Last Updated : 26 Jun, 2014 03:34 PM

 

Published : 26 Jun 2014 03:34 PM
Last Updated : 26 Jun 2014 03:34 PM

திருப்புகழைப் பாடப் பாட...

தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் மீது அளவு கடந்த பக்தி வைத்து உருகிய பக்தர்கள் பல காலகட்டங்களில் வாழ்ந்துள்ளனர். அவர்களில் என்றும் நிலைத்து நிற்ககூடிய பெயர் அருணகிரி நாதர்.

கி.பி. 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், முருகக் கடவுள் பற்றி ஏராளமான பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவரைப் போல் பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு எவரும் இல்லை. கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தவை இவரது பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழ் பாடல் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.

அருணகிரி நாதரின் சொந்த ஊர் திருவண்ணாமலை என்றும், காவிரிப்பூம்பட்டினம் என்றும் இருவேறு கருத்துக்கள் உலா வருகின்றன.

இவரது தந்தை பெயர் திருவேங்கட்டார் என்றும் தாயார் முத்தம்மை என்றும் சொல்கிறார்கள். அருணகிரி திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்று சரிவர கணிக்கப்படவில்லை.

அருணகிரி இளமையிலே தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணம் நடைபெற்றது. ஆனாலும் குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவு காரணமாக வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார்.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தேறியது. ஒரு பெரியவர் அருணகிரியை பார்க்கிறார். அவர் வேறு யாருமில்லை, அருணாசலேஸ்வரர் என்றும் குமரக் கடவுள் என்றும் சொல்லப்படுகிறது.

அந்தப் பெரியவர் அருணகிரிக்கு, குன்றுதோறும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்ற சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார்.

ஆனால், அப்போது குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்க்கவில்லை. பெரியவரின் பேச்சும், குழப்பமான மனதும் அவரை மேலும் குழப்பமாக்கியது.

குழப்பமும் கவலையும் சேர்த்த முகத்தோடு திருவண்ணாமலை வருகிறார். அங்கு கோபுர வாசலில் தவம் இருந்த அருணகிரி கோபுரம் மீது ஏறிக் கீழே குதிக்கிறார்.

அப்போது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்கள் வேறு யாருடையதுமில்லை, திருக்குமரனே. அதோடு வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அவருக்கு காட்சி அளித்தார். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சிக்குச் சென்றார்.

முருகப் பெருமான் அவரை, “அருணகிரிநாதரே, என அழைத்துத் தன்னுடைய வேலால் அவரது நாவிலே 'சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து அருளினார். உடனே யோக மார்க்கங்களும், மெய்ஞானமும் அவருக்கு வந்தது. சித்தமும் தெளிந்தது.

அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்த விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்ற மன்னன் அருணகிரிக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அறிந்தார்.

அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்ய வேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு ஏற்படுகிறது. அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அரசரைப் பெரிதும் கவர்ந்தன.

அருணகிரி மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான், முருகன் அடிமை என்று சொல்லிக் கொண்டு திரியும் அருணகிரி, முருகனை நேரடியாக வர வைக்க முடியுமா” என்று அரசரிடம் சவால் விடுகிறார். இதை ஏற்றுக்கொண்ட அருணகிரி, கந்தவேலை மனதில் தியானித்து அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் திருப்புகழைப் பாட ஆரம்பித்தார்.

பாடி முடித்ததுதான் தாமதம். மயில்வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேலோடு அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைந்தார்.

கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினார். இப்படி முருகப் பெருமானையே வரவழைத்த அருளாளர் அருணகிரி நாதர்.

இவர் பாடிய திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு ஆகியவை இவரது பக்தியின் ஆழத்தையும் தமிழ்ச் சுவையையும் எடுத்துரைக்கும் பாடல்களாகும்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x