Published : 02 Sep 2021 04:30 PM
Last Updated : 02 Sep 2021 04:30 PM
ஒரத்தநாடு அருகே புதூர் கிராமத்தில், யானைமேல் அழகர் அய்யனார் கோயிலில் 35 டன் எடையுள்ள யானை, குதிரை கற்சிலைகள் இன்று (செப்.2-ம் தேதி) பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதூர் கிராமத்தில், யானைமேல் அழகர் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டு பழமையான இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், கிராம மக்கள் கடந்த 2017-ம் ஆண்டு கும்பாபிஷேகத் திருப்பணிகளைத் தொடங்கினர். இதில் ரூ.29 லட்சம் அறநிலையத்துறை சார்பிலும், மீதத்தொகை கிராமப் பொதுமக்கள் சார்பிலும் திரட்டப்பட்டு சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இக்கோயில் முழுவதும் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டு வருகிறது. இதில் 70 அடி நீளமும், 36 அடி அகலமும், 13 அடி உயரமும் கொண்ட மகா மண்டபத்தில் கலை நுட்பத்துடன் கூடிய 32 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் கடந்த ஆறு மாத காலமாக ரூ.27 லட்சம் மதிப்பீட்டில், கோயில் மகாமண்டப முகப்பில் இருபுறமும் வைக்க, 50 டன் எடை அளவு உள்ள ஒரே கல்லில், 23 டன் அளவுக்கு யானை சிலை, 11 அடி உயரத்திலும், 13 அடி நீளத்திலும் வடிவமைக்கப்பட்டது.
அதேபோல், 30 டன் எடை அளவு உள்ள ஒரே கல்லில், 12 டன் அளவில் குதிரை சிலை, 11 அடி உயரமும், 13 அடி நீளத்திலும் வடிமைக்கப்பட்டது. மேலும், கோயில் சுற்றுச்சுவரில் பக்தர்களை வரவேற்கும் வகையில் 6.5 அடி உயரத்தில் இரண்டு விளக்குகளுடன் கூடிய பாவை கற்சிலையும், இதேபோல் நான்கு அடி உயரத்தில் யானை பாகன் சிலையும் வடிவமைக்கப்பட்டது.
இந்தச் சிலைகள், திருப்பூரில் இருந்து பெரிய லாரியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் புறப்பட்டு ஒரத்தநாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. பின்னர் மேள தாளம், வாண வேடிக்கையுடன் கடைவீதியில் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது. பக்தர்கள் பலரும் வழியில் சிலைகளுக்கு மலர் தூவி வரவேற்று, வழிபட்டனர்.
தொடர்ந்து இன்று காலை, கோயில் முகப்பில் அமைக்கப்பட்ட மேடையில், கிரேன் மூலம் இரு சிலைகளும் பீடத்தில் பொருத்தப்பட்டன. தொடர்ந்து இரு சிலைகளுக்கும் பட்டுத் துணி அணிவித்து, மஞ்சள், குங்குமம் கொண்டு அபிஷேகம் நடத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து சிலைகளை வடித்த சிற்பி மணி, அவரது சகோதர்கள், புதுக்கோட்டை நமணசமுத்திரத்தைச் சேர்ந்த சிற்பி ஆ.முத்து ஆகியோரைக் கோயில் நிர்வாகத்தினர் பாராட்டி, சிறப்பு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT