Last Updated : 31 Mar, 2016 11:56 AM

 

Published : 31 Mar 2016 11:56 AM
Last Updated : 31 Mar 2016 11:56 AM

கிராம தெய்வங்கள்: காட்டுக்குள் உருவெடுத்த செல்லியம்மன்

பலருக்கு குல தெய்வமாக இருப்பது காட்டுக்குள் இருக்கும் அம்மன். வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் முதலில் அந்த அம்மனுக்குப் பொங்கலிட்டு வழிபடுவார்கள். பிள்ளைச் செல்வம் வரம் வேண்டுவோர் ஒன்பது வாரம் வந்து வணங்கி பலன் பெற்று குழந்தைக்கு, ‘செல்லன்’ ‘செல்லி’ எனப் பெயர் சூட்டி மொட்டை அடித்துக் காது குத்துவார்கள். நோய் நொடி தீர வெற்றிலை மாலை சார்த்துவார்கள். திருமணத் தடை நீங்க வேண்டிக்கொள்ளுவதும் பிரார்த்தனையாக வஸ்திரத்தைக் கிழித்து பீரை மரத்தில் கட்டிப் பலன் பெறுவதும், எதிரிகள் வாய்க்குப் பூட்டுப் போடும் பழக்கமும் நடைமுறையில் உள்ள கோயில் அது.

இத்தனை நடைமுறைகள் பொதுமக்களால் பின்பற்றப்பட்டாலும் கோபுரம் மண்டபம், விமானம், கருவறை, கொடி மரம், பலி பீடம் எனத் தனித்தனியான ஸ்தூல அமைப்புகள் எதுவும் இல்லாத கோயில் அது. சுற்றிலும் சுமார் 36 ஏக்கர் பரப்புள்ள காட்டில் அமைந்த இயற்கைக் கோயில்.

திருவள்ளூர் மாவட்டம் செங்கரை கிராமத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு காட்டுச் செல்லியம்மன் கோவில். காட்டை ஒட்டி ஏரி, ஏரியின் மறு கரையில் ஊர். ஏரிக் கரையில் செக்கச் செவேல் என அம்மன் காட்சி தந்ததால் செங்கரை என அந்தக் கிராமம் வழங்கப்படுகிறது. சிறிய வெற்றிலையைப் போல் இரண்டு மடங்கு தடிமனும் சிறிய அளவும் உள்ள, சித்த மருத்துவத்துக்குப் பயன்படும் இலைகள் உள்ள கொடி உள்ளது. அந்த இலையில் வாசம் எதுவும் இல்லை.கொடியில் பால் வருவது இல்லை.

கொடியில் பூ பூப்பது, காய் காய்ப்பது, பழம் உண்டாவது இல்லை. ஒவ்வொரு மார்கழி முடிந்து தை மாதம் வரும் போது இலைகள் எல்லாம் கொட்டி பங்குனி மாதம் 15 தேதிக்குள் புத்திலைகள் தோன்றி புது நிழல் தரத் துவங்கிவிடும். இந்தத் தன்மை கொண்ட வேதைக் கொடி என்னும் தாவரத்தின் பந்தல் ஓரிடத்தில் ஆழக்கால் பதிந்து, கிளை பரப்பியுள்ளது. காலங்காலமாய் காட்டுச் செல்லியம்மன் என அழைக்கப்படும் இந்த தெய்வத்தின் மேல் அமைந்துள்ள அந்த வேதைக்கொடி பசுமையாய் அழகாய் பந்தலாய் படர்ந்து நின்று அம்மனுக்கும் பக்தர்களுக்கும் நிழல் தருகிறது.

அசுரனை அழித்தவள்

பெண்கள் பிற ஆடவரைத் தீண்ட மாட்டார்கள் என்பதால் தன்னை வென்று அழிப்பதானால் அது ஒரு பெண்ணால்தான் நடைபெற வேண்டும் என்று தாருகாசுரன் வரம் பெற்றிருந்தான். தேவர்களுக்கும் மக்களுக்கும் கடும் துன்பம் தந்துகொண்டிருந்தான். அவனைக் கொல்ல சிவன், சக்திக்குக் கட்டளையிட்டார். சக்தியின் கண்ணிலிருந்து நஞ்சை, விடக் கொடிய ஒரு விஷ சக்தி தோன்றியது. அந்தச் சக்தியின் கோபாக்னியில் தாருகன் எரிந்து சாம்பலானான்.

அந்தக் கோப சக்தி ஒரு குழந்தையாக உருவெடுத்தது. அந்தக் குழந்தைக்கு மேலும் மேலும் விஷம் கலந்த பாலை ஊட்டி மேலும் விஷ சக்தி நிறைந்ததாக உருவாக்கினாள் கோபாவேசத்தில் இருந்த சக்தி. எதிர் நாளில் அந்தக் குழந்தை கொடூரமானதாக இருக்கும் என்பதால் சிவன் அந்த விஷக் குழந்தையையும் அதன் பாலையும் தன்னுள்ளேயே ஒடுக்கிக் கொண்டார். கோப சக்தியின் விஷக் குழந்தை ஒடுக்கப்பட்டதால் சக்தி மூர்க்கம் கொண்டு ஆடி குதித்து ஆங்காரத்துடன் கோர தாண்டவம் ஆடினாள். ஆடலரசன் அவளது ஆட்டத்தை அடக்க எண்ணித் தன்னுடன் நாட்டியமாடப் போட்டிக்கு அழைத்தார்.

இருவரும் வெகு நேரம் சளைக்காமல் ஆட, நடுவில் தன் காதினை அலங்கரித்துக்கொண்டிருந்த தோடினை அவிழ்ந்து விழச் செய்து, மீண்டும் ஆட்டத்தின் நடுவே தன் காலால் எடுத்துப் பொருத்திக்கொண்டார். அதனையும் ஆட்டத்தின் அங்கமாகவேக் கருதிய அந்த உக்ர கோப சக்தி அவ்வாறு ஆடுவது சாத்தியம் இல்லை என நின்றாள். அந்நேரத்தில் சண்டி, சிவனுடன் ஆடிய அந்த ‘சண்ட தாண்டவம்’ என்னும் போட்டியில் தோற்றதாகக் கருதினாள்.

புற்றுக்குள் அமர்ந்த சக்தி

சண்ட தாண்டவத்தில் தோற்ற அன்னை காளி, தன்னால் உருவாகி அடங்கிய குழந்தையின் அழுகுரல், காதைப் பொத்திக்கொண்ட போதும் ஒலிப்பதாக உணர்ந்தார் வழியும் கண்ணீரோடு வேகமாக ஊரின் வடக்குப் புறமாய் அமைந்திருந்த காட்டுக்குள் சென்று வேதைக்கொடிகள் பின்னிப் படர்ந்து இருந்த பந்தலின் கீழ் அமர்ந்தாள். தன் சுய உருவைப் புற்று கொண்டு மூடும்படி செய்தாள்.

அவ்வாறு வேதைக்கொடியின் கீழ், வந்து அமர்ந்த நாள் ஒரு வியாழக்கிழமை. புற்று பெரியதாக வளர்ந்த நிலையில் ஊரார் அது முதல் வியாழக் கிழமைகளில் வந்து பகலில் பொங்கலிட்டு, படையலிட்டு அவளைத் தங்கள் குலசாமியாக வழிபடத் தொடங்கினர். மாலை 6 மணிக்குக் காட்டை விட்டு வெளியேறும் வழக்கத்தையும் பழக்கத்தில் கொண்டனர்.

ஊரார் அந்தக் காலாகாரியை ஊருக்குள் அழைத்துச் செல்ல முயன்று உத்தரவு கேட்டனர். சக்தி, ஒரு சிறுமியின் மீது அருளாக வந்து இறங்கி, தான் ஊருக்குள் வர விரும்பவில்லை என்றும் அவ்வாறு வந்தால் ஊருக்குள் குழந்தைகள் அழும் குரலோ, சண்ட தாண்டவத்தின்போது சிவன் கால் பதியும்போது ஏற்பட்ட உலக்கை இடிக்கும் சத்தமோ கேட்கக் கூடாது எனவும் கூறினாள். தான் எடுத்து வைத்துவரும் ஒவ்வோர் அடிக்கும் ஒரு காவு தர வேண்டும் எனவும் சாத்தியமில்லாத நிபந்தனைகளை விதித்தாள்.

எப்பாடு பட்டாவது தேவியை அழைத்துச் செல்ல வேண்டும் என நினைத்த ஊராரால் அருகில் உள்ள ஆலங்குளம்வரை மட்டுமே காவு கொடுத்து அழைத்துச் செல்ல முடிந்தது. உடன் அம்மன் மீண்டும் காட்டுக்குத் திரும்பி வேதைக்கொடி பந்தலின் கீழேயே அமர்ந்துவிட்டாள். அது முதல் அங்கேயே இருந்து அனைவருக்கும் அருள் வழங்குவதும் மாலை 6 மணிக்கு மேல் வெளி வந்து காட்டைச் சுற்றி உலாவி அவளை வழிபடுவோரின் அல்லல்களைத் தீர்ப்பதும் காப்பதையுமே பழக்கமாகக் கொண்டிருக்கிறாள்.

கோயிலை விரும்பாத செல்லி

அம்மனுக்குக் கோயில் கட்ட உத்தரவு கேட்டபோது, அம்மனின் விருப்பம் கோயில் கட்டுவதல்ல என்பதை உணர்ந்தனர் மக்கள். புற்று நீக்கி தரிசனம் செய்ய அனுமதி கேட்டனர். அம்பாள் அனுமதிக்க, ஒரு வியாழக்கிழமையில் புற்றை சிறிது சிறிதாக அகற்ற தீச்சுடர் மகுடமும், நான்கு கரங்களும், சம்மணமிட்டு அமர்ந்த கோலத்தில் சர்வ ஆபரணம் சூடியவளாய் காட்சி தந்தாள்.

அன்று முதல் அந்த இடத்திலேயே வேதைக்கொடிப் பந்தலின் கீழ் ஜன்னி, கொஞ்சை, கருங்காலி, வில்வம், தும்பி போன்ற மூலிகைச் செடிகள் சூழ இருந்து, அருள் செய்துவருகிறாள். தினமும் அபிஷேகமும் ஒரு கால பூஜையும் நடைபெறும். ஆடி மாதம் காய்கறி சீர் கட்டு என்னும் காய்கறி அலங்காரமும் கூழ் வார்த்தலும், சித்திரை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று உளுந்தால் வடை செய்து மாலையாக்கி அம்பாளுக்குச் சார்த்தி வழிபட்டு பக்தர்களுக்கும் ஊருக்கும் விநியோகம் செய்யும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்திலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் தண்டலம் அடுத்த சூலைமேனி ஊரிலிருந்து தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டைக்குச் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் செங்கரை கிராமம் அமைந்துள்ளது. வியாழக்கிழமைகளில் சூலைமேனியிலிருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன, மற்ற நாட்களில் அதிக அளவில் ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x