Published : 07 Apr 2016 11:13 AM
Last Updated : 07 Apr 2016 11:13 AM
தீர்த்தாண்டதானம் சர்வதீர்த்தேஸ்வரர் திருக்கோயில், ராவணனை வீழ்த்தி சீதையை மீட்க இலங்கைக்குப் புறப்பட்ட ராமனுக்கு சிவபெருமான் அருளாசி தந்த இடமாகும். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அருகில் உள்ளது தீர்த்தாண்டதானம். ராமபிரானும் லட்சுமணரும் சீதையை மீட்க இலங்கைக்குப் பயணம் செய்தபோது இவ்வூரின் பாதிரி மரத்து நிழலில் சற்று இளைப்பாறினார்கள். அப்போது ராமபிரானுக்குத் தாகம் எடுத்தது. வருண பகவானை நினைத்துக்கொண்டார். வருண பகவான் அவ்விடத்தில் தீர்த்த தடாகம் ஒன்றை உருவாக்கினார். அந்த சமயம், தீர்த்தாண்டதானத்திற்கு (சுமார் 6 கிலோ மீட்டர்) அருகேயுள்ள திருப்புனல்வாசலில் உள்ள விருத்தபுரீஸ்வரரை வழிபடுவதற்காக வந்தார் அகத்திய முனி. ராமபிரான் வந்திருக்கும் தகவல் அறிந்து தீர்த்தாண்டதானம் வந்தார் அகத்தியர்.
விருத்தபுரீஸ்வரரை வேண்டிய ராமபிரான்
ராமபிரான் சீதையை மீட்க இலங்கைக்குச் செல்வதை அறிந்த அகத்திய முனி, ராவணன் மிகச் சிறந்த சிவபக்தன்; சிவபெருமானின் அருட்கடாட்சம் இல்லாமல் அவனை வீழ்த்துவது கடினம் என்றார். உடனே, பாதிரி மர இலையையும் வில்வ இலையையும் வைத்து அங்கிருந்தபடியே விருத்தபுரீஸ்வரரை வேண்டினார் ராமபிரான். வேண்டுதல் கேட்டு காட்சி கொடுத்த சிவபெருமான், ராவணனை வீழ்த்த ராமபிரானுக்கு அருளாசி வழங்கியதோடு, அருகிலுள்ள கடற்கரையில் ராமபிரானின் தந்தைக்குத் தர்ப்பணம் செய்துவிட்டு இலங்கைக்குப் புறப்படச் சொன்னார்.
அப்போது வருண பகவான் சிவபெருமானிடம் மூன்று வரங்களைக் கேட்டார். ராமபிரான் வழிபாடு நடத்திய இவ்விடத்தில் சிவபெருமான் மேற்கு நோக்கிக் காட்சி கொடுக்க வேண்டும்; ராமபிரானுக்குத் தீர்த்தம் கொடுத்து ஆட்கொண்ட இடமாதலால் இவ்விடம் இனிமேல் தீர்த்தாண்டதானம் எனப் பெயர் விளங்க வேண்டும்; இந்தக் கடலில் நீராடி ஈசனை வழிபடுபவர்கள் உலகில் உள்ள 68 கோடி தீர்த்தங்களிலும் நீராடியதற்கு ஒப்பான பலனைப் பெற வேண்டும்; இம்மூன்று வரங்களையும் அப்போதே தந்தருளினார் சிவபெருமான்.
அதுமுதல் மேற்கு நோக்கியபடி சர்வதீர்த்தேஸ்வரராக இவ்விடத்தில் கோயில் கொண்டார் சிவபெருமான். இங்கே பெரியநாயகியாக உடனிருக்கிறார் அம்பாள். ராமபிரானே தர்ப்பணம் செய்த இடம் என்பதால் இங்குள்ள தீர்த்தக் கடலில் தர்ப்பணம் செய்துவிட்டு ஈரத்துணியுடன் வந்து சர்வதீர்த்தேஸ்வரரை வழிபடுவது சிறப்பு. பூர்வஜென்ம தோஷங்கள் நீக்கும் பரிகாரத் தலமாகவும் இது கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT