Published : 10 Mar 2016 12:25 PM
Last Updated : 10 Mar 2016 12:25 PM
உலகின் மிகப்பெரிய சமயங்கள் அனைத்திலுமே கடவுளைத் தொடர்பு கொள்ள மனிதர்கள் கைவசமிருக்கும் ஒரே கருவி பிரார்த்தனை. யூத மற்றும் கிறிஸ்தவக் கலாச்சாரத்தில் அதை ‘ஜெபம்’ என்ற சொல்லால் அழைக்கிறார்கள். அதேபோல் வீட்டிலிருந்து கடவுளிடம் ஜெபம் செய்வதற்கும் ஆலயம் தேடிச் சென்று அவரிடம் ஜெபிப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை மனிதர்கள் நன்கு உணர்ந்தேயிருக்கிறார்கள். யூதர்கள் காலை, மதியம், மாலை என மூன்றுவேளைகள் ஜெபம் செய்யும் வழக்கம் கொண்டவர்கள்.
குறிப்பாக ஆலயத்துக்கு வந்து ஜெபிப்பது சிறந்த பலனைக்கொடுக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். இதனால் ஜெபிக்க ஆலயத்தில் குவிந்துவிடுவது அவர்களது கலாச்சாரமாக இருந்தது. ஆண்டிற்கு ஒருமுறை வரும் பாவக்கழுவாய் தினத்தில் அனைவரும் நோன்பிருக்க வேண்டும் என யூதச்சட்டம் அறிவுறுத்தியது. ஆனால், கடவுளின் அருளை சிறப்பாகப் பெறுவதற்காக பலர் வாரநாட்களில் திங்கள், வியாழன் ஆகிய இரண்டு தினங்கள் நோன்பிருந்தனர். இந்த இரண்டு நாட்களும் எருசலேமில், மக்கள் பொருட்களை வாங்கச் சந்தைகளில் முண்டியடிப்பார்கள்.
அதேபோல, விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை ‘தசம பாகமாக’ ஆலயத் துக்குக் கொடுக்க வேண்டுமென்று யூதர்களின் இணைச்சட்டம்(14:22), கூறுகிறது. இதன் அடிப்படையில், யூதர்கள் இதைப்பின்பற்றி வந்தனர். ஆனால் இதுபோன்ற பாரம்பரிய முறைகளை ஏழைகளும் மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக விளம்பரம் தேடிக்கொள்ளும் நோக்கத்துடன் பிரார்த்தனை செய்வது, தசமபாகம் தருவது பலிசெலுத்துவது ஆகியவற்றை ஆலயத்துக்கு வந்து படாடோபமாக செய்து ஆலயத்தின் அமைதியைக் கெடுத்து வந்தார்கள்.
தாங்கள் நோன்பிருப்பது தெரியவேண்டும் என்பதற்காக, தங்கள் முகத்தை வெள்ளையாக்கிக்கொண்டு சந்தை வெளிகளில் நடந்தார்கள், அதேபோல கொடுக்கத்தேவையில்லாத விளைபொருட்களிலும் பத்திலொரு பங்கைக்கொடுத்தார்கள். கடவுள் காரியத்திலும் விளம்பரப் பிரியர்களாக இருந்த பரிசேயர்களை முன்வைத்து இயேசு கூறிய உவமை; நாம் ஜெபம் என்ற கருவியை எத்தனை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று எடுத்துக்காட்டியது.
இருவரில் யார் ஏற்புடையவர்?
லூக்கா எழுதிய நற்செய்தி 18-ம் அதிகாரம் 9 முதல் 14 வரையிலான இறைவசனங்கள் இவை.
“அக்காலத்தில் தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “இருவர் இறைவனிடம் வேண்டுவதற்காகக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரி வசூலிப்பவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் உரத்த குரலில் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், பாலியல் தொழில் செய்வோர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரி வாங்குபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இருமுறை நோன்பிருக்கிறேன்; என் எல்லா வருவாயிலிருந்தும் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்” என்று ஜெபித்தார்.
ஆனால் வரிவசூல் செய்பவர் தொலைவில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்று கடவுளுக்கு மட்டுமே கேட்கும் தன் மனக்குரல் கொண்டு ஜெபித்தார். இந்த இருவரில் பரிசேயரல்ல, வரிவசூலிப்பவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் இயேசு.
ஜெபத்திலும் உண்டு ஆபத்து
இயேசுவின் ஆன்மிக ஆழம் அவரது பூமி வாழ்வுக்கு அழகியதோர் அணியாக அமைகிறது. ஜெபம், இறைவேண்டல் என்பது எவ்வாறு இருக்கவேண்டும், எவ்வாறு இருக்கக்கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டிய இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது “ பிதாவே இவர்களை மன்னியும், ஏனெனில் இவர் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள்” என்று தன் மரணத்தை விரும்பிய எதிரிகளை மன்னிக்கும்படி கடவுளாகிய பரலோகத் தந்தையிடம் கோரினார். இது எத்தனை உன்னதமான தாழ்ச்சி. ஒருவர் தம்மைத் தாழ்த்திக்கொள்ளவேண்டும் என்னும் இயேசுவின் அழைப்பு எளிதான போதனைதான்.
ஆனால், இறைப்புகழ்ச்சி, நன்றி ஜெபத்தில்கூட ஆபத்து அடங்கியிருக்கலாம் என்பது கொஞ்சம் புதிதான போதனை. கோவிலுக்குச் செல்லும் பரிசேயர் இறைவனுக்கு நன்றி ஜெபம் சொன்னார். “உமக்கு நன்றி செலுத்துகிறேன்” என்னும் வார்த்தைகளில் அவரது இறைப்புகழ்ச்சி வெளிப்படுகிறது, ஆனால், அந்தப் புகழ்ச்சி, நன்றியின் அடிநாதமாகத் தற்பெருமையும், தாழ்ச்சியற்ற தன்மையும் அடங்கியிருந்தது. எனவே, அவரது ஜெபம் ஏற்கப்படவில்லை என அடித்துச் சொல்கிறார் ஆண்டவர் இயேசு. தாழ்ச்சியே ஜெபம்! பிறரை விமர்சிப்பது அல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT