Published : 21 Jun 2014 05:03 PM
Last Updated : 21 Jun 2014 05:03 PM
ஸ்ரீஜகத்குரு சங்கராசார்யார் ஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகள், சிருங்கேரி சாரதாம்பாள் கோயில் கோபுரத்தில் புனித நீர் அபிஷேகம் செய்து மஹா கும்பாபிஷேகம் நிகழ்த்தினார். ஜூன் 8-ம் தேதி ஞாயிறன்று நடைபெற்ற இவ்விழாவில் 127 அடி உயரம் கொண்ட இக்கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள புனித கலசங்கள் மீது, அபிஷேகம் செய்யப்பட்டபோது, பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
முன்னதாக நரசிம்ம வனத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீஜகத்குரு சங்கராசார்யார் ஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகள், துங்கபத்ரா நதியைக் கடந்து கோவிலில் உள்ள ஸ்ரீசிருங்கேரி சாரதாம்பாளை தரிசனம் செய்தார். பின்னர் வெள்ளை கிரானைட் கல்லினால் அமைக்கப்பட்ட தோரண கணபதி ஆலயத்தில் உள்ள தோரண கணபதிக்கு வலப்புறம் கணபதி யந்திரத்தை ஸ்தாபித்தார். வலப்புறம் ஜகத்குரு விர்தா நரசிம்ம பாரதி மகாஸ்வாமிகளின் பாதுகை வைக்கப்பட்டது. இதனையடுத்து தோரண கணபதி ஆலயக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் கோபுரத்தில் உள்ள ஏழடி உயரம் கொண்ட ஒன்பது புனித கலசங்களுக்கு ஸ்ரீஜகத்குரு சங்கராசார்யார் ஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகள், பூஜை செய்தபின், உலக மக்களுக்கு நன்மை வேண்டி மகா மங்கள ஆரத்தி காண்பித்தார். இந்த மகாகும்பாபிஷேகத்தையொட்டி மாலையில் நடைபெற்ற குரு வந்தனம் நிகழ்ச்சியில், ஸ்ரீசிருங்கேரி சாரதா பீட மடத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி வி.ஆர். கெளரி சங்கர் பக்தர்களை வரவேற்றார்.
இந்திய போஸ்ட் மாஸ்டர் ஜென்ரல் ராமானுஜம் இம்மடமான சிருங்கேரி ஸ்ரீஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார் மகா சமஸ்தானம் தட்சிணாம்னய ஸ்ரீ சாரதா பீடத்தை ஸ்தாபித்த ஆதி சங்கர பகவத்பாதாள் குறித்து உரையாற்றினார். இக்கோபுரத்தை நிர்மாணித்தவர் சங்கர ஸ்தபதி.
முன்னதாக நடத்தப்பட்ட லட்ச மோதக கணபதி ஹோமம், அதிருத்திர மஹாஹோமம், கோடி குங்குமார்ச்சனை மற்றும் சகஸ்ர சண்டி மஹா யாகம் ஆகியவை உலகோர் நன்மையை வேண்டி நிகழ்த்தப்பட்டது என தனது தலைமை உரையில் ஸ்ரீஜகத்குரு சங்கராசார்யார் ஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகள் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT