Published : 17 Mar 2016 11:06 AM
Last Updated : 17 Mar 2016 11:06 AM
சேர சோழ பாண்டிய நாட்டு கோயில்களைப் போல் கொங்கு நாட்டில் சிறப்பு பெற்ற தலம் நட்டாற்றீஸ்வரர் கோயில். ஈரோட்டிலிருந்து கொடுமுடி வழியாக கரூர் செல்லும் வழியில் காங்கேயன் பாளையம் என்ற ஊரில் உள்ள இத்தலத்தின் இரு புறமும் காவிரி ஆறு சுழித்துக்கொண்டு ஓடுகிறது. சாவடிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பரிசல் துறைக்குச் சென்று நடுஆற்றில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்குச் செல்லலாம்.
சித்திரை முதல் நாள் அன்று சிவனுக்குத் தயிர் கலந்த கம்பங்கூழ் நைவேத்யமாகப் படைக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோயிலுக்குச் செல்பவர்கள் வருடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் ஆற்றை பரிசலில் கடந்து சென்றுதான் தரிசனம் செய்துவர வேண்டும்.
அகத்தியரால் மணலில் வடிக்கப்பட்ட லிங்கமாக இத்தல இறைவன் இருப்பதால், இதை பிருத்வி (மண்) தலமாகக் கருதி வழிபடும் வழக்கமும் உண்டு.
சிவபெருமானுக்கு இமய மலையில் திருமணம். உலகமே குவிந்ததால் உலகம் சமநிலை இழந்தது. சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்து பொதிகை மலை சென்று உலகை சமப்படுத்தக் கட்டளையிட்டார். வாதாபி - வில்வலன் இருவரும் அசுரர்கள். தவசிகளின் வயிற்றுக்குள் ஏதோ ஒரு வடிவில் புகுந்து, வயிறைக் கிழித்து வெளியேறி, அவர்களை உணவாக உண்ணும் வழக்கமுடையவர்கள். அவர்கள் பொதிகை நோக்கிச் சென்ற அகத்தியரைக் கண்டனர்.
அவரையும் வழக்கப்படி உணவாக்கிக் கொள்ளத் திட்டமிட்டனர். வாதாபி ஒரு மாங்கனியாக மாறினான். அதை ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வில்வலன், சிவனடியார் வேடத்தில் அகத்தியர் முன் சென்றான். அவரிடம், “சிவனின் கட்டளைக்காக தென்திசை செல்லும் தாங்கள், என் உபசரிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என வேண்டி மாங்கனியைக் கொடுத்தான். அவரும் அதைச் சாப்பிட்டுவிட்டார். அப்போது, வில்வலன் அகத்தியரின் வயிற்றுக்குள் இருந்தவனை, “வாதாபி வா” என அழைத்தான். ஞானத்தால் இதையறிந்த அகத்தியர், “வாதாபி ஜீரணோத்பவ!” எனச் சொல்லி வயிற்றைத் தடவினார். மாங்கனி வடிவில் வயிற்றின் உள்ளே சென்ற வாதாபி ஜீரணமாகிவிட்டான். வாதாபி வெளியே வராததைக் கண்டு கோபம் கொண்ட வில்வலன், சுயவடிவமெடுத்து அகத்தியரை அழிக்க முயன்றான். அகத்தியர் கமண்டல நீர் தெளித்து அவனை அழித்தார்.
பின்னர் தென்னாடு சென்று இறைவன் கட்டளைப்படி பூமியைச் சமப்படுத்தினார். சிவபெருமானின் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தைப் பார்க்க முடியாத அகத்தியருக்கு அவர் வேண்டிய தலங்கள்தோறும் திருமணக் காட்சி தந்து அருளினார் சிவனார்.
அசுரனாக இருந்தாலும் அவர்களைக் கொன்றதால் அகத்தியருக்கு அசுரஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க, காவிரியின் உற்பத்தி ஸ்தானம் முதல் கடலில் கலக்கும் முகத்துவாரம் வரையுள்ள காவிரி ஆற்றின் மையப்புள்ளியும் காவிரி நடுவில் உள்ள இடத்தில் மணலில் லிங்கம் செய்து சிவ பூஜை செய்ய பாவம் போகும் என உணர்ந்தார். காவிரி ஆற்றின் நடுவில் பூஜை செய்ய இடம் தேர்ந்தெடுக்க காவிரி ஆற்றங்கரையோரம் அகத்தியர் சென்ற போது முருகன் முன் வந்து அகத்தியரை அழைத்து வந்து நடு இடத்தைத் தேர்ந்து காட்டினார். காவிரி ஆற்றின் நடுவில் இருந்த அந்தக் குன்றில் மணலில் லிங்கம் ஒன்றைப் பிடித்து வைத்து பூஜை செய்தார். காட்டில் விளைந்திருந்த கம்பை எடுத்து கையால் திரித்து மாவாக்கி, நீர் விட்டுக் காய்ச்சிப் படைத்தார்.
அகத்தியரின் அன்பில் கட்டுண்ட சிவபெருமான், “இத்தலத்தில் இனி நாம் சிவ குடும்பமாக கொலுவிருக்கப் போகிறோம், அல்லல் பட்டு ஆற்றாது நிர்கதியாய் நட்டாற்றில் நிற்பவற்கு அருளும் வகையில் இங்கு துணையாக இருந்து அருளப் போகிறோம், நீர் உம் பயணம் தொடர்க!” என்றார்.
அகத்தியர் தமிழ் வளர்க்க தென் பொதிகை சென்றார். கம்பு கூழ் படைக்கப்பட்ட அந்த மணல் லிங்கமும் அப்படியே இறுகிப்போனது. ஆற்றின் நடுவில் அகத்தியரால் வணங்கப்பட்ட அந்த சிவலிங்கம் நடு ஆற்றில் குடி கொண்டதால், ‘நட்டாற்றீஸ்வரர்’ எனவும் அகத்தியரால் மண்ணால் பிடித்து வைத்து வணங்கப்பட்டதால் அகத்தீஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார். சிவலிங்கம் இருந்த இடத்தில் விமானமும் கட்டப்பட்டது.
அருகில் உமையம்மை நல்லநாயகி என்ற பெயரோடு, சிவன் சந்நிதிக்கு வலப்புறம் இருக்கிறாள். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நற்பலன்களைத் தருபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். அன்னபூரணி என்றும் பெயருண்டு.
இந்தக் கோயிலில் முருகன் வலது காலை முன்வைத்தும் இடக்காலை பின் வைத்தும் நடப்பது போன்ற பாவனையில் காட்சி தருகிறார். இடது கையில் கிளி ஒன்றை வைத்திருப்பது வித்தியாசமான தரிசனம். இது ‘தகப்பன் சாமி’ எனப் பெயர் பெற்ற முருகப் பெருமானின் ஞானக் கோலம். கோயில் வளாகத்திலுள்ள பாறை மீது தல விருட்சம் ஆத்திமரம் இருக்கிறது. மிகவும் பழமையான இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என குறிப்பிடப்படுகிறது.
இம்மரத்தின் கீழே தல விநாயகராகக் காவிரி கண்ட விநாயகர் இருக்கிறார். தினமும் காலை 6.30 மணி முதல் இரவு 7.00 மணிவரை திருக்கோயில் தரிசனத்திற்காக திறந்திருக்கும். அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
சித்திரை முதல் நாள், ஆடிப்பெருக்கு மற்றும் கார்த்திகை கடைசி திங்களன்று சுவாமிக்கும் ஆடிப்பூரத்தன்று மதியத்தில் நல்ல நாயகி அம்பாளுக்கும் 108 சங்காபிஷேகம் நடக்கும்.
காவிரியாற்றின் நடுவில் அமைந்த தலம் என்பதால், ஆடிப்பெருக்கன்று சிவனுக்குக் காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அன்று கமண்டலத்தின் மூலம் காவிரி நதியைக் கொண்டு வந்த அகத்தியருக்குத் தலைப்பாகை மற்றும் வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.
நவராத்திரி முடிந்த விஜயதசமியன்று கொலுவில் இருந்த அம்பாள் , பரிசலில் எழுந்தருள்வாள். ஆருத்ரா அன்று பதஞ்சலியும் வியாக்ரபாதரும் இங்கு வந்து தரிசனம் செய்ததாகவும் அதன் அடிப்படையில் நடராஜருக்கு ஆருத்ரா விசேஷ பூஜை நடக்கும். அன்று ஒரு பரிசலில் நடராஜரும் மற்றொரு பரிசலில் மேள வாத்தியங்கள் முன் செல்ல காவிரி நதியில் கோயிலைச் சுற்றி வருவார். மாலையில் திருக்கல்யாண வைபவம் நடக்கும். குடல் வயிறு தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் வந்து வழிபட்டுச் செல்லும் தலமாக இது உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT