Published : 25 Feb 2016 11:51 AM
Last Updated : 25 Feb 2016 11:51 AM
குளுமையும், சரீரத்திற்கு இதமான சூடும் கொண்ட மாதம் மாசி. இந்த மாதத்தில் கொண்டாடப்படும் கோயில் திருவிழாக்கள் பெரும்பாலும் நீர்நிலைகளை ஒட்டியே இருக்கும். இந்த மாதத்தின் மக நட்சத்திரம் ஆண்டுதோறும் கோயில்களில் விழாவாகக் கொண்டாடப்பட்டாலும், பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுவே மகாமகமாகக் கும்பகோணத்தில் வழிபடப்படுகிறது. இதற்காக லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவின் பல பாகங்களில் இருந்து வந்து குவிகின்றனர் என்பது நிதர்சனம். இங்கு சைவ, வைணவ பேதமின்றி பக்தர்கள் கூடுகின்றனர் என்பது கண்கூடு.
மாதங்களில் ஆடி அம்மனுக்கு, புரட்டாசி கோவிந்தனுக்கு என்று அமைந்துள்ளது போல, மாசி மாதம் சைவம், வைணவம் ஆகிய இரு மதங்களுக்கும் பொருந்துகிறது.
காம தகனம், நடராஜர் சிறப்பு அபிஷேகம் ஆகியவை சிவனுக்கும், திருமோகூர் கஜேந்திர மோட்சம் பெருமாளுக்கும், எனப் பிரதானமாக அமைந்துள்ளன.
காமன் தகனம்
காம ஆசைகளைத் தூண்டிவிடும் தேவனுக்குப் பெயர் காமன். கண்ணனுக்குத், தன் மீது ஆசை தோன்றச் செய்ய வேண்டும் என்று ஆண்டாள் காமனையும் அவன் தம்பி சோமனையும் வேண்டுவதாக அமைந்துள்ளது நாச்சியார் திருமொழி. இதற்காக, காமனும் அவன் மனைவி ரதியும் தேவர்களால் மட்டுமல்லாமல் மனிதர்களாலும் போற்றப்பட்டனர்.
அந்த வகையில் சிவன் மீது காமக் கணைகள் தொடுக்குமாறு பார்வதி தேவி வேண்டுகிறாள் காமனை. கணை தொடுத்தான் காமன். தவம் கலைந்து கண் விழித்தார் சிவன். தவத்தைக் கலைத்ததால் சிவனுக்குத் தலைக்கேறியது கோபம், அதனால் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்கத் தீப்பொறி பறந்தது. காமனைச் சுட்டு எரித்தது. சாம்பலானான் காமன். காமனின் மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும் வண்ணத்தில் காமனை உயிர்ப்பித்தார் சிவன்.
கஜேந்திர மோட்சம்
மதுரை மாநகருக்கு அருகில் உள்ள திருமோகூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மாசிப் பெளர்ணமி அன்று இத்திருக்கோயிலில் கஜேந்திர மோட்சம் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கஜேந்திர மோட்சம் நிகழ்வைக் கதையாகக் கேட்டால், பகவான் மோட்ச சித்தியை அளிப்பார் என்பது ஐதீகம்.
அடர்ந்த காடு ஒன்றில் இருந்த நீர்நிலையை நோக்கி யானைக் கூட்டம் ஒன்று, தாகம் தீர்த்துக்கொள்ளச் சென்றது. அக்குழுவின் தலைமை யானையின் பெயர் கஜேந்திரன். யானைக் கூட்டத்தில் உள்ள அனைத்து யானைகளும் நீர் அருந்தி முடித்த பின் கடைசியாக நீர் அருந்தச் சென்றது கஜேந்திரன். அப்போது நீரில் மறைந்து இருந்த முதலை, கஜேந்திரன் காலைக் கவ்வியது. இந்த முதலைக்குப் பெயர் மகேந்திரன் என்கிறது மத் பாகவதம்.
கரையில் யானைக்கும், நீரில் முதலைக்கும் பலம் அதிகம் என்கிறது அறிவியல். யானை முதலையைக் கரைக்கு இழுக்க, முதலை யானையை நீருக்குள் இழுக்க முயற்சித்தது. இந்த இழுபறி ஆண்டுக்கணக்கில் தொடர்ந்தது. அயர்ந்துபோனது யானை. ஆனாலும் தன் பிடியை விடவில்லை. அதன் தும்பிக்கைக்கு எட்டிய தூரத்தில் கிடைத்த தாமரை மலரைக் கொய்து, தலையைத் தூக்கி விண்ணைப் பார்த்தது கஜேந்திரன்.
மலர் ஏந்திய தும்பிக்கையை உயர்த்திப் பிளிறியது. அவ்வொலி ஆதிமூலமே என்பதாகக் கேட்டது. முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும், ஆதிமூலம் என்பது தனது பெயரல்ல என்று இருந்துவிட்டார்களாம்.
நாராயணனோ தானே ஆதிமூலம் என்பதை உணர்ந்து, கருடாரூடனாகக் கஜேந்திரனைக் காக்க வந்தார். தனது சக்கராயுதத்தைப் பிரயோகித்து, முதலை மகேந்திரனின் தலையைக் கொய்தார். மகேந்திரன் சாபம் பெற்ற தேவன் ஆனதால், தன்னுரு பெற்று தேவலோகம் சென்றார். பெருமாளை வணங்கி நின்ற கஜேந்திரனுக்கு மோட்சப் பதவி கிடைத்தது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், திருமோகூரில் கஜேந்திர மோட்ச விழா, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
தமிழகம் முழுதும் உள்ள பல்லாயிரக்கணக்கானக் கோயில்களில் மாசி விழாக்கள் பிரதானமாகக் கொண்டாடப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT