Published : 24 Mar 2016 12:41 PM
Last Updated : 24 Mar 2016 12:41 PM
காசி அரசனின் ரதம் இமயமலையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கை மேல் மிகவும் வெறுப்புக் கொண்டிருந்த அம்மன்னன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தான். எல்லாம் இருந்தும் மனநிம்மதி இல்லை. குழப்பமான சிந்தனைகளுடன் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த மனிதரைப் பார்த்தான்.
எளிமையான உடைகளுடன் இருந்த அந்த மனிதரின் முகத்தில் பேரானந்தம் தாண்டவமாடுவதை ஆச்சரியத்துடன் நோக்கினான். தனது மரணத்திற்கு முன்பு இந்த மனிதரிடம் ஆசுவாசமாகப் பேசிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்து ரதத்தை நிறுத்தி இறங்கினான். தனது மூடிய விழிகளைத் திறந்தார் அந்த மாமனிதர். தன் முன் நின்ற மன்னனைப் பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டார்.
“நான் ஒரு அரசன். எல்லாம் இருந்தும், ஏதும் இல்லாத எண்ணமே என்னை வதைத்துக்கொண்டிருக்கிறது. என் பிரச்னையை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. உங்கள் ஒளியுடைய முகம் என்னை ஈர்த்தது. நான் சாவதற்கு முடிவு எடுத்துள்ளேன். என் பிரச்னை என்னவென்று அதற்கு முன்னர் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றான் மன்னன்.
மன்னன் சொல்வதையேல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், அந்த மனிதரின் பார்வை மன்னனின் கால்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. மன்னனுக்குச் சிறு வயது முதலே காலாட்டுகிற பழக்கம் உண்டு. அந்த மனிதர் தன் கால்களைப் பார்க்கிறார் என்பதை அறிந்த மன்னன் சட்டென்று காலாட்டுவதை நிறுத்திவிட்டான்.
“ மன்னனே…! உனக்கு எவ்வளவு காலமாக காலாட்டுகிற பழக்கம் உள்ளது?” என்று கேட்டார்.
தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் காலாட்டுவதாக மன்னன் பதில் கூறினான்.
“இப்போது நீ ஏன் காலாட்டுவதை நிறுத்திவிட்டாய்?” என்று கேட்டார் அந்த மனிதர்.
“ நீங்கள் என் கால்களையே கவனித்தீர்கள்” என்று பதிலளித்தான் மன்னன்.
“ நான் உன் கால்களையே கவனித்ததால் உன் நீண்ட நாள் பழக்கத்தை நிறுத்திவிட்டேன் என்கிறாய். இனிமேல் நீயே உன்னைக் கவனி. எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பது உனக்கே தெரியவரும்! “
மன்னனின் இருண்ட மனதில் ஓர் ஒளிக்கீற்று தெரியத் தொடங்கியது.
மிகுந்த பணிவோடு, “நீங்கள் யார்?” என்று கேட்டான் மன்னன்.
“புத்தர்” என்று பதில் வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT