Last Updated : 18 Feb, 2016 12:21 PM

 

Published : 18 Feb 2016 12:21 PM
Last Updated : 18 Feb 2016 12:21 PM

கும்பகோணம் மகாமகம்: கோவிந்த தீட்சிதர் - மக்கள் நலம் பேணிய மகான்

கோவிந்த தீட்சிதர் நாயக்க மன்னர்கள் மூவர் காலத்தில் வாழ்ந்தவர். தமது இளமையில் சேவப்ப நாயக்கரின் அரசவைக்கு வந்தவர், அவரது மகன் அச்சுதப்ப நாயக்கர் அரசாண்ட காலத்திலும் அமைச்சராகத் தொடர்ந்தார். அம்மன்னருக்கு மகனான ரகுநாத நாயக்கர் காலத்திலும் அரசவையை அலங்கரித்தார். இவர் அமைச்சராக மூன்று தலைமுறை மன்னர்களுக்கு, சுமார் எழுபத்தைந்து ஆண்டு காலம் பதவி வகித்தார். எத்தனையோ மன்னர்கள். எத்தனையோ அமைச்சர்கள். கோவிந்த தீட்சிதரிடம் மட்டும் என்ன சிறப்பு? அவர் அரசனின் அமைச்சர் மட்டுமல்ல மக்களின் மதி மந்திரி. அதனால்தான் இன்றும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு, கும்பகோணத்தில் பல இடங்கள் உண்டு. அவை ஐயன் கடைத்தெரு, ஐயன்பேட்டை, ஐயன் வாய்க்கால், ஐயன் குளம் என்பனவாகும். ஐயன் என்பது கோவிந்த தீட்சிதரைக் குறிக்கும் சொல் ஆகும்.

மக்கள் பணி

மக்கள் பணி மகேசன் பணி என்பார்கள். அதனை உணந்தாற்போல், மக்களுக்கு நன்மைகளை ஒவ்வொரு மன்னனும் தன் காலத்திலேயே செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவாராம் கோவிந்த தீட்சிதர். மன்னர்கள் சுகபோகங்களோடு வாழ்க்கை நடத்துவது, எதிரிகளோடு போர் புரிந்து ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்று குவிப்பது, தன் சுற்றம் உட்பட குடிமக்களின் நலன் மட்டுமே பேணுதல் ஆகியவை மட்டுமே அக்கால ஆட்சி முறையாக இருந்தது.

இதற்கு மேலும் மக்களுக்கு தான தர்மங்களைச் செய்வது, கல்வி அளிப்பது, மக்களின் உடல்நலம் பேணுவது ஆகியவையும் அரசரது கடமையே என்று உணர்த்தியவர் கோவிந்த தீட்சிதர். மேலும் ஓர் இடம் விட்டு வேறு ஓர் இடம் செல்ல நல்ல சாலைகள் அவசியம் என்பதை, தான் அமைச்சராக இருந்த மன்னர்களுக்கு எடுத்துக் கூறினார். நீர் நிலைகளை பேணிப் பாதுகாப்பதும், புதிய நீர் நிலைகளை உருவாக்குவதும், அவற்றை மக்களின் பயன்பாட்டுக்கு அளிப்பதும் மன்னர்கள் கடமை என்றார். இதில் அதிசயம் ஒன்றுமில்லை. தற்போது பிரபலமாகப் பேசப்படும் மகாமகக் குளத்தை உருவாக்குவதில் முக்கியப் பணி ஆற்றியவர் கோவிந்த தீட்சிதர். பெரிய குளத்தையும், அதனைச் சுற்றி படிக்கட்டுகளையும் அமைத்தார். குளத்தைச் சுற்றி பதினாறு சிவலிங்கங்களையும், அவற்றிற்கான மண்டபங்களையும் கட்டினார்.

எடைக்கு எடை தங்கம்

கோவிந்த தீட்சிதரின் இந்த சாதனையைப் பாராட்டி, மன்னர் தீட்சிதரின் எடைக்கு எடை தங்கம் வழங்கினாராம். இந்த நிகழ்ச்சியை நினைவூட்டும் வண்ணம், சிலை ஒன்றும் அமைக்கப்பட்டதாகக் செவி வழிச் செய்தி கூறுகிறது. கும்பகோணத்தில் உள்ள ராமசாமி கோயிலைக் கட்டியது இவரே. இக்கோயிலின் உட்சுவர் முழுவதும் ராமாயண நிகழ்ச்சி களை விவரிக்கும் ஓவியங்களை வரைய வைத்ததும் இவர்தான்.

இவர் உருவாக்கிய ராஜா பாடசாலையில் படித்து, பின்னர் கர்னாடக இசை மூலம் புகழ் பெற்றவர் வாக்கேயக்காரர் முத்துசாமி தீட்சிதர். இவரது முன்னோரான கோவிந்த தீட்சிதர் சங்கீதத்திலும் சிறந்தவர் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி. சங்கீத சுதாநிதி என்ற இசை நூலை எழுதியவர். சமஸ்கிருத மொழியில் இருந்த, திருவையாறு புராணத்தை, தமிழறிஞரைக் கொண்டு தமிழாக்கம் செய்ய வைத்தவர். என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x