Published : 12 Nov 2021 12:13 PM
Last Updated : 12 Nov 2021 12:13 PM
ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
உண்மையை விரும்பும் நீங்கள், மறைத்துப் பேசுபவர்களைக் கண்டால் கோபப்படுவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்ததுடன், வி.ஐ.பிக்கள் மத்தியில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத் தந்த குருபகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். பத்தாம் இடமென்றால் பதவியைப் பறித்துவிடுவாரே! கையில் காசுபணம் தங்காதே! என்றெல்லாம் பதட்டப்படாதீர்கள். ஒரளவு நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியையும் தர வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்கும் சூழ்நிலை ஏற்படும்.
இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற படபடப்பெல்லாம் இருக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைக்கும் ஆளாவீர்கள். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். தன்னம்பிக்கை குறையும். முக்கியக் கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உறவினர்களில் சிலர் மதிக்காமல் நீங்குவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். சின்னச் சின்ன அவமானங்கள் வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். விலையுயர்ந்த நகை, பணத்தை இழக்க நேரிடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.
குரு உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும். குரு ஏழாம் பார்வையால் நான்காம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். கை, கால், முதுகு வலியிலிருந்து தாயார் விடுபடுவார். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். புது வீட்டில் குடி புகுவீர்கள். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். இருவரும் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். நவீன ரக வாகனம், செல்போன் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். குரு ஆறாம் வீட்டைப் பார்ப்பதால் மாதக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும்.
13.11.2021 முதல் 30.12.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உங்களின் பலவீனத்தைச் சரி செய்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். மாமனார், மாமியார் உதவுவார்கள். பூர்விகச் சொத்திலிருந்த வில்லங்கம் பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாக முடியும்.
31.12.2021 முதல் 02.03.2022 வரை சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மறைமுக எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். பங்குவர்த்தகம் மூலம் பணம் வரும். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். சொத்து சேரும். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள்.
02.03.2022 முதல் 13.04.2022 வரை குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். புதிய பொறுப்புகள், பதவிகளை ஏற்க வேண்டாம்.
அதிக வட்டிக்கு கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள். வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். பாக்கிகளை வசூலிப்பதில் கடுமை காட்டாதீர்கள். முடிந்தவரை கடன் தருவதை தவிர்க்கப் பாருங்கள். உத்தியோக ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு அமர்வதால் வேலைச்சுமை இருக்கும்.
நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். வேலையை விட்டுவிடலாமென்ற எண்ணம் வரும். அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. உங்களுக்காக பரிந்து பேசிய உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். இந்தக் குரு மாற்றம் உங்களைக் கொஞ்சம் செம்மைப்படுத்துவதற்கு உதவுவதுடன், சமூகத்தில் வளைந்துக் கொடுத்துப் போகும் கலையைக் கற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் உள்ள தென்குடித்திட்டையில் வீற்றிருக்கும் ஸ்ரீபசுபதிநாதரையும், ஸ்ரீதட்சணாமூர்த்தியையும் அனுஷம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும். |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment