Last Updated : 26 Jun, 2014 04:18 PM

 

Published : 26 Jun 2014 04:18 PM
Last Updated : 26 Jun 2014 04:18 PM

ஆன்மிக ஆளுமை: திருமலையில் ஒலிக்கும் சிம்மக்குரல்

ஆலயங்களில் நடக்கும் திருவிழாக்களில் பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்கிறார்கள். ஆனால் கலந்து கொள்பவர்களைப்போலப் பல மடங்கு பக்தர்கள் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாத வருத்தத்தில் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் அந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு சேர்ப்பது நேரடி வர்ணனையும் நேரலையும்தான். குரலின் மூலம் செய்யப்படும் இந்த ஆன்மிகச் சேவையைக் கடந்த 40 ஆண்டுகளாகச் செய்துவருகிறார் பாதூர் புராணம் ஸ்ரீ உ.வே. ரங்கராஜாசாரியார்.

லட்சோப லட்சம் பக்தர்களைச் சென்றடையும் சிம்மக் குரலுக்குச் சொந்தக்காரராக இருக்கும் இவர், திருமலையில் ஸ்ரீநிவாச பெருமாள் கல்யாண உற்சவத்தை நேரடி வர்ணனை செய்துவருகிறார். புராண, இதிகாசக் கதைகள், திருமலை பெருமாள் குறித்த தகவல்கள், கலைகள் குறித்த அறிவு, விழாவுக்கு வந்திருக்கும் பிரபலம் குறித்த அறிமுகம், கல்யாண நிகழ்ச்சிகளை வரிசை பிசகாமல் ஒன்றன் பின் ஒன்றாகக் கூறுதல் என்று பன்முகத் திறன் இருந்தால் மட்டுமே இத்துறையில் பரிமளிக்க முடியும். இதில் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கிறார் இந்தப் பெரியவர்.

திருமலை பிரம்மோற்சவத்தை முதன் முதலில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பத் தொடங்கியபோது குறிப்பிட்ட நிறுவனங்கள் இவரையே அணுகின.

இவர், தொலைபேசி உபன்யாசமும் செய்கிறார். ஒவ்வொரு நாளும் காலை ஐந்தரை மணிக்கு அமெரிக்காவின் டெக்சாசில் இருந்து இவரது இல்லத்துக்குத் தொலைபேசி அழைப்பு வரும். காலை நான்கு மணிக்கே எழுந்து தயாராக இருக்கும் பாதூர் மாமா, தொலைபேசி மணி ஒலித்தவுடன், ஒலி வாங்கியை எடுத்து உபன்யாசத்தை ஆரம்பித்துவிடுவாராம். இதைத் துல்லியமாக ஒரு மணி நேரத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும். அதற்குப் பின்னர் சில ஆன்மிகச் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்.

இந்நிகழ்ச்சி டெக்சாசில் மட்டுமல்லாமல் வாஷிங்டன், கலிஃபோர்னியா உள்ளிட்ட பல அமெரிக்க மாகாணங்களில் ஒளிபரப்பாகிறது. ஆன்மிகப் பணியில் இடைவிடாது ஈடுபட்டுள்ள இவருக்கு அண்மையில் திருப்பதி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம் மஹாமஹோபாத்யாய என்ற உயரிய விருதினை வழங்கி கெளரவித்துள்ளது.

திருப்பதியில் குடியிருக்கும் இவரது சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாதூர். இவரது முன்னோர்கள் ராமாயண உபன்யாசங்கள் செய்துவந்ததால் `புராணம்` என்ற சிறப்புப் பட்டப் பெயர் தங்கள் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கிறார்.

பண்டிதர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த இவருக்கு வீட்டிலேயே குருமார்கள் அமைந்துவிட்டார்கள் என்று தன் குருவாக அமைந்த தந்தையைப் பற்றி நினைவுகூர்கிறார் ரங்கராஜாசாரியார். சென்னை பல்கலைக்கழகத்தில் வியாகரண சிரோண்மணி என்ற பட்டப் படிப்பை முடித்து திருச்சி அருகேயுள்ள திருப்பராய்துறை சுவாமி சித்பவானந்தாவின் ராமகிருஷ்ண தபோவனத்தில் சமஸ்கிருத பண்டிதராகச் வேலைக்குச் சேர்ந்தார் பாதூர். அந்தச் சமயத்தில் சித்பவானந்தர் திருவாசகத்தையும், பத்து உபநிஷத்துக்களையும் ஒப்பாய்வு செய்து எழுதப்பட்ட ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகத்தைப் பதிப்பித்தார். அதைப் பிழைதிருத்தும் பணி இவருக்குக் கிடைத்தது.

இந்தப் பணியின் மூலம் அந்தச் சிறிய வயதிலேயே இவ்விஷயங்களில் ஆழமான அறிவு கிடைத்தது என்பதையும் மறக்காமல் பதிவுசெய்கிறார். இவர் திருவாசகத்தை முழுவதும் படித்துப் புரிந்துகொண்டது அப்போதுதான்.

“திருமலைப் பெருமாள் உற்சவத்தின்போது முன்னால் கோஷ்டியாக திவ்யப் பிரபந்தம் சொல்லிக்கொண்டு போவார்கள். சுவாமிக்குப் பின்னால் வேதம் சொல்லிக்கொண்டு போவார்கள். அப்போது இரண்டுமே எனக்குத் தெரியாது. திவ்யப் பிரபந்தம் கற்றுக்கொள்ளத் தொடங்கி 1974-லிலேயே முடித்துவிட்டேன். அது முதல் இன்று வரை சுமார் நாற்பது ஆண்டுகளாக அனைத்து உற்சவங்களுக்கும் திவ்யப் பிரபந்தம் சொல்லும் கோஷ்டியில் இருக்கிறேன்” பிரபந்தத்தின் மீது பற்று வந்த பிறகு உரைகளையும் படித்திருக்கிறார்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் தொடங்கியபொழுது தமிழ் வர்ணனைக்குப் பொறுப்பேற்கச் சொன்னார்கள். அது முதல் பெருமாளின் நித்ய கல்யாண உற்சவத்திற்கும், திருமலை மற்றும் திருச்சானூர் பிரம்மோற்சவத்திற்கும் தமிழில் நேரடி வர்ணனை சொல்லிக்கொண்டிருக்கிறார் பாதூரார்.

மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை உபன்யாசம் செய்வதுண்டு. நாற்பது ஆண்டுகளாக இது தொடர்கிறது. “காலையில் ஒரு கோவில் என்றால் மாலை நான்கு மணிக்கு மற்றொரு கோவில், மீண்டும் மாலை ஆறு மணிக்கு வேறு ஒரு கோவில் என்ற வகையில் மார்கழி மாதத்தில் ஒரு நாளுக்கு மூன்று முறை கூட திருப்பாவை உபன்யாசம் செய்வதுண்டு” என்கிறார் பாதூரார்.

ராமானுஜர் போல இவரும் திருமலையே பெருமாள் என்று எண்ணுவதால் திருமலையில் செருப்பே அணிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x