Published : 05 Jun 2014 03:16 PM
Last Updated : 05 Jun 2014 03:16 PM
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்புக் கொண்டவை. வைகாசி மாதத்தை ‘மாதவ மாதம்’ என்பார்கள். இந்த மாதத்தில் புனித நீராடிய பிறகு, மகாவிஷ்ணுவைத் துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் பல வகையான பேறுகள் பெறலாம் என்று கூறப்படுகிறது. பிரகலாதனுக்காகப் பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தது வைகாசி மாதத்தில்தான். ‘‘பக்தர்கள் மனமுருகி வேண்டினால் அவர்களைக் காக்கும் பொருட்டு இறைவன் தூணில் இருந்தும் வருவான்’ என்று நிரூபிக்கும் விதமாகத் தூணில் இருந்து நரசிம்மமாகப் பெருமாள் வெளிப்பட்டு பிரகலாதனைக் காப்பாற்றியது வைகாசி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளில்தான்.
இப்படிப் பல பெருமைகள் கொண்ட வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் கூடி வரும் தினமே ‘வைகாசி விசாகம்’. விசாகம் என்பது 6 நட்சத்திரங்கள் ஒருங்கிணைந்தது. முருகப் பெருமான் அவதாரம் நிகழ்ந்தது இந்த நன்னாளில் என்று புராணங்கள் கூறுகின்றன.
பத்மாசுரன் தவமிருந்தான். ‘‘சிவனுக்கு இணையான ஒருவரைத் தவிர, வேறு யாராலும் எனக்கு அழிவு நேரக் கூடாது. அப்படியே நேர்ந்தாலும், அது பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவரால்தான் நிகழ வேண்டும்’’ என்பது அவன் பெற்ற வரம். கடுமையாகத் தவமிருந்து அருமையாக இப்படியொரு வரத்தை வாங்கியவன் சும்மா இருப்பானா? நல்லவர்களையும் அப்பாவிகளையும் துன்புறுத்தினான்.
அப்போது, தட்சிணாமூர்த்தி வடிவில் தவத்தில் இருந்தார் சிவபெருமான். உடன் அம்பாளும் தவத்தில் இருந்தாள். அவரிடம் முறையிட்டனர் தேவர்கள். ‘பெண் சம்பந்தம் இல்லாதவனால் மரணம்’ என்று பத்மாசுரன் வரம் கேட்டிருந்ததால், தன் நெற்றிக்கண்ணில் இருந்து 6 தீப்பொறிகளை உருவாக்கினார் சிவபெருமான். அவற்றை வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தார். சரவணப் பொய்கையில் இருந்த தாமரை மலர்களை அந்தத் தீப்பொறிகள் சென்றடைந்ததும் 6 மலர்களிலும் 6 குழந்தைகள் தோன்றின. அவர்களை எடுத்து வளர்க்க 6 கார்த்திகைப் பெண்களை அனுப்பினார் பிரம்மா. 6 கார்த்திகைப் பெண்களும் 6 குழந்தைகளையும் பாலூட்டி தாலாட்டி சீராட்டி வளர்த்தனர். அங்கு சென்ற பார்வதி தேவி அந்த 6 குழந்தைகளையும் ஒன்றாகச் சேர்த்து அரவணைத்தார். அப்போது, 6 குழந்தைகளும் ஒரே உருவமாகி, பன்னிரு கரங்களுடன் ஆறுமுகமாக, ஆறுமுகனாகக் காட்சியளித்தார் என்பது புராணம்.
முருகன் அவதரித்த விசாக நட்சத்திரம், குரு பகவானுக்கு உரியது. எனவே குருதிசை, குருபுத்தி, குருவால் ஏற்படும் தடங்கல்கள் எல்லாம் நீங்குவதற்கு, இந்நாளில் முருகன் கோயில்களிலும் குரு ஸ்தலங்களிலும் பரிகார பூஜை செய்து பக்தர்கள் வழிபடுகிறார்கள். திருச்செந்தூரில் குருவின் அம்சமாகவே முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். வைகாசி விசாக தினத்தன்று தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானை வழிபட்டால் பகைவர்கள் விலகி ஓடுவார்கள். திருஷ்டி, தோஷங்கள் விலகும். குடும்பத்தில் இருக்கும்
கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். காரியத் தடை விலகும் என்பது நம்பிக்கை.
குழந்தை பாக்கியம் வேண்டுவோர் வைகாசி விசாக நன்னாளில் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோயிலுக்குச் சென்று மனமுருகிப் பிரார்த்தித்தால் அடுத்த ஆண்டு வைகாசி விசாகத்துக்குள் குழந்தை பாக்கியத்தை முருகன் கட்டாயம் வழங்குவான் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வைகாசி விசாகத்தன்று பிறக்கும் குழந்தைகள் அறிவிலும் கலை, கல்வி, கேள்விகளிலும் வித்தைகளிலும் சிறந்து விளங்குவர் என்பார்கள்.
திருமணத் தடைகள், தடங்கல் களையும் நீக்கி சுபகாரியத்தைக் கைகூடச் செய்கிறான் வேலவன். திருமணம் ஆகாத பெண்கள் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட்டால் திருமணத் தடைகள், தடங்கல்கள் நீங்கி விரைவில் சுபகாரியம் கைகூடும். திருமணம் கைகூட வேண்டி ஆண்களும் விரதம் இருக்கிறார்கள். பால் காவடி எடுத்து ஆறுமுகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
ஜாதக அமைப்பின்படி குரு திசை, செவ்வாய் திசை நடப்பவர்கள் குரு நீச்சம், செவ்வாய் நீச்சம் பெற்றுள்ளவர்கள் முருகனை வழிபட அனைத்து விதமான தடங்கல்களும் நீங்கப்பெறுவார்கள். வாழ்நாளின் பெரும் பகுதியை சொத்துப் பிரச்சினை, வழக்கு, நீதிமன்றம், பாகப் பிரிவினை என்றே செலவிடுபவர்கள் அவை எல்லாவற்றையும் தூக்கி தூர வைத்துவிட்டு, வைகாசி விசாகத்தன்று மனதார அந்த தண்டாயுதபாணியை வழிபட்டால், எதிர்ப்புகள் எல்லாவற்றையும் அவன் தவிடுபொடியாக்கி, நல்வழி காட்டுவான். வைகாசி விசாகத்தன்று சண்முகனைத் தொழுது சகல நலன்களும் பெறுவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT