Published : 12 May 2016 12:17 PM
Last Updated : 12 May 2016 12:17 PM
கண்ணனுக்கு உணர்ந்தோ, உணராமலோ உதவினால் மோட்சம் நிச்சயம். கண்ணனுக்கு உதவுவது எப்படி என்று வாழ்ந்து காட்டினான் ததி பாண்டன். ததி பாண்டனுடனான கிருஷ்ணனின் லீலைகள் சுவாரஸ்யமானவை. ததி பாண்டன் வெகுளி. கள்ளம் கபடம் தெரியாதவன். சூது வாது அற்றவன். இவனைக் கண்டால் ஏதாவது சீண்டி விளையாடுவது கண்ணனின் வழக்கம்.
ஒரு நாள் ததி பாண்டன், தனது இல்லத்தில் பின்புறத்தில் மாடுகள் கட்டி இருந்த இடத்தில் கன்றுக்குட்டிகளின் கழுத்துக் கயிற்றை பிடித்து இழுத்துக்கொண்டு நின்று கொண்டு இருந்தான். அவை தன் தாய் பசு அளிக்கும் பாலுக்காக ஏங்கி கத்திக் கொண்டிருந்தன. பசுக்களின் மீதும் அவற்றின் கன்றுகள் மீதும் பாசம் கொண்டவன் கண்ணன். அவை பாலுக்காகக் கதறுவதைக் கேட்ட கண்ணன் அவற்றிற்கு பால் கிடைக்கச் செய்ய விரும்பினான். அதனால் ததி பாண்டனை விளையாட அழைத்தான்.
தன் அன்னை இக்கன்றுகள் பாலைக் குடித்து தீர்த்துவிடாமல் இருக்க கயிற்றைப் பிடித்துக்கொள்ள கூறியிருப்பதால், தான் வரமுடியாது என்றான். கண்ணன் வேறு உபாயம் கண்டுபிடித்தான். இனிப்புகளைப் பெரிதும் விரும்பும் ததி பாண்டனிடம் வைக்கோல் போருக்கு பின்புறம் இனிப்பு இருப்பதாக கண்ணன் கூறினான். எண்ணற்ற லீலைகளைச் செய்யும் கண்ணனிடம் தற்போது மாட்டிக் கொண்டு இருப்பது ததி பாண்டன்.
இனிப்புகளைச் சாப்பிட ததி பாண்டன் ஓடினான். தனது மாயா ஜாலத்தால் விதவிதமான இனிப்புகளை உண்டாக்கினான் கண்ணன். ததி பாண்டன் அந்தப் பக்கமாக ஓடியவுடன், இந்தப் பக்கம் கன்றுகளை அவிழ்த்துவிட்டான் கண்ணன். ஓடிய கன்றுகள் தன் தாய் பசுவை அடையாளம் கண்டு முட்டி முட்டி பால் குடித்தன. இதனைக் கண்ட கண்ணன் ஆனந்தமாக குழல் ஊதியபடி சென்றுவிட்டான். ததி பாண்டனின் அன்னை பால் கறக்க வந்தாள். கன்றுகள் பாலைக் குடித்துத் தீர்த்துவிட்டதால், கோபம் கொண்ட அவள் தன் மகனை நையப்புடைத்து விட்டாள். இதில் கண்ணன் மேல் ததி பாண்டனுக்கு வருத்தம். கண்ணன் வந்தால் தாயிடம் மாட்டிவிடலாம் என்று எண்ணி, தனது வீட்டுத் திண்ணையில் அமர்ந்துகொண்டான்.
தந்தேன் மோட்சம்
இந்த நேரத்தில் கண்ணன் ஓடி வந்தான். ததி பாண்டன் இல்லத்தினுள் ஒளிய இடம் தேடினான். ஆளுயரப் பானைகள் பல இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்க அவற்றில் பால், தயிர், மோர், வெண்ணெய் ஆகியவை நிரம்பி இருந்தன. கண்ணனால் அவற்றினுள்ளே நுழைய முடியவில்லை. ஆனால் ஒரு பானை மட்டும் காலியாக இருக்க, கண்ணன் உள்ளே குதித்து தன்னை மறைத்துக்கொண்டான்.
இந்த வாய்ப்புக்குத் தானே ததி பாண்டன் காத்திருந்தான். பானையின் வாய் பகுதியில் ஏறி அமர்ந்துவிட்டான் குண்டான ததி பாண்டன். கண்ணன், யசோதா அன்னை அடிக்க வருகிறாளே என்றுதானே ஓடிவந்தான். கோபிகைகளின் இல்லத்தில் இருந்த ஒரு பானையை உடைத்துவிட்டான் கண்ணன். இதனை யசோதாவிடம் சொல்லிவிட்டனர் கோபியர். அதற்குத்தான் கண்ணனைப் பிடிக்க ஓடிவந்தாள் அன்னை.
ததி பாண்டன் இல்லம் வந்த யசோதா கண்ணன் வந்தானா என்று கேட்க, இல்லை என்று செல்லிவிட்டான் ததி பாண்டன். பெண்கள் அனைவரும் சென்று மறையும் ஓசையை செவியுற்ற கண்ணன், ததி பாண்டனை, பானையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டான். அதற்கு ததி பாண்டன், கண்ணன் மகாவிஷ்ணு என்பதை தான் அறிந்ததாகவும், அதனால் தனக்கு மோட்சம் தர வேண்டும் என்று கேட்கிறான்.
கண்ணனும் தந்தேன் என்றான். அதுமட்டும் போதாது உன்னை காட்டிக் கொடுக்காத இந்த பானைக்கும் மோட்சம் தர வேண்டும் என்றான். பகவான் ஒப்புக் கொண்டார். புஷ்பக விமானத்தை வரவழைத்தான். ததி பாண்டனையும், பானையையும் தூக்கி அதில் வைத்தான். வைகுண்டம் நோக்கிச் சென்றது அந்த அதி அற்புத விமானம்.
பகவானை தன்னுள் வைத்தால் மோட்சத்திற்கு உயர்திணை, அஃறிணை பாகுபாடு ஏது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT