுனருடன் ஐக்கியமானாள். வீரசைவ சம்பிரதாயத்தில் சிவனை வழிபடுவதற்காகச் செய்யப்படும் சிவசரணங்கள் அக்கமஹாதேவியின் வச்சனங்கள் எனப்படுபவையே. இதனாலேயே ஸ்ரீசைல ஆலய வளாகத்தில் அக்கமஹாதேவிக்கு விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பக்தர்களால் இன்றைக்கும் பூஜிக்கப்படுகிறாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT