Published : 05 Jun 2014 12:00 AM
Last Updated : 05 Jun 2014 12:00 AM
சோழ மன்னர் ஒருவரின் பெண் குழந்தைக்குப் பிறக்கும்போதே குதிரை முகமாக அமைந்துவிட்டது. சிறந்த சிவபக்தனான மன்னன் இந்தக் குறையை நீக்கியருளுமாறு வேண்டி சிவனை நோக்கித் தவம் இருந்தான். தவத்தை மெச்சியதாகக் கூறிய சிவனும், முறப்ப நாடு சென்று தாமிரபரணியில் நீராடி, அங்கு வியாழ பகவானாய் காட்சி அளிக்கும் காசிநாதரை தரிசிக்கப் பணித்தாராம்.
சோழ மன்னனும் அவ்வாறே செய்ய, இங்குள்ள நந்தி இளவரசியின் பாவங்களை நீக்கியவுடன், அவள் அழகிய மனித முகம் பெற்றாள் என்கிறது தல புராணம். இப்புராண நிகழ்வை இன்றும் பறைசாற்றும் விதத்தில் இங்குள்ள நந்தியெம் பெருமான் முகம் குதிரை முகமாகக் காட்சி அளிக்கிறது. இங்குள்ள சிவனை தரிசித்தால் பிறவியினால் ஏற்படும் குரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
முறப்பநாடு அழகிய சிறிய கிராமம். தாமிரபரணி ஆற்றின் கரையில் வியாழ பகவானாய் காட்சி அளிக்கும் கைலாயநாதர் கோயில். அருகிலேயே சிலுசிலுக்கும் அரச மரம். அற்புதமான கிராமியச் சூழலுடன் கூடிய அமைதி. கார் போன்ற வாகனங்கள் செல்ல சாலை வசதி உள்ளது.
முறப்பநாடு பெயர் காரணம்
ஆற்றுப் படுகையில் உள்ள பருக்கைக் கற்கள் நிரம்பிய மேட்டு நிலம் முரம்பு எனப்படும். அதனால் இந்நிலப் பகுதி முரம்பநாடு என்றிருந்து முறப்பநாடு என மருவி இருக்கலாம். சூரபதுமனைச் சேர்ந்த அசுரர்கள் செய்த தொல்லையைத் தாங்காத முனிவர்கள் தங்கள் துன்பத்தை முறைப்பாடாகக் கூறியதாலும் இது முறப்பநாடு என்று ஆகி இருக்கலாம் என்கிறது தல புராணம்.
தட்சிண கங்கை
வற்றாத புண்ணிய நதியாம் தாமிரபரணி ஆறு காசியில் காணப்படுவது போல வடக்கிலிருந்து தெற்கு முகமாக நீர் வழிப்போக்கைக் கொண்டுள்ளது. அதனால் இந்த இடத்திற்கு தட்சிண கங்கை என்று பெயர். இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்குச் சமம் என்று கூறப்படுகிறது. காசிக் கட்டம், சபரி தீர்த்தம் எனப்படும் ஆற்றின் இப்பகுதியில் ஆடி, தை அமாவாசை, மாதந்தோறும் கடைசி வெள்ளிக் கிழமை மற்றும் சனிக்கிழமைகளிலும் நீராடி இந்நதிக் கரையில் உள்ள சிவகாமி உடனுறை கைலாசநாதரை வழிபட்டால் வாழ்வில் பேரின்பம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சன்னதிகள்
சிவன் கோயிலான இத்திருக்கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் கொண்ட அர்ச்சை ரூபம் இருப்பதால், இவ்விடம் தசாவதார தீர்த்தக் கட்டம் என அழைக்கப்படுகிறது.
இத்திருக்கோயில் அதிகார நந்தி குதிரை முகத்துடன் காட்சி அளிப்பது சிறப்பு. வெளிப் பிரகாரத்தில் சுர தேவர், அஷ்டலஷ்மி மற்றும் 63 நாயன்மார்களும் அருளும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளனர். கன்னி விநாயகர், பஞ்ச லிங்கம், வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர் மற்றும் பைரவ சிலாரூபங்கள் காணக் கிடைக்கின்றன.
கல்வெட்டு
11-ம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசு சிறப்புற்று இருந்த காலம். பேரரசர் கிருஷ்ண தேவராயருக்குப் பின் அச்சுத தேவராயர் ஆட்சியில் ராமராயன் என்ற சிற்றரசர் இருந்தார். இவரது தம்பி விட்டலராயன் தமிழகப் பிரதிநிதியாக ஆட்சி புரிந்துவந்தார்.
தன்னை எதிர்த்த சிற்றரசர்களை வென்றுகொண்டேவந்த இவர் திருவாங்கூர் மகாராஜா மீது படையெடுக்கச் செல்லும் வழியில் முறப்பநாட்டில் தங்கினார். அவர் வைணவராக இருந்தாலும் இந்தக் கைலாயநாதர் திருக்கோவிலில் வழிபாடு செய்தார் என இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
பல மன்னர்கள் தொழுததால் மன்னர் மன்னன் ஆனார் இங்குள்ள வியாழ பகவானான சிவன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT