Last Updated : 12 May, 2016 12:06 PM

 

Published : 12 May 2016 12:06 PM
Last Updated : 12 May 2016 12:06 PM

பைபிள் கதைகள் 6: அழிக்கப்பட்ட நகரங்கள்!

உலகின் முதல் மனிதனாகிய ஆதாமிடம் கடவுளாகிய யகோவா நேரடியாகப் பேசி வந்ததுபோலவே ‘விசுவாசத்தின் தந்தை’ என்று புகழப்படும் ஆபிரகாமிடமும் கடவுள் அடிக்கடி பேசிவந்தார். ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கைத் தனக்குப் பலியாகக் கேட்டு அவரது விசுவாசத்தைக் கடவுள் சோதித்தார். கொஞ்சமும் யோசிக்காமல் தனது மகனை பலிமேடையில் ஏற்றி, அவனைக் கொன்று பலி கொடுக்கக் கத்தியை உருவியபோது, கடவுள் தடுத்தார். இதனால் ஆபிரகாம் கடவுளிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்ளும் மனிதனாக இருந்தார்.

கடவுள் வழிகாட்டலின்படி கானான் நாட்டில் தனது அண்ணன் மகன் லோத்துவுடன் வசித்து வந்த அவருக்குக் கால்நடை வளர்ப்பே முக்கியத் தொழிலாக இருந்தது. ஆபிரகாம், லோத்து இருவருக்குமே கால்நடைச் செல்வங்கள் பல்கிப் பெருகின. வேலைக்காரர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

நல்ல நோக்கத்துக்காகப் பிரிவு

இதனால் இருவரது கால்நடைக் கூட்டங்களும் வயிறார உண்ணும் அளவுக்குக் கானானின் இருந்த மேய்ச்சல் நிலம் போதுமானதாக இல்லை. மேலும் ஆபிரகாம் - லோத்து இருவரிடமும் கானானியர்களும் பெரிசியரும் மேய்ப்பர்களாக வேலையில் இருந்தனர். இதனால் இனம்சார்ந்து இவர்கள் தங்களுக்குள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதைக்கண்டு ஆபிரகாம் - லோத்து இருவருமே மனம் வருந்தினர்.

ஆபிராம் லோத்துவிடம், “சகோதரா... நம்மிருவருக்கும் இடையில் எவ்வித வாக்குவாதமும் வேண்டாம். உனது ஆட்களுக்கும் எனது ஆட்களுக்கும் இடையில் விரோதம் உருவாக நாமே காரணமாக இருக்க வேண்டாம். நல்ல நோக்கத்துக்காக நாம் பிரிந்து செல்வோம். உனக்கு விருப்பமான எந்த இடத்தையும் நீ தேர்ந்தெடுத்துக்கொள். நீ இடது பக்கமாகப் போனால் நான் வலது பக்கமாகப் போகிறேன். நீ வலது பக்கமாகப் போனால் நான் இடது பக்கமாகப் போகிறேன்” என்றார். லோத்து கண்ணீர் மல்க இதை ஏற்றுக்கொண்டார்.

யோர்தான் நதி பாய்ந்து வளங்கொழித்த சமவெளியைத் தனக்காகக் தேர்ந்தெடுத்தார் லோத்து. தனது சுற்றமும் கால்நடைகளும் சூழ அங்கே குடியேறினார். ஆபிரகாம் கானான் நாட்டிலேயே தங்கினார். காலப்போக்கில் யோர்தான் சமவெளியின் தெற்கு நோக்கி நகர்ந்த லோத்து, அங்கிருந்த சோதோம் நகரில் நிரந்தரமாகக் குடியேறினார். அதன் அருகிலேயே மற்றொரு பள்ளத்தாக்கு நகரமாக கொமோரா விளங்கியது.

காலம் உருண்டோடியது. அந்த இரட்டை நகரங்களில் வாழ்ந்த மக்கள் மிக இழிவான வாழ்வை வாழத் தொடங்கினார்கள். பாலியல் ஒழுக்கக் கேடுகள் மலிந்துபோயின. ஆபிரகாமைப் போலவே கடவுளுக்கு உகந்த மனிதராக வாழ்ந்துவந்த லோத்து இதைக் கண்டு மிகுந்த மன வேதனை அடைந்தார்.

தப்பிச் சென்ற குடும்பம்

பாவத்தின் உற்பத்திக் கேந்திரங்களாக மாறிவிட்டிருந்த சோதோம் கொமோரா ஆகிய நகரங்களை அழிக்க, கடவுள் முடிவுசெய்தார். எனவே இரண்டு தேவதூதர்களை லோத்துவிடம் அனுப்பி, சோதோம் நகரை விட்டுக் குடும்பத்துடன் வெளியேறும்படி எச்சரித்தார். கடவுளின் கருணையில் நெகிழ்ந்த லோத்து, அங்கிருந்து வெளியேறி உயிர் பிழைத்துக்கொள்ள நினைத்தாலும் தனது மனைவியால் காலம் தாழ்த்திக்கொண்டே இருந்தார்.

இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த நகரில் தனக்குச் சேர்ந்த செல்வங்கள், வீடு என அனைத்தையும் துறந்து செல்லவேண்டுமே என லோத்துவின் மனைவி கலங்கினாள். தேவ தூதர்கள், லோத்து, அவரது மனைவி, மகள்கள் ஆகியோரின் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய் சோதோம் நகரத்துக்கு வெளியே விட்டுவிட்டுக் கிளம்பிப் போனார்கள். போகும்போது “இங்கிருந்து ஓடிப்போங்கள்; எக்காரணம் கொண்டும் திரும்பிப் பார்த்துவிடாதீர்கள்” என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்கள்.

கடவுளுக்குக் கீழ்ப்படிந்து லோத்துவும் அவருடைய மகள்களும் சோதோமை விட்டு ஓட்டமும் நடையுமாகத் திரும்பிப் பார்க்காமல் வெளியேறினார்கள். பின்னால் வந்துகொண்டிருந்த லோத்துவின் மனைவியோ சோதோமை விட்டுச் சிறிது தூரம் வந்ததும், ஏக்கத்தோடு திரும்பிப் பார்த்தாள். கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போன அந்தக் கணமே அவள் உப்புத் தூணாக மாறினாள்.

இரவு முழுவதும் நடந்து, சோதோம் நகரை நீங்கி, சோவார் என்ற சிறிய நகரமொன்றின் எல்லைக்குள் லோத்துவும் அவரது மகள்களும் நுழைந்தபோது சூரியன் உதயமாகியிருந்தது. அப்போது கடவுளாகிய யகோவா, வானத்திலிருந்து நெருப்பையும் கந்தகத்தையும் சோதோம் - கொமோரா ஆகிய நகரங்களின் மேல் விழுமாறு செய்தார். அவற்றின் முழு சமவெளியையும், அங்கிருந்த மரங்கள், செடிகொடிகள், கால்நடைகள், மக்கள் ஆகியோரையும் முற்றாக அழித்துவிட்டார்.

இவ்வாறு பாவத்தில் ஊறித் திளைத்த மக்களை அவர்கள் வாழ்ந்த நகரங்களோடு அழித்த கடவுள், கீழ்ப்படியாமல் போன லோத்துவின் மனைவியை ஊப்புத் தூண் ஆக்கினார். கீழ்ப்படிந்து நடந்த லோத்துவையும் அவரது மகள்களையும் காப்பாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x