Published : 10 Mar 2016 12:39 PM
Last Updated : 10 Mar 2016 12:39 PM
தன்னையே நினைந்துருகி நின்ற பக்தனின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து சுயம்புவாய் தோன்றிய சிவன் குடிகொண்டிருக்கும் திருத்தலம் இது.
தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்திருக்கும் சிறுநகரம் உத்தமபாளையம். நீர்வளமும் நிலவளமும் செழித்த ஊர். பதினாறாம் நூற்றாண்டில் பாண்டி நாட்டை ராணி மங்கம்மாள் ஆட்சி செய்தார். அப்போது அவருக்கும் திரிவிதாங்கூர் மன்னர் ரவிவர்மனுக்கும் எல்லைப் பிர்ச்சினை தொடர்பாக உத்தமபாளையம் பகுதியில் போர் நடைபெற்றது. அப்போரின் போது பிச்சை பிள்ளை என்பவர் பாளையத்தின் கணக்குப் பிள்ளையாக இருந்தார்.
கணக்கரின் பக்தி
சிவபக்தரான பிச்சை கணக்கர், திருப்பதிக்கு அருகிலுள்ள திருக்காள ஹஸ்தியில் கோயில் கொண்டிருக்கும் காளஹஸ்தீஸ்வரரை, மாசி மகா சிவராத்திரி அன்று வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தார். முதுமை காரணமாக ஒரு கட்டத்தில் அவரால் காலஹஸ்திக்குப் பயணம் செய்யமுடியாத சூழல் ஏற்பட்டது. இதைத் தாங்கமுடியாத பிச்சை கணக்கர், உணவு, உறக்கம் மறந்து காளஹஸ்தீஸ்வரையே நினைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு நாள் அவரது கனவில் அந்தணக் குழந்தையாய் காட்சி கொடுத்த சிவபெருமான், ‘பாளையத்திற்கு அருகே காட்டூரில் வில்வ வனத்தில் ஒரேயொரு பூ பூத்திருக்கும் வெள்ளை அரளி மரத்தின் அடியில் நான் சுயம்புவாக இருக்கிறேன். என்னை எடுத்துவந்து உனக்கு அருகிலேயே வைத்து வழிபடலாம்’ என்று சொன்னாராம். இதையடுத்து ஊர் மக்களைத் திரட்டிக் கொண்டு வில்வ வனம் சென்ற பிச்சை கணக்கர் அங்கே, கனவில் சொன்னது போலவே ஒற்றை அரளிப் பூ மரத்தின் அடியில் சிவலிங்கம் இருந்ததைப் பார்த்து பேரானந்தம் கொண்டார்.
வெள்ளை அரளி மரத்தினடியில் சிவலிங்கம்
உடனே அந்த சிவலிங்கத்தை ஒரு கட்டை வண்டியில் ஏற்றி ஊருக்குள் எடுத்து வந்தனர் மக்கள். வழியில் ஓரிடத்தில் வண்டியின் அச்சு முறிந்து போனது. எவ்வளவோ முயற்சி செய்தும் வண்டியை அதற்கு மேல் நகர்த்த முடியவில்லை. இதுவும் இறைவன் சித்தம் தானோ என நினைத்த மக்கள், திருக்காளத்தீஸ்வரரை அவ்விடத்திலேயே கோயில் எழுப்பி பிரதிஷ்டை செய்தனர். இவ்வாலயத்தில் அம்பாள் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக ஸ்தபதிகளை வைத்து சிலை வடித்தார்கள் மக்கள். ஆனால், ஒழுங்கான உருவம் வராமலும் சிதைந்தும் போனதால் ஸ்தபதிகள் பலமுறை முயற்சி செய்தும் அம்பாளுக்கு சிலை வடிக்கமுடியாமல் போனதாம்.
இதனால் சஞ்சலப்பட்டுப் போன ஊர் மக்களும் பிச்சை கணக்கரும் திருக்காளத்தீஸ்வரிடம் வந்து மனமுருக வேண்டினர். அப்போதும் பிச்சை கணக்கர் கனவில் காட்சியளித்த சிவபெருமான், ’சஞ்சலம் வேண்டாம்.. இன்னும் சில நாட்களில் முல்லை ஆற்றில் வெள்ளம் புரண்டு வரும். அந்த வெள்ளத்தில் மூங்கில் கூடை ஒன்று மிதந்து வரும். அந்தக் கூடைக்குள் அம்பாள் இருப்பாள்.’ என்று சொன்னாராம்.
அதன்படியே அடுத்த சில நாட்களில் முல்லை ஆற்றில் வெள்ளமும் வந்தது. அதில் மூங்கில் கூடையும் மிதந்து வந்தது. ஆர்வத்தோடு மக்கள் அந்தக் கூடையை எடுத்துப் பார்த்தார்கள். அதனுள்ளே அம்பாள் சிலையும் விநாயகர் சிலையும் இருந்தது. அந்தச் சிலைகளைக் கொண்டு வந்து திருக்காளத்தீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர்.
இங்கே ஞானாம்பிகையாக பெயர் விளங்கும் அம்பாள் மேன்மையான கல்விச் செல்வத்தை அளிப்பதுடன் பெண்களுக்குத் திருமணத் தடைகளை நீக்கி திருமணத்தை நடத்தி வைப்பதாகவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. திருக்காளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரரே இங்கு குடிகொண்டிருப்பதால் இதை தென் காளஹஸ்தி என்று சொல்கிறார்கள். காலஹஸ்தி செல்லமுடியாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அதற்குரிய பலனை அடையலாம் என்பது நம்பிக்கை.
படங்கள்: பேபி சாரா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT