Published : 17 Mar 2016 11:14 AM
Last Updated : 17 Mar 2016 11:14 AM
மார்ச் 20: குருத்தோலை ஞாயிறு - புனித வாரத்தின் தொடக்கம்
இயேசு தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட மிக முக்கியமான நாட்கள் பல. அவற்றில் ஒன்று ‘குருத்து ஞாயிறு’. யூதர்கள் எகிப்து தேசத்தில் அடிமைகளாக வாழ்ந்து, கடவுளின் கருணையால் அதிலிருந்து மீண்டு வந்ததை பாஸ்கா விழாவாகக் பாரம்பரியமாகக் கொண்டாடி வந்தனர். அந்த விழாவைத் தனது சீடர்களுடன் கொண்டாட இயேசு எருசெலேம் நகருக்கு வருகிறார்.
அப்போது இயேசுவுக்குச் சரியாக 33 வயது. மாபெரும் போதகராக, மெசியாவாக, அற்புதங்களை நிகழ்த்தும் கடவுளின் மகனாக, சாமானிய மக்கள் அவரைக் கண்டு வியந்து, அவரே தங்களது உண்மையான ராஜாவாகப்போகிறவர் என்ற முடிவுக்கு வந்திருந்த நாட்கள் அவை. பாஸ்காவைக் கொண்டாட அவர் எருசலேமுக்கு வருகைதரும் ஒருவார காலத்துக்கு முன்னர்தான், இறந்து அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் கடந்துவிட்ட தனது நண்பர் லாசர் என்பவரை இயேசு உயிருடன் மீண்டுவரச் செய்திருந்தார்.
இந்தச் செய்தியும் அதற்குச் சாட்சியாக லாசர் கண்முன்னால் நிற்பதையும் கண்டு பொருமினார்கள் யூதமத அதிகார வர்க்கமாக இருந்த பரிசேயர்களும் சதுசேயர்களும். இவர்களால் நிரம்பி வழிந்த யூதத் தலைமை சங்கமும் கொதித்து எழுந்தது. எப்படியாவது யூதர்களுக்கு எதிரானவராக இயேசுவை சித்தரித்து அவரைக் கொலைசெய்துவிட திட்டம் தீட்டினார்கள்.
இப்படிப்பட்ட தருணத்தில்தான் இயேசு தன் சாவினை உணர்ந்தவராக எருசலேம் நகருக்குள் நுழைகிறார். அவருக்கு எருசலேம் மக்கள் கொடுத்த வரவேற்பு வரலாறாக மாறுகிறது. இந்த நிகழ்வை மாற்கு (11:1-11), மத்தேயு(21:1-12), லூக்கா(19:28-44), யோவான்(12:12-19), ஆகிய நான்கு முக்கிய நற்செய்தியாளர்களும் விவரித்திருக்கிறார்கள். நாம் இங்கே புனித மத்தேயு எழுதிய வாசகத்தைக் கவனிப்போம்.
நிறைவேறிய தீர்க்கதரிசனம்
“இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அழைத்துக் கூறினார், “நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், “இவை ஆண்டவருக்குத் தேவை” எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார்” என்றார்.
இயேசு வாழ்ந்த காலத்துக்கு சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எருசலேமில் வாழ்ந்த தீர்க்கதரிசியின் பெயர் சக்காரியா. அவர் மெசாயா தன் இன்னுயிரை மக்களின் மீட்புக்கான பலியாகத் தர எருசலேம் நகருக்கு எவ்வாறு வருகைதருவார் என்பதை தீர்க்கத் தரிசனமாக உரைத்திருந்தார். “மகள் சீயோனிடம் செல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; மறியாகிய கழுதைக் குட்டியின் மேல் ஏறி வருகிறார்” என்று அவர் உரைத்திருந்த தீர்க்கதரிசன இறைவாக்கு இவ்வாறு நிறைவேறியது.
சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். இயேசு எருசலேம் எல்லைக்குள் நுழைந்தபோது பெருந்திரளான மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வந்தார்கள். தங்கள் மேல் உடைகளை வழிநெடுகிலும் விரித்தார்கள்.
வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், “தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!”என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, “இவர் யார்?” என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், “இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்” என்று பதிலளித்தனர்.
பாரம்பரியத் திருவிழா
மேற்குலகின் திருச்சபைகளில் கத்தோலிக்கத் திருச்சபை, ஆங்கிலிக்கன் சபை, லூத்தரன் சபை உட்பட பல பிரிவு கிறித்தவ சமூகங்கள் குருத்து ஞாயிறு கொண்டாட்டத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன. கத்தோலிக்கத் சபை வழக்கப்படி, குருத்து ஞாயிறு தினத்தில் குருத்தோலைகள் கோவிலின் தலைவாயிலைத் தாண்டி அமையும் பகுதியில் மந்திரிக்கப்படும்.
வழிபாட்டை நிகழ்த்தும் குருவானவர் சிவப்புநிற வழிபாட்டு ஆடைகளை அணிந்திருப்பார். மக்கள் அனைவரும் குருத்தோலைகளைக் கைகளில் தாங்கியிருப்பார்கள். இயேசு தாம் துன்புற்று இறப்பதற்கு முன் எருசலேம் நகருக்குள் ஆடம்பரமாக நுழைந்த நிகழ்ச்சி நற்செய்தி நூலிலிருந்து வாசிக்கப்படும். குருத்து ஞாயிறு ஏன் கொண்டாடப்படுகிறது என்பதைக் குருவானவர் விளக்குவார்.
பிறகு மனித குலத்துக்காக முன்வந்து மாண்ட இயேசுவின் வழியாக பரலோகத் தந்தையிடம் இறைவேண்டல் செய்யப்படும். பின் குருத்தோலை ஊர்வலம் தொடங்கும். தேவாலயத்தை ஒட்டியுள்ள சாலைகளில் இயேசுவுக்கு ‘ஓசன்ன கீதம்’ பாடியபடி மக்கள் ஒழுங்கான வரிசையில் நடந்து செல்வார்கள்.
எரியும் மெழுகுதிரி கொண்ட விளக்குத்தண்டுகள், தூபக்கலசம் ஆகியவற்றைத் தாங்கி குருவானவருக்கான உதவிச்சிறுவர் சிறுமியர் முன்செல்ல. அவர்களின் பின்னால் குருவானவர் செல்வார். அவரைத் தொடர்ந்து சிறுவர்,சிறுமியர் பெண்கள், ஆண்கள் என்று அணிவகுத்துச் செல்வர். பவனி தேவாலயத்தின் திருப்பீடத்தை அடைந்ததும் திருப்பலி தொடங்கும்.
குருத்து ஞாயிறன்று மக்கள் கைகளில் ஏந்திவந்த குருத்துகள் வீட்டில் பாதுகாக்கப்படும். அடுத்த ஆண்டில் வருகின்ற திருநீற்றுப் புதன் என்னும் நாளின்போது அவை சேகரிக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கப்படும். அச்சாம்பல் மந்திரிக்கப்பட்டு மக்களின் தலைமேல் பூசப்படும். கத்தோலிக்க திருச்சபை வழக்கப்படி இச்சடங்கு இறைவனின் அருளை இறைஞ்சுகின்ற ஒரு வழிபாட்டு நிகழ்வு ஆகும். புனித வாரத்துக்குள் நுழையும் அனைத்துப் பிரிவு கிறிஸ்தவ மக்களுக்கும் எருசலேமில் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்த இயேசுவின் ஆசீர் கிடைக்கட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT