Published : 20 May 2016 02:17 PM
Last Updated : 20 May 2016 02:17 PM

எட்டுச் செருக்குகள்

மண்டலத்தைக் கோலோச்சிய கொங்கு வேளிர் படைத்த காப்பியம் பெருங்கதை ஆகும். இந்தக் காப்பியத்தின் தலைவன் உதயணன் எனும் பேரரசன். ஒருநாள் அவனுடைய பட்டத்து யானை மதம் கொண்டு யாருக்கும் கட்டுப்படாமல் ஓடியது. ஒரு இடத்தில் தருமவீரர் எனும் துறவியின் தரும அறவுரைகளைக் கேட்டு அமைதியானது. பின் அரண்மனைக்குச் சென்றது. யானையைக் கண்ட உதயணன் அதன் மீதேறி அமர்ந்தான். யானை, தானாகவே தருமவீரரிடம் சென்றது. மன்னன் முனிவரைக் கண்டு வணங்கினான்.

கொங்கு

அப்போது மதம் எனும் செருக்கு பற்றி முனிவர் விளக்கிக்கொண்டிருந்தார். அறிவு, சாதி, குலம், செல்வம், வலி,வனப்பு, சிறப்பு, தவம் ஆகிய எட்டு செருக்குகள் உள்ளன என்று கூறிய அவர் அவற்றைப் பற்றி விவரித்தார்.

அறிவுச் செருக்கு

தான் பேரறிஞன் என்றும் தன்னைவிட எவரும் பெரிய அறிவாளி அல்ல என்று கருதுவதும் அறிவுச் செருக்காகும். இதனைப்போக்க, பிறர் மனத்தையே அறியும் ஞானமுடையவர்கள், கேவலி பகவான், வேத விற்பன்னர்கள் போன்றோர் முன்னர் தாம் எம்மாத்திரமென்று சிந்திக்க வேண்டும்.

குலச் செருக்கு

மற்றவர் குலத்தைவிடத் தன் குலம் உயர்ந்தது என்று எண்ணுதல் ஆகும். இதற்கு, மகாபுருஷர்களின் வம்சத்தைவிடவா நம் வம்சம் என நினைக்க வேண்டும்.

சாதிச் செருக்கு

தன் சாதிதான் சிறந்தது என நினைப்பது. இதனைக் களைய, மாமனிதர்கள் தோன்றிய சாதிகளைவிடத் தம் சாதி எம்மாத்திரம் என்று கருத வேண்டும்.

செல்வச் செருக்கு

சிறிது செல்வம் சேர்ந்து விட்டாலே, தன்னை குபேந்திரனாக எண்டணி இறுமாப்பு அடைவது. பெரும் சக்கரவர்த்திகளைவிடத் தம்மிடம் என்ன உள்ளது என எண்ணிப் பார்க்கவேண்டும்.

வீரச் செருக்கு

தான் மட்டுமே வீரன் என்று நினைப்பது வீரச் செருக்காகும்.இதனை நீக்க இவ்வுலகை ஆண்ட பேரரசர்கள், மூவுலகையும் ஆளும் ஜின பகவான் முன்னே தம் வீரம் எத்தகையது எனக் கருத வேண்டும்.

வலிமைச் செருக்கு

தன்னுடைய பலத்திற்கும் வலிமைக்கும் முன் எவருமில்லை என்று ஆணவம் அடைவது. மலையையே குடையாகப் பிடிக்கும் வலிமையான கோவர்த்தனைவிட நம் வலிமை பெரியதா என எண்ணிப்பார்க்க வேண்டும்.

வனப்புச் செருக்கு

உடல் அழகுடன் இருப்பவர்கள் தன்னைவிட வனப்புடன் எவருமில்லை எனக் கருதுவது வனப்புச் செருக்காகும். இவ்வெண்ணம் தவிர்க்க காமதேவன், பலதேவர், வாசுதேவர், சீவகன், பாகுபலி போன்றோர் எவ்வளவு வனப்பு உள்ளவர்கள்; எனவே நம் வனப்பு வனப்பல்ல என்று அறிய வேண்டும்.

தவச் செருக்கு

விரதங்களும் நோன்புகளும் பல இருந்துவிட்டுத் தம்மைவிடத் தவத்தில் சிறந்தவர் எவருமில்லை என்று நினைப்பது தவச் செருக்காகும். இது வாராதிருக்க ஆதி பகவன், மகாவீரர் போன்ற தவச் சீலர்களைவிட நம் தவம் ஒன்றுமில்லை என்று எண்ண வேண்டும் என்றார் தருமசேனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x