Published : 25 Feb 2016 11:23 AM
Last Updated : 25 Feb 2016 11:23 AM
வனவாசத்தில் இருந்த பாண்டவர்களை நாடி அந்தணர் ஒருவர் வந்தார். தன்னுடைய அரணிக்கட்டை ஒரு மானின் கொம்பில் மாட்டிக்கொண்டுவிட்டதாகவும் அதை எடுத்துத் தருமாறும் கேட்டார். முன்பெல்லாம் நெருப்பு மூட்ட அரணிக் கட்டை ஒன்றை வைத்திருப்பார்கள். அந்தக் கட்டையைக் கல்லில் உரசினால் நெருப்பு வரும்.
பாண்டவர்கள் அந்த மானைத் துரத்திக்கொண்டு போனார்கள். மான் வேகமாக ஓடிக் காட்டுக்குள் சென்று மறைந்தது. அதைத் தேடிக் காட்டுக்குள் வெகுதூரம் சென்றும் மானைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஐவரும் களைப்படைந்தனர். கடுமையான தாகம் அவர்களை வாட்டியது. பக்கத்தில் தண்ணீர் கிடைக்கிறதா என்று பார் என்று தர்மன் சகாதேவனிடம் சொன்னான்.
ஒரு மரத்தின் மீது ஏறிய சகாதேவன் சுற்றுமுற்றூம் பார்த்தபோது சிறிது தூரத்தில் ஒரு குளம் இருப்பது தெரிந்தது. அங்குபோய் தண்ணீர் எடுத்துவரக் கிளம்பினான்.
கேள்வி கேட்ட குளம்
அந்தக் குளத்தை நெருங்கித் தண்ணீர் குடிக்க முனையும்போது ஒரு குரல் கேட்டது. “இது என் வசத்தில் இருக்கும் குளம். என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டுத் தண்ணீர் எடுத்துக்கொடு போ” என்றது அந்தக் குரல்.
சகாதேவன் குரல் வந்த திசை நோக்கினான். யாரும் இல்லை. அசரீரி தான். தாகம் வாட்டியதால் அந்தக் குரலை அலட்சியப்படுத்திவிட்டுத் தண்ணீர் குடித்தான். உடனே மயங்கி விழுந்தான்.
சகாதேவன் போய் நெடுநேரம் ஆனதால் தர்மன் நகுலனை அனுப்பினான். அவனுக்கும் அதே கதிதான். அதையடுத்து வந்த பீமன், அர்ச்சுனனும் அதேபோல மயங்கி விழுந்தார்கள்.
எச்சரிக்கையைப் பொருட் படுத்தாமல் தண்ணீர் குடித்தனர். அவர்களும் மயங்கி விழுந்தனர். கடைசியாக அங்கு வரும் தர்மன், தன் தம்பிகளின் நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தான். அப்போது யட்சனின் குரல் ஒலித்தது. இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது என்று புரிந்துகொள்ளும் தர்மன், யட்சனின் கேள்விகளை எதிர்கொண்டான்.
தன்னுடைய கேள்விகளுக் கெல்லாம் சரியான பதில்களைச் சொன்ன தர்மனை யட்சன் பாராட்டினான். “என் கேள்விகளுக்குச் சரியான பதில் சொன்ன உனக்கு ஒரு வரம் தருகிறேன். உன் தம்பிகளில் யாராவது ஒருவரை நீ உயிரோடு திரும்பப் பெறலாம். உனக்கு யார் வேண்டும்?” என்று கேட்டான் யட்சன்.
“நகுலன்” என்றான் தர்மன்.
அப்போது யட்சன் மனித உருவில் தர்மனின் முன் தோன்றினான். “யுதிஷ்டிரா? நன்றாக யோசித்துத்தான் கேட்கிறாயா? ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட பீமன் உனக்கு வேண்டாமா? தனி ஒருவனாக இந்த உலகையே வெல்லக்கூடிய அர்ச்சுனன் வேண்டாமா?” என்று வியப்புடன் கேட்டான்.
“யட்சனே, தருமமே மனிதனைப் பாதுகாக்கிறது. பீமனும் அல்ல, அர்ச்சுனனும் அல்ல. தருமத்தை மீறினால் அந்த தருமமே மனிதனை அழிக்கிறது. என் பாதுகாப்பைவிட எனக்கு தருமமே முக்கியம். என் தந்தைக்கு இரண்டு மனைவிகள். அவர்களில் குந்திக்கு நான் இருக்கிறேன். மாத்ரிக்கு ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் நகுலனைக் கேட்கிறேன்” என்றான் தர்மன்.
யட்சன் இருந்த இடத்தில் இப்போது தரும தேவன் நிற்கிறார். அவர் தன் மகனை ஆரத் தழுவிக்கொள்கிறார். “பாரபட்சம் இல்லாத என் மகனே, தருமத்தில் உன் உறுதியைக் கண்டு வியக்கிறேன். உன்னைச் சோதிக்கவே நான் இப்படிச் செய்தேன். உன் தம்பிகள் யாரும் இறக்கவில்லை. மயக்கமாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் உயிரோடு உனக்குக் கிடைப்பார்கள்” என்று சொல்லிவிட்டு மறைந்தார் தரும தேவன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT