Published : 10 Mar 2016 12:13 PM
Last Updated : 10 Mar 2016 12:13 PM
சென்னையில் நிவாச பெருமாள் வேதாந்த தேசிகர் திருக்கோயிலில், பத்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் அன்னகூட வைபவம் இந்த ஆண்டு 13.03.2016, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
சென்னையில் பத்து ஆண்டுகளுக்கு முன் மழை பொய்த்து மிகப் பெரிய வறட்சி ஏற்பட்டது. அப்போது நிவாச பெருமாளுக்கு அன்னகூட நிவேதனங்கள் செய்தால் மழை பொழியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் கோயிலில் அன்னகூடத் திருப்பாவாடை நிகழ்ச்சி தொடங்கி ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்ச்சி நிவாச பெருமாள் வேதாந்த தேசிகர் கைங்கரிய டிரஸ்டின் சார்பில் நடைபெற்றுவருகிறது.
இந்த விழா நடைபெறும் நாளில் முதலில் தேவி, பூதேவி சமேதரான நிவாஸ பெருமாளுக்கு திருமஞ்சனமும் அலங்காரமும் நிகழும். பின்னர் இந்தத் தெய்வத் திருஉருவங்களின் முன்னிலையில் அன்னம், இனிப்பு உள்ளிட்ட பட்சணங்கள் அடுக்கி வைக்கப்படும். இவற்றில் இருநூறு கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட அன்னம், சாம்பார், நாற்பது கிலோ சக்கரைப் பொங்கல், நாற்பது கிலோ தயிர் சாதம், திருப்பதி லட்டு, ரவா லட்டு, மைசூர்பாகு, பாதாம் அல்வா, பால் அல்வா, பாதுஷா, முந்திரி கேக், அப்பம், அதிரசம், வெல்ல லட்டு, மனோகரம், கார பேடா மற்றும் தேன்குழல் ஆகியவை வைக்கப்படும். பிறகு இந்த உணவுப் பண்டங்கள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும்.
காலை ஒன்பது மணிக்குத் தொடங்கும் இந்த வைபவம், பதினொரு மணியளவில் திருப்பாவாடை சமர்ப்பித்தல், தீர்த்தம், சடாரி, பிரசாதம் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை 6.30 மணிக்குப் பெருமாள், சுவாமி தேசிகன் விசேஷ திருவீதி புறப்பாடு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT