Published : 14 Apr 2016 08:30 AM
Last Updated : 14 Apr 2016 08:30 AM

ருக்மிணி கோயில்: சாபத்தால் உருவான கோயில்

கிருஷ்ணருக்கு நாடு முழுவதும் பல கோயில்கள் உள்ளன. இவரது பட்டத்து மகிஷி ருக்மிணிக்கும் கோயில் உள்ளது. துவாரகைக்குச் சற்றே வெளியில் துவாரகாதீசர் கோவிலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பெட் துவாரகை செல்லும் வழியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் உருவானதற்குப் பின்னால் சுவையான கதை ஒன்று உள்ளது. கிருஷ்ணர் துவாரகையை ஆண்டுகொண்டிருந்தபோது தவத்தில் சிறந்த துர்வாச முனிவரை அழைத்து விருந்து தர விரும்பினார். துர்வாசரின் கோபம் பிரசித்தி பெற்றது. ஆயினும் அவரை அணுகிப் பணிவுடன் இருவரும் அழைத்தனர். கிருஷ்ணரே அழைக்கும்போது அதை மறுக்க முடியுமா? ஆனாலும் ஒரு நிபந்தனை விதித்தார் துர்வாசர். தான் செல்லும் தேரை கிருஷ்ணரும் ருக்மிணியும் இழுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அது.

இருவரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். வழியில் கடும் வெயில். ருக்மிணிக்கு தாகம் எடுத்து நா வறள ஆரம்பித்தது. விருந்தோம்பலின் முக்கியமான விதிமுறை, விருந்தினர் திருப்தியாக உபசரிக்கப்பட்ட பிறகே விருந்தளிப்பவர் உண்ண வேண்டும். அதனால் துர்வாசரிடம் தன் தாகத்தைப் பற்றி ருக்மிணி சொல்லவில்லை. ஆனால், ருக்மிணியின் துயர் பொறுக்காத கிருஷ்ணர், துர்வாசர் அறியாதவாறு நிலத்தை நகத்தால் கீறி கங்கையை வரவழைத்து ருக்மிணியை அருந்தச் செய்தார்.

விதிவசம், அந்தச் சமயம் பார்த்து இவர்கள் பக்கம் திரும்பினார் முனிபுங்கவர். ருக்மிணி நீர் அருந்தியதைக் கண்டு அவருக்குக் கோபம் தலைக்கேறியது. ருக்மிணியின் நிலைமையைக் கூறி சமாதானப்படுத்த முயன்றார் கிருஷ்ணர். அதிதியின், அதாவது தன்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி நீர் அருந்தலாம் என்பதுதான் துர்வாசரின் கோபத்துக்குக் காரணம். கிருஷ்ணர் அவரைச் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவரது முயற்சி தோல்வி அடைந்தது.

“அதிதிக்கு உணவளிக்காமல் நீர் அருந்திய நீ, கிருஷ்ணனைப் பிரிந்திருக்கக் கடவாய்” என்று துர்வாசர் சாபமிட்டார். பிறகு, தண்டனை குறிப்பிட்ட காலம் வரை என்று குறைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ருக்மிணி துவாரகைக்கு வெளியே தனியே வசித்துவந்தார். அந்தக் கெடு முடிந்த பிறகு அரண்மனைக்குத் திரும்பலாம் என்றாலும், தன்னை அனுதினமும் காண வரும் பக்தர்களுக்காக அங்கேயே குடி கொண்டுவிட்டார் ருக்மிணி. அதனால்தான் ருக்மிணி கோயில் ஊருக்கு வெளியே தனியாக உள்ளது.

சாபத்தால் உருவான இந்தக் கோவில் நீர்நிலைக்கு நடுவில் உள்ளது. சிறியதாக இருந்தாலும் அற்புதமான கலையம்சம் கொண்டதாக அமைந்திருக்கிறது. சிற்பங்களின் அழகு மனதைக் கவர்கிறது.

கட்டிடக் கலையின் சிறப்பை இந்தக் கோயிலில் காணலாம். கோவிலின் வெளிப்புறச் சுவர்கள் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் ருக்மிணி கிருஷ்ணனுடன் பொழுதுபோக்கியதைச் சித்தரிக்கும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்தக் கோயில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. சிற்பங்கள் நரதரர்கள், அதாவது மனித உருவங்களும் தெய்வ உருவங்களும் கொண்டதாக உள்ளன. அடித்தளத்தில் கஜதரங்கள், அதாவது யானைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

பிரதான கோவிலுக்கு மேல் பாரம்பரிய முறையில் அமைக்கப்பட்ட கூரான கோபுரம் கருவறைக்கு முன் உள்ள மண்டபத்திற்கு மேல் உள்ள அரைக்கோள வடிவிலான குவிமாடத்துடன் முரண்படுகிறது. கருவறைக்கு உள்ளே கிருஷ்ணர் ருக்மிணியுடன் தரிசனம் தருகிறார்.

சிற்பங்களின் அழகும் பண்டைய கட்டிடக் கலையின் அற்புதமும் கூடிய ருக்மிணி கோயில், துவாரகை செல்லும்போது கண்டிப்பாகச் செல்ல வேண்டிய இடம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x