Published : 28 Apr 2016 12:54 PM
Last Updated : 28 Apr 2016 12:54 PM
உங்களில் ஒருவர் மற்றொரு சகோதரருக்குக் கண்ணாடி போன்றவராவார். எனவே, தம் சகோதரரிடம் ஒரு குறையைக் கண்டால் அதனைக் களைய முயற்சி மேற்கொள்ளுங்கள்.
கண்ணாடி நேருக்கு நேராக குற்றங்குறைகளைக் காட்டிவிடுகிறது. விலகி நின்றால் மௌனமாகிவிடுகிறது. பிறர் குற்றங்களை நேருக்கு நேராகக் காட்ட வேண்டும். அவர்கள் குறித்து புறம் பேசக் கூடாது. இதுவே முதல் அம்சம்.
முகத்தில் உள்ள குறைகளை உள்ளதை உள்ளபடியே காட்டுகிறது கண்ணாடி. மிகைப்படுத்தியோ குறைத்தோ ஒருக்காலும் காட்டுவதில்லை. சக மனிதர்களின் குற்றங்குறைகளை மிகைப்படுத்தியோ, குறைத்தோ காட்டாதீர் என்பது இரண்டாம் அம்சம்.
உங்கள் சகோதர்களின் குறைகளைக் கண்டறிய அவர்களைப் பின்தொடர்ந்து திரியாதீர்கள். தமது சகோதரரின் மறைவான குறைகளை வெளிப்படுத்த ஒருவர் முற்படுவாராயின், இறைவனும் அந்த மனிதரின் மறைவான குறைகளை வெளிப்படுத்திவிடுவான். பிறகு அவர் அவமானத்தால் கூனிக்குறுகிப் போக வேண்டியிருக்கும் என்று நபிகளார் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எச்சரிக்கிறார்.
கண்ணாடி, எவ்வித எதிர்பார்ப்பும் சுயலாபமும் இன்றித் தனது கடமையைச் செய்கிறது. யாரிடமும் பகைமை, குரோதத்தைக் காட்டுவதில்லை. யாரையும் பழிவாங்குவதுமில்லை. கோபதாபங்களின்றி, எதிரிலிருப்பவர் அழகிய தோற்றம் பெறக் கண்ணாடி உதவுவதுபோலவே சக மனிதர்களின் அகம், அழகுபெற உதவ வேண்டும் என்பதே மூன்றாவது அம்சம்.
கண்ணாடியில் முகம் பார்ப்பவர், தமது குற்றங்குறைகளைக் கண்டு வெறுப்படைவதில்லை. கோபப்படுவதில்லை. கோபத்தைக் கண்ணாடி மீது காட்டுவதுமில்லை. மாறாக அழகுபடுத்திக் கொள்வதிலேயே முனைப்பு காட்டுகின்றான். மகிழ்ச்சியோடு கண்ணாடியைத் துடைத்து வைத்துப் பாதுகாக்கிறான். உங்கள் குற்றங்குறைகளை நளினமாகச் சுட்டும்போது வெறுப்படையாதீர்கள். கோபப்படாதீர்கள். மாறாக, மகிழ்ச்சியடைந்து, சக மனிதர்களின் தோழமையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். சீர்த்திருத்தத்துக்குத் தயாராகுங்கள் என்பதே கண்ணாடி சொல்லும் அடுத்த அம்சம்.
தோழமைக்குக் கண்ணாடி உவமானப்படுத்தப்பட்டிருப்பது சக மனிதர்களிடம் நிலவும் நட்பும் தோழமையும் அன்பின் வடிவமாக நலன்விரும்பியாகத் திகழ வேண்டும் என்பதற்குத்தான்! நீங்கள் உங்கள் நண்பர்களின், சக மனிதர்களின் சுகதுக்கங்களில் பங்கெடுங்கள். உங்கள் விமர்சனங்கள், மன உருக்கம் என்னும் அந்த அன்பில் கரைந்துவிடும். உள்ளங்கள் பிணைந்துவிடும்.
அன்பளிப்புகள் சிறியதானாலும் பெரிதானாலும், அவை மனித உள்ளங்களைப் பிணைக்கும் என்பதை உறுதிப்படுத்தி நபிகளார் இப்படிச் சொல்கிறார்.
“ஒருவர் மற்றொருவருக்கு அன்பளிப்புகளை அளித்தவண்ணம் இருங்கள். இதனால், பரஸ்பரம் அன்பு பெருக்கெடுக்கும். உள்ளங்களிலிருந்து கபடங்கள் விலகும். ஒருவர் ஓர் ஆட்டின் கால்களை எனக்கு அன்பளிப்பாக வழங்கினாலும் நான் அவற்றை அவசியம் ஏற்றுக்கொள்வேன். ஒருவர் ஆட்டின் கால்களை சமைத்து விருந்து வைத்தாலும் நான் கட்டாயம் அந்த விருந்தை ஏற்றுக்கொள்வேன்!”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT