Last Updated : 05 May, 2016 12:14 PM

 

Published : 05 May 2016 12:14 PM
Last Updated : 05 May 2016 12:14 PM

ரிஷியின் இலக்கணம்

முனிவர் சுகதேவருக்கு சீதையின் தந்தை ஜனகர் மீது பொறாமை இருந்தது.

ஜனகரை எல்லாரும் ‘ராஜரிஷி' என்று அழைப்பதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ராஜாவாக இருப்பவர் ரிஷியாக இருக்கவே முடியாது என்று நினைத்தார். தனது கருத்தைச் சோதித்துப் பார்க்க அவர் மிதிலைக்குப் போனார்.

மன்னன் ஜனகர், சுகதேவரை மிகுந்த பணிவுடன் வரவேற்றார். “சுகதேவரே! தங்கள் வருகையால் தேசம் பெருமை பெற்றது. தாங்கள், அரண்மனையில் சில நாட்கள் தங்கியிருக்க வேண்டும். வாருங்கள் உணவருந்தலாம்” என்று உபசரித்தார்.

அவர்கள் உணவருந்தி முடிக்கவும், ஒரு அமைச்சர் வந்தார். ஜனகரின் காதில் ஏதோ சொன்னார்.

“முனிவரே! தாங்கள் இளைப்பாறிக் கொண்டிருங்கள்! ஒரு பணியின் காரணமாக, நான் வெளியே செல்ல வேண்டியுள்ளது. வந்தவுடன், நான் தங்களுடன் உரையாடுகிறேன். தங்கள் அனுமதி வேண்டும்,'' என்றார். முனிவரும் அனுமதியளித்தார்.

சிறிது நேரம் கழித்து, ஜனகர் திரும்பினார். இருவரும் பல விஷயங்கள் குறித்து பேசியபடியே நடந்து கொண்டிருந்தனர். பேச்சு சுவாரஸ்யத்தில், அவர்கள் நீண்டதூரம் சென்றுவிட்டனர். அப்போது, குதிரையில் ஒரு வீரன் வேகமாக வந்தான்.

“மகாராஜா...மகாராஜா...தாங்கள் அவசரமாக அரண்மனைக்கு வர வேண்டும். அரண்மனையில் தீப்பிடித்து, தங்கள் உடமைகள் எல்லாம் எரிந்துவிட்டன,'' என்று பதற்றமாகச் சொன்னான்.

“எனது உடமைகளா! அப்படி ஏதும் அங்கு இல்லையே!'' என்று அமைதியாகச் சொன்னார் ஜனகர்.

சுகதேவரோ, “ஐயையோ! தீப்பிடித்து விட்டதா! எனது கமண்டலத்தையும், ஆடைகளையும் அங்கே வைத்திருந்தேனே! அவை எரிந்திருக்குமே!'' என்று பதறினார்.

சற்றுநேரம் கழித்து நிதானித்தார்.

“ஆம்...! சாதாரண கமண்டலத்துக்கும், உடைகளுக்குமே பதறிப்போனேன். இந்த மன்னரோ, அரண்மனையே எரிந்தும் பதற்றமில்லாமல் இருக்கிறார். தனக்கென்று அங்கே எதுவுமில்லை என்கிறார். நிஜத்தில் இவர்தான் ரிஷி,'' என்று தன்னையறியாமலே மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x