Published : 20 May 2016 02:18 PM
Last Updated : 20 May 2016 02:18 PM
சிவபெருமான் சுந்தரருக்கு குருவாக இருந்து தவ நெறி உபதேசம் செய்த தலம் இது.
பண்ருட்டிக்கு வடக்கே சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருத்துறையூர் கிராமம். இவ்வூரின் நடுவில் தான் சிவலோகநாயகி சமேதராய் வீற்றிருக்கிறார் சிஷ்ட குருநாதேஸ்வரர்.
திருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் திருமணம் நடந்தபோது தேவர்கள் எல்லாம் திரண்டதால் உலகை சமநிலைப்படுத்த சிவனால் அனுப்பப்பட்ட அகத்தியரால் திருமணத்தைக் காண இயலவில்லை. அந்த மனக்குறையைப் போக்க திருத்துறையூரில் சிவனும் பார்வதியும் காட்சிகொடுத்த இடமே இப்போது சிஷ்ட குருநாதர் திருத்தலமாக விளங்குகிறது.
ஒருமுறை, சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்துறையூர் பெருமானைத் தரிசிப்பதற்காக வந்தார். வழியில் பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அவரால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. அப்போது, ஒரு வயதான தம்பதி, சுந்தரரை படகில் ஏற்றி அக்கரையில் கொண்டுவந்து இறக்கிவிட்டு மாயமாக மறைந்தனர்.
அப்போது, சிவபெருமானும் பார்வதி தேவியும் தம்பதியராய் சுந்தரர் முன்தோன்றி, ரிஷப வாகனத்தில் அமர்ந்து சுந்தரருக்கு காட்சி கொடுத்தனர்.
அருணந்தி முக்தியடைந்த இடம்
இதைக் கண்டு மெய்சிலிர்த்த சுந்தரர், சிவபெருமானை தனக்கு உபதேசம் செய்யும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டார். சிவபெருமானும் அப்படியே உபதேசம் செய்தார். இதிலிருந்துதான் திருத்துறையூர் ஈசன் சிஷ்ட குருநாதேஸ்வரர் ஆனார்.
சிவஞான சித்தியார் என்னும் சரித்திர நூலை இயற்றிய அருணந்தி சிவாச்சாரியார் முக்தியான இடம் திருத்துறையூர். இவர் மெய்கண்டாருக்குக் குருவாக இருந்தவர் என்பதால் திருத்துறையூரில் சிவபெருமான், அருணந்தி சிவாச்சாரியார் என இரண்டு குருக்கள் இருப் பது தனிச்சிறப்பு.
இது குருஸ்தலம் என்பதால் இங்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கல்வி சிறக்கும் என்பதோடு திருமணக் கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த இடம் என்பதால் இங்கு வந்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT