Published : 17 Mar 2016 11:03 AM
Last Updated : 17 Mar 2016 11:03 AM
புஷ்பக விமானத்தில் ஏறி மனித உடலுடன் தருமன் சொர்க்கம் சென்றான். சொர்க்கத்தில் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. துரியோதனனும் மற்ற கெளரவர்களும் சொர்க்கத்தில் இருந்தார்கள். தன் தம்பிகள், திரௌபதி, அபிமன்யு ஆகியோரை அவன் கண்கள் தேடின. அவர்களைக் காணவில்லை. பாண்டவர்கள் இல்லாத அந்த சொர்க்கத்தில் கெளரவர்கள் சூரியனைப் போலப் பிரகாசித்துக்கொண்டு களங்கமற்ற மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கண்டு அவன் மனம் பொறுக்கவில்லை.
தன்னுடன் வந்த தேவதூதர்களைப் பார்த்து, “என்னுடைய தம்பிகள் எங்கே? அவர்கள் இருக்கும் இடத்துக்குப் போக விரும்புகிறேன்” என்று சொல்லி அங்கிருந்து திரும்பினான். “அவர்களிடம் போக நீங்கள் விரும்பினால் அழைத்துச் செல்கிறோம்” என்று சொன்ன தேவதூதர்கள், தருமனை வேறு இடத்துக்குக் கூட்டிச் சென்றார்கள்.
தேவதூதர்கள் சென்ற வழி இருள் சூழ்ந்திருந்தது. தருமனின் கண்களில் பட்ட காட்சியெல்லாம் பயங்கரமாக இருந்தன. வழியெங்கும் ரத்தமும் மாமிசமும் கலந்த சேறு ஆறாக ஓடியது. பிணங்களும் எலும்புகளும் ரோமங்களும் நாலாபுறங்களிலும் கிடந்தன. எங்கும் புழுக்கள். சகிக்க முடியாத நாற்றம். வெட்டப்பட்ட கைகளும், கால்களும் தலைகளும் சிதறிக் கிடந்தன. துர்நாற்றத்தைச் சகிக்க முடியவில்லை. எங்கும் இருள். நாற்றம். அழுக்கு. கோரம். தருமனால் தாங்க முடியவில்லை. அந்த இடத்தில் நிற்க முடியவில்லை. அந்த இடத்தை விட்டுத் திரும்பிப் போக நினைத்தான். அவன் வேகமாகத் திரும்பும்போது ஒரு குரல் அவனை நிறுத்தியது.
நான் கர்ணன், நான் பீமசேனன்
“தருமபுத்திரரே! இங்கிருந்து போகாதீர்கள். கொஞ்ச நேரமாவது இங்கே நில்லுங்கள். நீங்கள் இங்கே வந்தபோது நல்ல மணம் நிறைந்த காற்று எங்கள் மீது வீசியது. எங்கள் வலியும் வேதனையும் குறைந்தன. இன்னும் சிறிது நேரம் நீங்கள் இங்கே நின்றால் எங்கள் வேதனை குறையும். கருணை காட்டுங்கள். போகாதீர்கள்” என்றது அந்தக் குரல். மிகவும் பரிதாபமாக ஒலித்த அந்தக் குரலைக் கேட்டு தருமன் ஸ்தம்பித்து நின்றான். மேலும் பல குரல்கள் அழுது புலம்பின. அந்தக் குரல்களைக் கேட்ட ஞாபகம் தருமனுக்கு இருந்தது. “நீங்கள் எல்லாம் யார்?”என்று கேட்டான்.
“நான் கர்ணன்” என்றது ஒரு குரல். “நான் பீமசேனன்” என்றது மற்றொரு குரல். “நான் அர்ச்சுனன்” என்று இன்னொரு குரல் ஒலித்தது. “நான்தான் உங்கள் மனைவி திரௌபதி” என்று வேதனையுடன் ஒலித்தது ஒரு பெண் குரல். தொடர்ந்து நகுலன், சகாதேவன் குரல்களும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டன. திரெளபதியின் புதல்வர்களின் குரல்களும் கேட்டன.
நாலாபுறங்களிலிருந்தும் எழுந்த அந்தத் தீனக் குரல்களைக் கேட்டுத் தாங்க முடியாத துயரத்தை அடைந்தான் தருமன். “ஐயோ இவர்கள் எல்லோரும் என்ன பாவம் செய்தார்கள்? கெளரவர்கள் எல்லோரும் சொர்க்கத்தில் இருக்க, இவர்கள் ஏன் நரகத்தில் இருக்கிறார்கள்?” என்று புலம்பினான்.
தருமனுடன் வந்த தேவதூதர்கள், சொர்க்கத்துக்குத் திரும்ப வேண்டும் என்று நினைவுபடுத்தினார்கள். அவர்களை நோக்கித் திரும்பிய தருமன், “நான் வரவில்லை. எனக்குப் பிரியமானவர்களுடன் நான் இங்கேயே இருக்கிறேன். நீங்கள் போகலாம்” என்றான்.
“உங்களுக்கு சொர்க்கத்தில் இடம் இருக்கிறது. வாருங்கள்” என தூதர்கள் மீண்டும் அழைத்தார்கள். “என் மீது அன்பு கொண்டவர்கள் அனைவரும் இங்கே இருக்கிறார்கள். இவர்களை விட்டுவிட்டு சொர்க்கத்திற்கு வர நான் விரும்பவில்லை. இந்த நரகத்தையே விரும்புகிறேன்” என்று சொல்லிவிட்டான் தருமன்.
ஒரு முகூர்த்த காலம் அப்படியே கழிந்தது. அதன் பிறகு அந்த இடத்தில் ஒளி மெல்ல ஊடுருவியது. ஒளிக்கற்றை வந்த திசையைப் பார்த்தான் தருமன். இந்திரனும் யமதேவனும் தருமன் இருந்த இடம் நோக்கி வந்தார்கள். அவர்கள் நெருங்க நெருங்க இருள் விலகியது. அவர்கள் வந்துசேர்ந்ததும் இருள் முற்றிலுமாக விலகிப் பொன்னிற ஒளி எங்கும் பரவியது. துர்நாற்றம் நீங்கியது. பிணங்கள், மாமிசக் குவியல்கள், வெட்டப்பட்ட கைகள், ரத்தச் சகதி மறைந்தது. நறுமணம் பரவியது. தருமன் வியப்புடன் அவர்களைப் பார்த்தான்.
தருமதேவதையாகிய யமதர்ம ராஜன், “மகனே, நீ கண்டது அனைத்தும் மாயை. எல்லாம் என்னால் உருவாக்கப்பட்டவை. உன்னுடைய உடன்பிறப்புகளுக்காக நீ நரகத்திலேயே இருக்க விரும்பினாய். இது நான் உனக்கு வைத்த இறுதிச் சோதனை. அதிலும் நீ தேறிவிட்டாய்” என்றான்.
தருமனுக்கு வந்த சோதனை
ஒரு முகூர்த்த காலத்துக்கு தருமன் நரக வேதனையை அனுபவித்தது அவனுடைய கர்ம வினைப் பயன் என்று இந்திரன் கூறினான். அரசர்கள் அனை வரும் நரகத்தைக் காண வேண்டும் என்பது விதி. தருமன் எவ்வளவுதான் தருமவானாக, புண்ணியம் செய்தவனாக இருந்தாலும் அவன் செய்த சிறிதளவு பாவங்களுக்காகவே ஒரு முகூர்த்த காலம் நரகத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது என்று இந்திரன் விளக்கினான்.
வனவாசத்தின்போதும், இறுதி யாத்திரையின்போதும் தருமனைச் சோதித்த அவன் தந்தை தருமராஜன், சொர்க்கத்திலும் அவனைச் சோதித்தான். தருமன் அந்த மூன்று சோதனைகளிலும் தேறித் தனது பெயருக்கு ஏற்ப வாழ்ந்துகாட்டினான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT