Published : 04 Feb 2016 11:39 AM
Last Updated : 04 Feb 2016 11:39 AM
அமாவாசை, மாதப் பிறப்பு, சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படும் தினங்கள் புண்ணிய காலங்களாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஒரு சில நட்சத்திரங்கள், திதிகள், ராசிகள், குறிப்பிட்ட நாட்களில் அமைந்துவிட்டால் அந்த நாட்கள் மிகச் சிறந்த புண்ணியத் திருநாளாக அமைந்துவிடுகின்றன.
இந்த ஆண்டு கும்ப மாசம் எனப்படும் மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தில் நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான் சிம்ம ராசியில் பிரவேசித்திருப்பதை ஒட்டி பௌர்ணமித் திருநாளை மகாமகத் திருநாளாகக் கொண்டாடிப் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல் பக்தர்களின் வழக்கம். ஆயினும் இந்த மன்மத வருடத்தில் அதைவிடப் பல மடங்கு புண்ணியம் தரும் புண்ணியத் திருநாள் தை அமாவாசை தினத்தில் நடைபெறவுள்ளது. அத்தகைய புண்ணியத் திருநாளே மஹோதயம்.
மகாபாரதத்தில் இத்தகைய அரிய திருநாளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தை மாதத்தில் அமாவாசையன்று ஞாயிற்றுக்கிழமை, அஸ்வினி, திருவாதிரை, திருவோணம், அவிட்டம், ஆயில்யம் ஆகிய திருநட்சத்திரங்கள் அமைந்துவிட்டால் அத்தகைய புண்ணியத் திருநாள் வ்யதி பாதம் அல்லது வ்யதி பாத யோகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது நூறு சூரிய கிரகணங்களுக்கு இணையான புண்ணியத் திருநாளாகக் கருதப்படுகிறது. அதே புண்ணியத் திருநாள் தை மாதத்தில் அமாவாசையன்று ஞாயிற்றுக்கிழமை திருவோண நட்சத்திரத்தில் அமைந்தால் அது அர்த்தோதயம் எனப்படும். அதைப் போலவே தை மாதம் அமாவாசையன்று திருவோணம் நட்சத்திரம் கூடிய திங்கட்கிழமை மஹோதய புண்ணிய நாளாக சாஸ்திரங்கள் எடுத்துரைப்பதாக துவாபர யுகத்தில் தோன்றிய மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகைய நாட்களில், கங்கை, யமுனை, கோதாவரி, காவிரி போன்ற புண்ணிய நதிகளிலும், புண்ணிய தீர்த்தங்களிலும், சமுத்திரங்களிலும் புனித நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகச் சிறந்த நற்பலன்களைத் தரும். மேலும், தகப்பனார் இல்லாதவர்கள் அமாவாசை, மகாளய பட்சங்கள் போன்ற நாட்களில் தர்ப்பணம் செய்ய இயலாமல் போனவர்களும் இந்த மஹோதய புண்ணிய காலத்தில் தர்ப்பணம் செய்வது நல்லது.
பல்லாண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இத்தகைய அரிய நிகழ்வான மஹோதய புண்ணிய காலம், 8.2.2016 திங்கட்கிழமை அதிகாலையில் ஏற்படுகிறது.
எங்கே விசேஷம்?
ஒன்று, திருப்புல்லாணி சேதுக்கரை. இராமாயணக் காலத்தே இலங்கை செல்ல எத்தனிக்கும் முன் ராமன் இந்த சேதுவிலே நீராடி, தர்ப்ப சயன ராமனாய் அரிதுயில் கொண்ட திவ்ய தேசம். மற்றொன்று, அர்த்த சேது. திருக்கடல்மல்லை என்னும் மாமல்லபுரம். புண்டரீக மாமுனிவனுக்காகப் பாற்கடல்வாசன் தன் அரவணையைத் துறந்து இந்த மகாபலிபுரக் கடற்கரையில் ஸ்தல சயனமாய்க் கிடந்து இம்மாமுனிவனின் பக்திக்கு இணங்கக் காட்சி தந்தார்.
எம்பெருமானே இந்தக் கடற்கரை நீரைத் தன் திருக்கைகளால் வாரி இறைத்தமையால் இந்தக் கடற்கரை அர்த்த சேது என்றே போற்றப்படுகிறது. ஆழ்வார்களில் நடுவரான பூதத்தாழ்வார் அவதரித்த திருத்தலம். பூதத்தாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம்.
மாமல்லையில் இந்த நன்னாளில், ஸ்தல சயனப் பெருமாளும், திருவலவெந்தை ஆதிவராகப் பெருமாளான ஞானப்பிரானும் கருட வாகனத்தில் எழுந்தருள உடன் பூதத்தாழ்வாரும் மகாபலிபுரக் கடற்கரைக்கு எழுந்தருளி அதிகாலை சூரிய உதய காலத்தில் தீர்த்தவாரி மஹோற்சவம் காண்பர். இந்த நன்னாளில் பல மடாதிபதிகள், ஆன்மிக மகான்கள் பலர் இங்கே எழுந்தருளி தீர்த்தவாரியில் கலந்துகொள்கிறார்கள்.
புனித நீராடும் முறை
மாமல்லை கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள புண்டரீக புஷ்கரணியில் புனித நீராட வேண்டும். பின்பு கருட வாகனங்களில் புறப்பாடு காணும் எம்பெருமான்களுடன் கடற்கரையை அடைய வேண்டும். சூரியோதய காலத்தில் தீர்த்தவாரி நடைபெற்ற பிறகே கடலில் நீராட வேண்டும். கடலில் நீராடிய பின்பு, மீண்டும் நன்னீரில் குளிக்கக் கூடாது. மஹோதய புண்ணிய காலம் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புண்ணிய காலம் என்பதால், மஹோதய புண்ணிய கால தர்ப்பணம் மட்டுமே செய்ய வேண்டும்.
முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள், கடலில் நீராடிக் கடற்கரை மணலிலே தர்ப்பணம் செய்யலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT