Published : 26 May 2016 12:38 PM
Last Updated : 26 May 2016 12:38 PM
ஈசாக்-ரெபேக்கா தம்பதிக்கு இரட்டை ஆண் பிள்ளைகள் பிறந்தனர். முதலில் பிறந்தவனுக்கு ஏசா என்றும், இரண்டாவதாகப் பிறந்தவனுக்கு யாக்கோபு என்றும் பெயரிட்டனர்.
பிள்ளைகள் வளர்ந்தார்கள். ஏசா வேட்டையாடுவதில் கைதேர்ந்தவனாக இருந்தான். யாக்கோபுவோ தனது தந்தையின் ஆட்டு மந்தைகளை மேய்த்து அவற்றைப் பெருக்கினான். தனது தந்தையைப்போலவே நல்ல மேய்ப்பனாக இருந்தான்.
ஆடுகள், மாடுகள், நாய்கள் ஆகிய சாந்தமான விலங்குகளோடு பழகி வந்த காரணத்தால் யாக்கோபு அமைதியானவனாக இருந்தான். எதையும் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து, பெற்றோரின் முகம் கோணாத வண்ணம் பக்குவமாக நடந்துகொண்டான். இதனால் அவனுடைய தாய் “ யாக்கோபு புத்திமான்” என்று அவனைப் புகழ்ந்து உச்சிமுகர்ந்தாள்.
ரெபேக்காளுக்கு யோக்கோபுவை அதிகம் பிடித்ததுபோலவே ஈசாக்குக்கு ஏசாவை அதிமாகப் பிடித்தது. காரணம், ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்காமல் வெகுதூரம்வரை சென்று வேட்டையாடித் திரும்பினான். வேட்டையாடுவதில் அவனது திறமையைக் கண்டு ஈசாக் மகிழ்ந்தார். காரணம் கொடிய விலங்குகளைத் தன் வீரத்தால் வேட்டையாடி வீழ்த்திவிடுவான். ஏசாவால் வீட்டில் எப்போதும் இறைச்சியும் காட்டுத் தேனும், பழங்களும் நிறைந்திருந்தன.
உரிமையை இழந்த ஏசா
ஏசாவும் யாக்கோபுவும் தங்களது தாத்தாவாகிய ஆபிரகாம் வழியாகக் கடவுளாகிய யகோவான் தேவனைக் குறித்துத் தெரிந்துகொண்டு அவரைப் பக்தியுடன் வணங்கிவந்தார்கள்.
ஒருமுறை ஏசா வேட்டை முடித்து திரும்பிக்கொண்டிருந்தான். அம்முறை அவனுக்குச் சிறு முயலும்கூட வேட்டையில் சிக்கவில்லை. கடும் மழையால் பழங்களோ, காய்களோ கூட அவனுக்குக் கிட்டவில்லை. இதனால் வெறுங்கையுடனும் வெறும் வயிற்றுடனும் அவன் வீடு திரும்பினான். குளிரால் நடுங்கிக்கொண்டிருந்தான். சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தான். அப்போது வீட்டில் யாக்கோபு ஒரு பாத்திரத்தில் கூழ் சமைத்துக்கொண்டிருந்தான்.
ஏசா, “நான் பலவீனமாகவும் பசியாகவும் இருக்கிறேன். எனக்குக் கொஞ்சம் கூழ் கொடு” என்று யாக்கோபுவிடம் கேட்டான். ஆனால் யாக்கோபுவோ, அதற்குப் பதிலாக, “முதல் மகன் என்ற உரிமையை இன்று எனக்கு விற்றுவிட வேண்டும். அப்போதுதான் நான் உன்னைப் பசியாற்றுவேன்” என்று கூறினான்.
ஏசாவோ, “நான் பசியால் இறந்துகொண்டிருக்கிறேன். நான் இறந்து போனால் என் தந்தையின் சொத்துகள் எதுவும் எனக்கு உதவப்போவதில்லை. எனவே நான் எனது உரிமையை உனக்குத் தருகிறேன். முதலில் எனக்கு உணவு கொடு” என்றான். ஆனால் யாக்கோபு, “முதலில் உன் உரிமையைத் தருவதாகச் சத்தியம் செய்” என்றான்.
எனவே ஏசா சத்தியம் செய்தான். அதன் பிறகே யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் சூடான கூழையும் பரிமாறி அவன் வயிற்றை நிறைத்தான். பசி நீங்கி உடலில் திறன் வந்ததும் முகம் மலர்ந்த ஏசா, வேண்டிய மட்டும் கூழ் உண்டான். இவ்வாறு ஏசா, தனது பிறப்புரிமையைப் பற்றிக் கவலைப்படாமல் அதை யாக்கோவுக்கு விட்டுக்கொடுத்தான்.
தம்பியின் மீது கொடுங்கோபம்
தந்தைக்குப் பிறகு குலத்தலைவன் ஆகும் ஆசீர்வாதம் அந்நாட்களில் மூத்த மகனுக்கு அருளப்பட்டுவந்தது. இதனால் குடும்பத்தில் மூத்தவனே தந்தையின் மறைவுக்குப் பிறகு அனைத்துக்கும் உரிமையாளன் ஆனான். ஈசாக்கு முதுமையை எட்டி, கண்பார்வை மங்கியிருந்த காலத்தில் ஏசா பெற வேண்டிய குலத்தலைவன் ஆசீர்வாதத்தை அவரிடமிருந்து யாக்கோபு பெற்றுக்கொண்டான்.
குலத்தலைவன் ஆசீர்வாதத்தைப் பெறும் உரிமையை ஏற்கெனவே அவன் யாக்கோபுக்கு விட்டுக்கொடுத்துவிட்டிருந்தால் அதை நினைத்து இப்போது கடுங்கோபம் கொண்டான். தான் ஏமாற்றப்பட்டுவிட்டோமோ என ஏசா எண்ணினான். இந்த ஏமாற்றம் கொலைவெறியாக மாறியது. யாக்கோபைக் கொல்லப்போவதாகக் கோபாவேசத்துடன் கூறினான். இதைக் கேட்ட தாய் ரெபெக்கா மிகவும் கவலைப்பட்டாள்.
அவள் யாக்கோபை அழைத்து அவனிடம், “ உன் சகோதரன் ஏசா உன்னைக் கொல்லத் திட்டமிடுகிறான். எனவே நான் சொல்கிறபடி நீ செய். ஆரானில் இருக்கிற என் சகோதரனும் உன் மாமனுமாகிய லாபானிடம் ஓடிச் சென்று அவரோடு இரு. உன் சகோதரனின் கோபம் தீரும்வரை அங்கேயே இரு. கொஞ்ச காலம் ஆனதும் உன் சகோதரன் நீ செய்ததை மறந்துவிடுவான். பிறகு உன்னை இங்கு அழைக்க ஒரு வேலைக்காரனிடம் செய்தியைச் சொல்லி அனுப்புவேன். ஒரே நாளில் எனது இரண்டு மகன்களையும் நான் இழக்க விரும்பவில்லை” என்றாள்.
ஏசா 40 வயதாக இருந்தபோது கானான் தேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டான். இதை நினைத்து ஈசாக்கும் ரெபெக்காளும் ரொம்பவே வேதனைப்பட்டார்கள். காரணம், இந்தப் பெண்கள் பரலோகத் தந்தையாகிய யகோவா தேவனை வணங்காதவர்கள். அதனால் தன் கணவன் ஈசாக்கிடம், “ஏசா செய்தது போல இந்தக் கானான் தேசத்துப் பெண்களில் ஒருத்தியை யாக்கோபும் கல்யாணம் செய்தால் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது” என்று சொன்னான்.
நாட்டை விட்டுக் கிளம்பிய யாக்கோபு
அதனால் ஈசாக்கு தன் மகன் யாக்கோபை அழைத்து, “கானான் தேசத்துப் பெண்ணை நீ கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக ஆரானிலிருக்கும் உன் தாயின் சகோதரன் லாபானின் மகள்களில் ஒருத்தியைக் கல்யாணம் செய்துகொள்” என்று சொன்னார். பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வெகு தொலைவில் இருந்த ஆரானுக்குத் தன் மாமன் மகளைக் காண ஆவலுடன் புறப்பட்டார் யாக்கோபு.
நீண்ட பயணத்துக்குப் பிறகு ஆரானின் புல்வெளிகளை அடைந்தார் யாக்கோபு. அங்கே ஆட்டு மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் புதியவரான யாக்கோபுவைக் கண்டு அவரை நெருங்கி வந்து விசாரித்தார்கள். அவர்களிடம் “உங்களுக்கு லாபானைத் தெரியுமா?” என்று யாக்கோபு கேட்டார். “ ஓ...தெரியுமே. அதோ அங்கே பாருங்கள். ஆடுகளை மேய்த்தபடி தனது மந்தைகளின் நடுவே வந்துகொண்டிருக்கிறாளே அவள்தான் அவருடைய மகள் ராகேல்” என்று கூறினார்கள்.
மாமன் மகளைக் கண்ட யாக்கோபு, அவளது ஆடுகள் தண்ணீர் குடிப்பதற்காகத் தரைக் கிணற்றின் மீதிருந்த கல்லைப் புரட்டிப்போட்டார். தண்ணீரைக் கண்ட ஆடுகள் அவளுடன் ஓடி வந்து நீரைப் பருகின. தன் ஆடுகளுக்குப் பரிவுகாட்டிய இவர் யாராய் இருப்பார் என்று ராகேல் அவரது முகத்தைக் கூர்ந்து கவனித்தாள்.
அந்த முகத்தில் தனது குடும்பத்தின் சாயலைக் கண்டு புன்னகை செய்தாள். அவளது புன்னகையால் கவரப்பட்ட யாக்கோபு அவள் கைகளைக் கனிவுடன் பற்றிக் கன்னத்தில் அவளை முத்தமிட்டார். தான் யார் என்பதையும் அவளுக்குத் தெரிவித்தார். மிகுந்த பரபரப்படைந்த அவள், ஆடுகளை அங்கேயே விட்டுவிட்டு தன் வீட்டுக்குத் தலைதெறிக்க ஓடிச் சென்று தன் அப்பா லாபானிடம் நடந்ததைச் சொன்னான்.
ஆச்சரியமடைந்த லாபான், தன் மருமகனை வரவேற்கச் சென்றார். ராகேலின் ஆட்டு மந்தை யாக்கோவுக்குக் கட்டுப்பட்டு அவருடன் வந்துகொண்டிருந்தது. இதைக் கண்ட லாபானுக்கு மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. யாக்கோபு மிகச் சிறந்த மேய்ப்பன் என்பதை அந்த நொடியில் உணர்ந்து கொண்டார்.
யாக்கோபுவைக் கட்டித் தழுவித் தன் பிரியத்தை வெளிப்படுத்தினார். ராகேலைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி லாபானிடம் கேட்டபோது அவர் இன்னும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், ராகேலைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமானால் ஏழு ஆண்டுகள் தனக்காக வேலை செய்ய வேண்டுமென யாக்கோபிடம் லாபான் கூறினார். ராகேல் மீது முதல் பார்வையிலேயே காதல்கொண்ட யாக்கோபு ஏழு ஆண்டுகள் ஏழுநாட்களாய் மறைந்துவிடும் என்று நம்பினார். மாமாவுக்காக உழைக்கத் தொடங்கினார்.
ஆடுகளை மேய்த்தபடி தனது மந்தைகளின் நடுவே வந்துகொண்டிருக்கிறாளே அவள்தான் அவருடைய மகள் ராகேல்” என்று கூறினார்கள். மாமன் மகளைக் கண்ட யாக்கோபு, அவளது ஆடுகள் தண்ணீர் குடிப்பதற்காகத் தரைக் கிணற்றின் மீதிருந்த கல்லைப் புரட்டிப்போட்டார். தண்ணீரைக் கண்ட ஆடுகள் அவளுடன் ஓடிவந்து நீரைப் பருகின
ஏழு ஆண்டுகள் முடிந்தபோது லாபன் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினாரா?
(அடுத்த கதையில் காண்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT