Published : 12 May 2016 12:19 PM
Last Updated : 12 May 2016 12:19 PM
மதரீதியான குழப்பங்கள் உச்சத்தில் இருந்த ஒரு காலகட்டத்தில் ஸ்ரீ சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது. தவறான சிந்தாந்தங்களைப் பரப்பி மக்களை திசை திருப்பும் முயற்சிகள் நடைபெற்று வந்த வேளை அது. அதர்மம் தலை தூக்கியது. தர்மம் நிலை குலைந்தது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வாக்குக் கொடுத்த 'சம்பவாமி யுகே யுகே' வுக்கு அவசியமும் அவசரமும் ஏற்பட்டது. அப்போது இந்தப் புண்ணிய பூமியில் சங்கரர் அவதரித்தார்.
முப்பத்திரண்டே வயதுக்குள் பாரத தேசத்தை மும்முறை வலம் வந்து, சீடர்கள் பலரைத் தயாரித்து, ஷண்மதங்களை ஸ்தாபித்து, கவியாக நூல்கள் பல படைத்து, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்கள், பகவத் கீதைபோன்ற மகா காவியங்களுக்கு பாஷ்யங்கள் எழுதி நூற்றாண்டுகள் பல கடந்துவிட்ட பின்னரும் தலைசிறந்த துறவியாக, ஒப்பற்ற ஞான குருவாகப் போற்றப்பட்டு வரும் புண்ணிய புருஷர் ஸ்ரீ சங்கரர்.
ஆர்யாம்பா வயிற்றில் சிசுவாக
கேரள தேசத்தில் திருசிவப்பேரூர் என்ற திருசூருக்குத் தென்கிழக்கே முப்பத்திரண்டு மைல் தொலைவில் இருக்கிறது காலடி. இங்கே, திருமணம் முடிந்து வருடங்கள் பல கடந்துவிட்ட பின்னரும் 'இன்னும் புத்திர பாக்கியம் கிடைக்கவில்லையே' என்ற குறை சிவகுரு ஆர்யாம்பா தம்பதியை வாட்டியது. இருவரும் சிவபெருமானை பூஜிக்க, கருணை கொண்ட பரமசிவன், சிவகுருவின் கனவில் தோன்றுகிறார்.
“அந்தணரே... உலகம் முழுவதையும் உண்மையாக உணர்ந்தவனும், எல்லா நற்குணங்களுடனும் விளங்குபவனும், ஆனால் நீண்ட ஆயுள் இல்லாதவனாக ஒரு புதல்வன் உமக்கு வேண்டுமா அல்லது இதற்கு மாறாக நீண்ட காலம் நிலைத்திருக்கும் நூறு புதல்வர்கள் வேண்டுமா?” என்று வினவுகிறார்.
“தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்..” என்கிறார் சிவகுரு.
“சரி.. என்னையே ஒரு புதல்வனாக அருளுகிறேன்.. ஆனால் பூமியில் அவன் பதினாறு வயது வரையில்தான் வாழ்வான்.. என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார் பரமேஸ்வரன்.
ஐஸ்வர்யமான தேஜஸ் ஆர்யாம்பாவின் வயிற்றில் சிசுவாக உருக்கொண்டது.
பரம புண்ணியமான அந்த அவதாரகாலம் ஒரு நந்தன வருஷத்தில் சுத்த பஞ்சமியில் சூரியன் நடு உச்சியிலிருக்கும் மத்தியான வேளையில் ஏற்பட்டது. அன்று திருவாதிரை நட்சத்திரம். ஸ்ரீ பார்வதிதேவி, சுப்ரமணியனைப் பெற்றதுபோல் தங்கமான புதல்வனை ஈன்றெடுத்தாள் ஆர்யாம்பா. இந்த பூவுலகில் தர்மத்தை நிலை நிறுத்த திருவுருக் கொண்டார் சங்கரர்.
சங்கரர் அருளிய கனகதாரா
குருகுலவாச காலத்தில் குருவுக்கு சேவகம் புரிந்து கொண்டு, சிரத்தையாக வீடு வீடாகச் சென்று பிட்க்ஷை எடுத்து வந்தார் சங்கரர். அப்படி செல்லும்போது ஒருநாள் ஓர் ஏழை அந்தணர் வீட்டுக்குச் சென்றார்.அந்தச் சமயத்தில் அந்தணர் வீட்டில் இருக்கவில்லை. தேவையான உணவுப் பொருள்களைத் தேடி வெளியே சென்றிருந்தார்.
பிட்க்ஷை இடுவதற்கு வீட்டில் எத்தகைய உணவும் இல்லை. அந்தணரின் மனைவி தேடிய போது ஒரே ஒரு நெல்லிக்கனி மட்டும் கிடைத்தது. அதுவும் சற்றே அழுகியிருந்தது. எடுத்து வந்தாள்.
“மன்னிக்க வேண்டும். என்னிடம் இப்போது இருப்பது இந்த நெல்லிக்கனி மட்டும்தான்...” என்று உடைந்த குரலில் கூறிக்கொண்டே பாலசங்கரரின் பிட்க்ஷைப் பாத்திரத்தில் அதை பக்தியுடன் இட்டாள் அந்தணரின் மனைவி. அவள் கண்களில் தாரை தாரையாக நீர்.
கருணை உள்ளம் படைத்த சங்கரர், அவளுடைய பக்தி சிரத்தையை உணர்ந்தார். பொருளில் தரித்திரமாயிருந்தாலும் அவளுடைய விசாலமான மனசும், அதில் பொங்கிய அன்பும் புரிந்தது. அந்தக் குடும்பத்தின் வறுமையைப் போக்கி சுபிட்சத்தை அருள செல்வம் தரும் திருமகளான திருமகளைத் துதித்தார். ஒரு ஸ்தோத்திரம் பாடினார்.சங்கராரின் வாக்கிலிருந்து வந்த முதல் ஸ்துதி இது. அதுதான் 'கனக தாரா ஸ்வதம்.'
தந்தை சிவகுரு காலமாகிவிட்டதும் தாய் ஆர்யாம்பாவுக்கு ஆதரவாக கொஞ்சம் நாட்கள் அவருடனே இருந்து வந்தார் சங்கரர். வயோதிக அம்மாவுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து வந்தார்.
பூர்ணா என்ற பெயருடைய நதி
ஒரு நாள் ஆர்யாம்பா உடல் நலம் குன்றி மிகவும் சோர்ந்திருந்தாள். ஆற்றில் குளிக்க சென்று, திரும்பிவரும் வழியில் மயக்கமுற்று விழுந்து விட்டாள். ஓடோடிவந்த சங்கரர் அன்னையை கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்து வந்தார்.
“அம்மா.. ஏன் திடீர் மயக்கம்? உடம்புக்கு என்னவாயிற்று?”
“சங்கரா... நம் காலடிக்கு சற்று தொலைவில்தான் ஆல்வாய்ப்புழை ஓடிக் கொண்டிருக்கிறது. முன்னே மாதிரி தினமும் அங்கே போய் ஸ்நானம் செய்ய முடிவதில்லை...” வருத்தம் கலந்த குரலில் சொன்னாள் ஆர்யாம்பா.
பிரார்த்தனை செய்தார் சங்கரர். கடவுள் அவதாரம் தான் என்றாலும் பக்தராகவே வாழ்ந்த அவதாரம் இது. முன்பு ஏழைக்குடும்பத்துக்காக மகாலட்சுமியிடம் வேண்டியதும் இந்த வகையில்தான்.
“அம்மா உடம்பு குணமடைந்து நதிக்குப் போய் ஸ்நானம் செய்ய வேண்டும் என்ற பிரார்த்தித்தால் அவள் ஒருத்திக்கு மட்டுமே நன்மை செய்ததாகிவிடும். அதற்கு பதில், எங்கேயோ ஜனநடமாட்டம் இல்லாத காட்டு வழியே போய்க் கொண்டிருக்கும் புண்ணிய நதியை இந்தக் கிராமத்தின் வழியாகப் போகும் படி பிரார்த்தனை செய்தால் எல்லா மக்களுக்கும் பயனுள்ளதாக அமையுமே...” என்று நினைத்தார் சங்கரர்.
அவர் வேண்டுதல் பலித்தது. அற்புதம் நிகழ்ந்தது. பூர்ணா என்ற பெயருடைய அந்த நதி கிராமத்துக்குள் புகுந்து ஆர்யாம்பாவின் வீட்டு அருகிலேயே ஓடத் தொடங்கியது.
தனது அவதாரத்தின் காரண காரியங்கள் சங்கரரின் அடி மனத்தில் சுழன்று கொண்டே இருந்தது. அம்மாவை விட்டு, வீடு வாசலைத் துறந்து, துறவறம் மேற்கொள்ளத் தீர்மானித்தார்.
ஒரு நாள் பூர்ணா நதியில் குளிக்க இறங்கினார். அப்போது அவருடைய ஒரு காலை ஒரு முதலை கவ்விக்கொண்டது. கவ்வி, ஆழத்துக்கு இழுக்கவும் தொடங்கியது. உடன் வந்த அவரது அம்மாவால் அவரைக் காப்பாற்ற இயலவில்லை. தாயின் அனுமதி பெற்று, துறவறத்துக்கான தீட்சை மந்திரத்தை வேகமாகச் சொல்லத் தொடங்கினார். முதலை அவரை விடுவித்தது. உடனடியாகத் தன் பந்தம் துறந்து சந்நியாச ஆஸ்ரமம் பெற்றுக்கொண்டார் சங்கரர்.
“சங்கரா... என்னைத் தனியா விட்டுட்டா நீ போகப்போறே? என் கடைசிக் காலத்தில்கூட உன்னைப் பார்க்காமல் தான் என் உயிர் பிரியணுமா?” என்று கண்களில் நீர் மல்க, விம்மலுக்கிடையே கேட்டார் தாய்.
“கவலைப்படாதே அம்மா. பகலிலோ இரவிலோ எந்த நேரமானாலும் நீ என்னை நினைத்த மாத்திரத்திலேயே என்னுடைய கடமைகள் அனைத்தையும் விட்டு விட்டு நான் ஓடோடி வந்துவிடுவேன்... ஒருவேளை நீ உயிர் இழக்க நேர்ந்தால் என் கையினாலேயே உனக்கு ஈமக் கிரியைகள் செய்வேன்...” என்று உறுதியளித்தார் சங்கரர்.அதன் படியே வெகு தூரத்திலிருந்தும் தன் தாயின் மீது படரும் மரணத்தின் நிழலை முன்னறிந்து சென்றார். இறந்த தாய்க்கு மகன் செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் செய்து முடித்தார்.
ஆதிசங்கரர் பாடிய மனிஷா பஞ்சகம்
சீடர்கள் பின் தொடர, கங்கையை நோக்கி சங்கரர் சென்று கொண்டிருக்க, சற்றுத் தொலைவில் அக்காலத்தில் தீண்டத்தகாதவராக கருதப்பட்ட ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவருக்குப் பரிவாரங்களாக நான்கு வேட்டை நாய்கள்.
தனக்குமிக அருகில் அவர் வந்து விட்டதை உணர்ந்தார் சங்கரர், “விலகிப்போ.. விலகிப் போ..” என்றார்.
அவர் நின்றான்.
“எதைவிட்டு எது விலகிப் போக வேண்டும் என்று கூறுகிறீர்கள்? பூத உடலை விட்டு நான் விலக வேண்டுமா அல்லது ஆத்மாவைவிட்டு விலக வேண்டும் என்கிறீர்களா? பூத உடல் என்றால் அது அர்த்தமற்றது. காரணம், ஊன் உடல்கள் எல்லாமே ரத்தம், சீழ், எலும்பு, சதை போன்ற பொருள்களால் ஆனவைதான். அப்படியிருக்க எதற்காக ஒரு உடலைவிட்டு இன்னொரு உடல் விலகி செல்ல வேண்டும்? ஆன்மாவை விட்டு விலக வேண்டும் என்றால் அது இல்லாத செயல். எல்லாமாகவும், எங்கும் இருக்கும் ஆத்மா எதை விட்டு விலகி வேறு எங்கே செல்ல இயலும்?”
அவர் தொடர்ந்தார்.
“கங்கையில் பிரதிபலிக்கும் சூரியனுக்கும் சேரிக்குட்டையில் பிரதிபலிக்கும் சூரியனுக்கும் வேற்றுமை கிடையாதே! ஒரு தங்கக் கிண்ணத்துக்கு நடுவிலுள்ள ஆகாயத்துக்கும், ஒரு மண் குடத்துக்குள் இருக்கும் ஆகாயத்துக்கும் வேற்றுமை உண்டா என்ன?” என்று பேசிக்கொண்டே போனார் அவர். ஞானப் பூர்வமான இந்த வார்த்தைகைளை அந்த எளிய மனிதர் கூறியதைக் கேட்ட சங்கரர்,
“தாங்கள் இத்தனை விஷய ஞானம் மிக்கவரா! இப்படிப்பட்ட ஞானியாக இருக்கும் எவரையும் குருவாக போற்றுபவன் நான். தங்களை ஆச்சாரிய ஸ்தானத்தில் வைத்து நமஸ்கரிக்கிறேன்..” என்று அந்த மனிதரை நமஸ்கரித்த சங்கரர், அப்போது பாடிய ஐந்து சுலோங்கள்தான் தான் மனீஷா பஞ்சகம்.
சங்கரர் காசியில் இருந்தபோது ஒருநாள் தன் சீடர்கள் பதினான்கு பேருடன் வீதி வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது முதியவர் ஒருவர் வடமொழி இலக்கணச் சூத்திரங்களையும் அதன் விதிகளையும் மனப்பாடம் செய்து ஒப்புவித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தார்.
பஜகோவிந்தம் எழுதினார்
வறட்டு இலக்கணத் தேர்ச்சிக்காக கஷ்டப்பட்டுப் பிரயத்தனம் செய்துகொண்டிருந்த அந்த முதியவர் மீது சங்கரருக்குக் கருணை பிறந்தது.
“அரிதான மனிதப் பிறவியும் அறிவும் நமக்கும் பிற புலன் பொறிகளும் பெற்றுள்ள நீங்கள் ஏன் இப்படி பயனற்ற செயலில் வாழ்நாளைக் கழித்து வீணடித்துக் கொண்டிருக் கிறீர்கள்? நீங்கள் இப்படி இலக்கணத்தை வைத்துக்கொண்டு கஷ்டப்படுவதற்குப் பதிலாக, இறைவனான கோவிந்தனிடத்தில் பக்தி செய்வதிலும், அவன் திருநாமங்களைப் பஜனை செய்வதிலும், உங்கள் நேரத்தைச் செலவழித்தால் எளிதில் பிறவிப்பயன் பெற்றுவிடலாமே!” என்று அறிவுரை கூறினார் சங்கரர்.
அதைத் தொடர்ந்து சங்கரர் இயற்றியதுதான் புகழ்மிக்க பஜகோவிந்தம்!
தமது திக் விஜயத்தின்போது சங்கரர் வாதப்போர் புரிந்து வெற்றிவாகைச் சூடிய சந்தர்ப்பங்கள் எண்ணில் அடங்காதவை. இவரிடம் வாதம் புரிந்து தோல்வியுற்ற அபிநவகுப்தர் மனமுடைந்து போய் பகையுணர்வு அதிகமாகி அபிசார யாகம் என்ற யாகமொன்றை நடத்தி சங்கரரின் உடலில் பாதிப்பு ஏற்படுத்தினார். வைத்தியர்களால் கூட நிவர்த்தி செய்யமுடியாத கொடிய நோய் அவரைத் தாக்குகிறது. அவர் அனுபவிக்கும் வேதனையை சீடர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
“வியாதி, முன் ஜன்ம வினையின் பயன்.. அதை அனுபவித்துதான் தீர வேண்டும். இந்த ஜன்மத்தில் அனுபவிக்காவிடில் அடுத்த ஜன்மத்தில் இது தொடரும். பாவத்தின் பயனான வியாதி அந்தப் பாவம் நசித்தால்தான் நீங்கும்... இதற்கு வைத்தியம் செய்ய நான் தயாராக இல்லை..” என்றார் சங்கரர்.
சீடர்கள் சமாதானம் ஆகவில்லை. வற்புறுத்துகிறார்கள். வைத்தியர்கள் எல்லா திசைகளிலிருந்தும் வரவழைக்கப் படுகிறார்கள். பலனளிக்கவில்லை. நோய் தீவிரம் அடைந்தது.
கனவில் சிவபெருமானின் அறிவுறுத் தலின்படி திருச்செந்தூர் சென்றார் சங்கரர். அங்கே பாம்பு ஒன்று தன் உடலை நெளித்து நெளித்துச்சென்று முருகப்பெருமானின் பாதங்களில் பூஜை செய்வதைக் கண்டார். புஜங்கம் என்றால் பாம்பு. இதையே அடிப்படையாகக்கொண்டு அதே ஸ்தலத்தில் 'சுப்ரமணிய புஜங்கம்' என்ற தலைப்பில் 33 பாடல்களைப் பாடி அருளினார்.
சங்கரருக்கு முப்பத்திரண்டு வயது பூர்த்தியானது. வியாசரின் விருப்பப்படி கூட்டிக்கொண்ட பதினாறு வருஷமும் தீர்ந்துவிட்டது. தொடர்ந்து வந்த வைகாசியோடு சரீர யாத்திரையை முடித்து அகண்ட சைதன்யமாகிவிடத் தீர்மானித்தார் சங்கரர். முடிவாக ஒரு உபதேசத்தை அனுக்கிரகிக்கும்படி சீடர்களெல்லாம் அவரிடம் பிரார்த்தனை செய்துக் கொண்டார்கள்.
'வேதோ நித்யம் அதீயதாம்...' என்று ஆரம்பித்து, அடியிலிருந்து நுனிவரை செய்ய வேண்டிய அத்தனை சாதனா கிரமத்தையும் படிப்படியாக ஐந்தே ஸ்லோகங்களில் உபதேசித்தார் சங்கரர். அதுதானன் ‘ஸோபாந பஞ்சகம்.'
ஆதிசங்கர் வாக்கு
கண்ணாடியின் உள்ளே பிரதிபிம்பம் தெரிகிறது. திலகமில்லாமல் அது பாழ் நெற்றியாகத் தெரிகிறது. திலகம் வைக்க வேண்டும் என்று தோன்றும்போது, கண்ணாடிக்குப் பொட்டு வைப்பதில்லையே? அப்படி வைத்தால் கண்ணாடிதான் அழுக்காகும். அதனால் பிரதிபிம்பத்துக்கு மூலமான மனிதருக்குப் பொட்டு வைப்பார்கள். அப்படி, இந்த ஜீவலோகம் முழுவதும், ஏக சைதன்யம் மாயக் கண்ணாடியில் காட்டுகிற தினுசு தினுசான பிரதிபிம்பங்கள்தாம். நீயும் அப்படித்தான்.
உனக்கு எதாவது நல்லது பண்ணிக்கொள்ள வேண்டுமென்றால் அது பொட்டு இட்டு அலங்காரம் பண்ணிக்கொள்வது மாதிரிதான். நேரே உனக்கே , அதாவது மாயையில் பிரதிபலித்து உண்டான உன் தேக, இந்திரியங்களுக்கே நீ நல்லது என்று ஒன்றை பண்ணிக்கொண்டால் அது கண்ணாடியில் கறுப்புப்பூசி அழுக்கு பண்ணும் காரியம்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT