Published : 03 Mar 2016 12:10 PM
Last Updated : 03 Mar 2016 12:10 PM

தெய்வத்தின் குரல்: மனிதனும் மிருகமும்

மிருகங்கள் குறுக்குவாட்டில் (horizontal) வளர்கின்றன. இதனாலேயே அவற்றுக்குத் ‘திர்யக்' என்று பெயர். இதற்கு மாறாக உயர்ந்து மேல்நோக்கி (vertical) வளருகின்ற மனிதன் மற்ற பிராணிகளைக் காட்டிலும் மேலான நோக்கத்தைப் பெற வேண்டும். இப்படிச் செய்தால் இவன்தான் சகல ஜீவ இனங்களையும்விட அதிகமான சுகத்தை அநுபவிக்கலாம். ஆனால் நடைமுறையிலோ அவற்றைவிட அதிகமான துக்கத்தைத்தான் நாம் அநுபவிக்கிறோம்.

மிருகங்களுக்கு நம்மைப் போல் இத்தனை காமம், இத்தனை கவலை, இத்தனை துக்கம், இத்தனை அவமானம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றுக்குப் பாபமே இல்லை. பாவங்களைச் செய்து துக்கங்களை நாம்தான் அநுபவிக்கிறோம்.

ஒரு வழியில் பார்த்தால் மிருகங்களுக்குக் கொடுத்திருக்கும் சௌகரியங்களை ஸ்வாமி நமக்குக் கொடுக்கவில்லை என்று தோன்றும். நம்மை யாராவது அடித்தால் திருப்பி அடிக்க ஓர் ஆயுதமும் நமக்கு இல்லை. மாட்டை அடித்தால் அதற்குக் கொம்பு கொடுத்திருக்கிறார். அதனால் திருப்பி முட்ட வருகிறது. புலிக்கு நகம் கொடுத்திருக்கிறார். நமக்குக் கொம்பு இல்லை. நகம் இல்லை.

குளிரிலிருந்து காப்பாற்றிக்கொள்ள ஆட்டுக்கு உடம்பில் போர்வை வைத்திருக்கிறார். வேறு மிருகங்களுக்கும் போர்வை வைத்திருக்கிறார். மனிதன் ஒருவனைத்தான் வழித்து விட்டு இருக்கிறார். யாராவது அடிக்க வந்தால் எதிர்க்க முடியவில்லை. குதிரைக்குக் கொம்பு இல்லா விட்டாலும் ஓடுவதற்கு வேகம் கொடுத்திருக்கிறார். அதுவும் நமக்கில்லை.

இருந்தாலும் ஸ்வாமி மனிதனுக்குத்தான் புத்தியை அதிகமாக வைத்திருக்கிறார். குளிரிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், மற்றப் பிராணிகளின் போர்வையை இவன் பறித்துக் கொண்டுவிடுகிறான். கம்பளியாக நெய்துகொள்கிறான். வேகமாகப் போக வேண்டுமா? வண்டியிலே குதிரையைக் கட்டி, அதன் வேகத்தை உபயோகப்படுத்திக்கொள்கிற சாமர்த்தியத்தை இவனிடத்தில் சுவாமி வைத்திருக்கிறார். தன் சரீரத்திலேயே தற்காப்பு இல்லாவிட்டாலும், வெளியிலிருந்து தினுசு தினுசான ஆயுதங்களைப் படைத்துக்கொள்கிறான். இவ்வாறாக புத்தி பலம் ஒன்றை மட்டும் கொண்டு, மற்ற ஜீவராசிகள், ஜடப் பிரபஞ்சம் எல்லாவற்றையும் மனிதனே ஆளுகிறான்.

மிருகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிராந்தியத்தில்தான் இருக்கும். குளிர்ப் பிரதேசத்துக் கரடி நம் ஊரில் வாழாது. இங்குள்ள யானை அங்கே வாழாது. ஆனால் மனிதன் உலகம் முழுவதும் வாழ்கிறான். அங்கங்கே அவன் தன் புத்தியை உபயோகப்படுத்தித் தனக்குச் சாதகமாகச் சூழ்நிலையைச் செய்துகொள்வான் என்று இப்படி விட்டிருக்கிறார்.

இந்த உயர்ந்த புத்தியை வைத்துக்கொண்டு மனிதன் கஷ்டப்படுகிறான். துக்கப்படுகிறான். பிறந்துவிட்டதனாலே இவ்வளவு கஷ்டம். இனி பிறக்காமலிருக்க வேண்டுமானால் என்ன பண்ணுவது? பிறப்புக்குக் காரணம் என்ன? நாம் ஏதோ தப்புப் பண்ணியிருக்கிறோம். அதற்குத் தண்டனையாக இத்தனை கசையடி வாங்க வேண்டும் என்று விதித்திருப்பதால் இந்த உடம்பை எடுத்து அவற்றை வாங்குகிறோம். பத்து அடி ஆன பிறகு இந்த உடம்பு போய்விட்டால், இன்னோர் உடம்பு வருகிறது. பாக்கி அடியை அந்த உடம்பு வாங்குகிறது. காமத்தினால், பாபத்தைச் செய்வதனாலே ஜனனம் வருகிறது. காரியம் எதுவும் பண்ணாமல் இருந்துவிட்டால் ஜனனம் இல்லை. கோபத்தினாலேயே பல பாபங்களைச் செய்கிறோம். கோபத்துக்குக் காரணம் ஆசை, காமம். முதலில் காமத்தை, ஆசையை ஒழிக்க வேண்டும். பற்றை நிறைய வளர்த்துக்கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்றால் முடியாது. பற்றை ஒழித்துவிட்டால் பாபம் செய்யாமல் இருக்கலாம்.

ஆசைக்குக் காரணம் என்ன? நம்மைத் தவிர இன்னொன்று இருப்பதாக எண்ணுவதால் அதனிடம் ஆசை வருகிறது. உண்மையில் சாந்தமாகிய ஒரே சிவமே எல்லாமாக இருக்கிறது.

ஒரு மாடு கண்ணாடியில் தன்னைப் பார்த்துவிட்டு, இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப்போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான். இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அவன் நினைக்கிறானா? இரண்டும் ஒரே பொருள் என்பது அவனுக்குத் தெரிந்து சாந்தமாக இருக்கிறான். இப்படியாக நாம் பார்க்கிற அனைத்துமே ஒன்றுதான். இரண்டாவது என்று எண்ணினால் ஆசை வரும். ஆசை வருவதனால் கோபம் வருகிறது. கோபம் வருவதனால் பாபங்களைச் செய்கிறோம். அதனால் ஜன்மம் உண்டாகிறது. எல்லாம் ஒன்று என்ற ஞானம் நமக்கு வந்துவிட்டால், வேறு பொருள் இல்லாததனாலே ஆசை இல்லை. கோபம் இல்லை; பாபம் இல்லை. காரியம் இல்லை. ஜனனம் இல்லை. துன்பமும் இல்லை.

இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது? நம்மைப் பெற்ற அம்மா உடம்புக்குப் பால் கொடுப்பாள். அறிவுக்கு ஞானப்பால் கொடுப்பவள் அம்பாள்தான். ஞான ஸ்வரூபமே அவள்தான். அவளுடைய சரணாரவிந்தங்களைப் பற்றிக்கொண்டு அவளுடைய ஸ்வரூபத்தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும். மனிதன் அப்போது தெய்வமாவான்.

முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்க வேண்டும். அப்புறம் அவனைத் தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்தக் குறிக்கோளுடன்தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன. சித்தாந்தம், தத்துவங்களில் அவற்றுக்குள் எத்தனை பேதமிருந்தாலும், இப்போதிருக்கிற மாதிரி மனுஷ்யனை ஒரே காமக் குரோதாதிகளுடன் இருக்க விடக் கூடாது; இவனை நல்லவனாக ஆக்கி அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனாகப் பண்ண வேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன.

- தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x