Published : 31 Mar 2016 12:23 PM
Last Updated : 31 Mar 2016 12:23 PM
விலங்குப் பிறவி, நரகப் பிறவி, தேவப் பிறவி, மனிதப் பிறவி ஆகிய நான்கு பிறவிகளும் தத்தம் வினைகளுக்கேற்ப மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு பிறவியில் பிறக்கின்றன. அவை பிறந்து பிறந்து துன்பங்களையும் அனுபவிக்கின்றன. தெய்வப் புலவர் “இடுக்கண் வருங்கால் நகுக”, “இலக்கம் உடம்பு இடும்பைக்கு”, “இடும்பை இயல்பு என்பான்” என்றெல்லாம் துன்பத்தைப் பற்றி எடுத்தியம்பி உள்ளார். இத்துன்பம் தன்னியல்புத் துன்பம், மனோ துன்பம், ஆகந்துத் துன்பம், உடல் துன்பம் என நான்கு வகைப்படும்.
தன்னியல்புத் துன்பம்
இது ஒவ்வொரு பிறவிக்கும் தானாகவே தோன்றுகிறது. விலங்கு கதியில் பிறக்கும்பொழுது அவ்விலங்கு இயல்பாகவே பயத்தைக் கொண்டிருக்கும். இது விலங்குகளின் தன்னியல்புத் துன்பமாகும். உயிர், நரக கதியில் பிறக்கும் பொழுது, நரகர்கள் உயரே எழும்பி எழும்பித் தலைகீழாக விழுந்து விழுந்து துன்புறுவர். இது நரக கதியில் நரக உயிர்களுக்குரிய தன்னியல்புத் துன்பமாகும். தேவ கதியில் பிறந்த உயிர், தான் எப்பொழுது இறந்துவிடுவோமோ என்ற மரண பீதியில் துயரத்தை அனுபவித்துக்கொண்டேயிருக்கும். இதுவே தேவ பிறவியின் தன்னியல்புத் துன்பம் ஆகும். மனித கதியில் பிறந்த உயிர் தன் குடும்பத்தைப் பராமரிப்பதிலேயே துன்பப்பட்டுக்கொண்டு இருக்கும். இத்துன்பமே மனிதப் பிறவிக்குத் தன்னியல்புத் துன்பமாகும்.
மனோதுன்பம்
மனத்தை உடைய உயிர்களுக்கு அவற்றின் மனதில் தோன்றும் துன்பம் மனோதுன்பம் என்று அழைக்கப்படும்.
ஆகந்துகத் துன்பம்
மனதில் ஒன்றை நினைத்து, நிகழ்வது வேறொன்றாக இருக்கும்போது ஏற்படும் துன்பமே ஆகந்துகத் துன்பம். அது இடையில் வரும் துன்பம்.
உடல் துன்பம்
இது உடல்களில் உண்டாகும் துன்பம் ஆகும்.
இந்தத் துன்பங்களைக் கொண்டுள்ள உயிர்கள் அறநெறியை அரவணைத்து நிலை பெற்றுவிட்டால் துன்பங்களுக்குக் காரணமான பிறவியெடுப்பது நீங்கும். பிறவிப் பெருங்கடல் நீந்தி இறைவன் அடிசேர்ந்து உயிர்கள் என்றும் பிறவா ஆன்ம சுகம் அடைய முடியும்.
“மனத்திடைப்பிறக்கும் துன்பம் வந்துறு மவற்றின் துன்பம்
தனுத்தனில் பிறக்குந் துன்பம் தானியல் பாய துன்பம்
எனச் சொலப் பட்ட நான்கும் யாவர்க்கு மாகும் இன்ன
நினைத்தறம் புணரின் நின்ற தீக்கதி நீங்கு மென்றேன்”
- மேரு மந்தர புராணம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT