Published : 07 Apr 2016 10:42 AM
Last Updated : 07 Apr 2016 10:42 AM
இமயத்திலிருந்து கல் எடுத்துவந்து மன்னன் சேரலாதன், கண்ணகிக்கு அமைத்த கோட்டம்தான், இன்றைக்கு மங்களாதேவி கோயிலாக தமிழக, கேரள மக்களின் வழிபாட்டுக்கு உரியதாகியிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 4,000 அடிக்கு மேல் தமிழக, கேரள எல்லைப் பகுதியில் ஒட்டியப்பளியங்குடி என்னும் பகுதியில் அமைந்துள்ளது மங்களாதேவி கோயில். தொல்லியல் துறையால் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டிருக்கும் இந்தக் கோயிலின் தலவரலாறு சிலப்பதிகாரத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்றைக்கு மட்டுமே இந்தக் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, காலை 5-30 மணி முதல் மாலை 5.30 வரை பூஜை நடக்கின்றது. அதுவும் கேரள அரசாங்கத்திடம் இருந்து அனுமதி கிடைத்த பிறகே தமிழக பக்தர்கள் இந்தக் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மங்களாதேவி கோயிலில் தெய்வமாக வணங்கப்படும் கண்ணகியின் அருளால் கணவன், மனைவி இடையே எழும் பிரச்சினைகள், வேற்றுமைகள் நீங்குகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.
காலம்காலமாக மங்களாதேவி கோயிலில் வழிபாடுகள் நடந்துவந்தாலும், தற்போது பெரியாறு புலிகள் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இந்தக் கோயில் இருப்பதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் மற்ற நாள்களில் வழிபாடு இங்கு தடைசெய்யப்பட்டிருப்பதாக பக்தர்கள் சிலர் சொல்கின்றனர்.
சித்ரா பவுர்ணமி நாளைத் தவிர மற்ற நாட்களில் இந்தக் கோயிலில் வழிபாடு நடப்பதில்லை. மற்ற நாட்களில் இந்தக் கோயிலில் சிலா ரூபம்கூட இருப்பதில்லை. சித்ரா பவுர்ணமி அன்றைக்கு மட்டும் ‘கம்பம் கண்ணகி அறக்கட்டளை’யைச் சேர்ந்தவர்கள், பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட கண்ணகி சிலையை இங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து பூஜை நடத்துகிறார்கள். புது மஞ்சள் தாலி, கண்ணாடி வளையல்களை கண்ணகி சிலை முன் வைத்து பூஜை செய்த பிறகு பெண்கள் அணிகிறார்கள். அன்னதானம், அரவனப் பாயசம் எனப் படையலிட்டு, தீபராதனைக்குப் பிறகு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கண்ணகி கோட்டத்தில் மங்களாதேவி சன்னிதியுடன், சிவபெருமான், பிள்ளையார் சன்னிதிகளும் உள்ளன. சிறு கடவுளரான கருப்பசாமி சிலையும் கோயிலில் இருக்கிறது. எல்லைப் பிரச்சினையில் இருந்தாலும், இந்தக் கோயிலில் தமிழக, கேரள பக்தர்கள் மனம் ஒருமித்தே கூடுகின்றனர். நாளுக்கு நாள் அதிகப்படியான சேதங்களுக்கு உட்படும் மங்களாதேவி கோயிலை தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT