ஞாயிறு போற்றுதும் என்றார் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில். அந்தச் சூரியனைப் போற்றும் நாள்தான் ரதசப்தமி. சூரிய பகவானை நினைத்து பக்தர்கள் மேற்கொள்ளும் பல விரதங்களில் ஒன்று ரதசப்தமி. சூரியன் தன் வடதிசைப் பயணத்தைத் தொடங்கும் நாளே ரதசப்தமி.
ரதசப்தமி வழிபாடு
எப்போதும் கிழக்கு நோக்கியபடிதான் ஸ்நானம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம். ரதசப்தமி அன்று எருக்கம் இலை விசேஷமானது. உச்சந்தலையில் ஒன்று, மூடிய இரு கண்கள் மீது தலா ஒன்று, தோள்களில் தலா ஒன்று, பாதங்களின் மேற்பகுதியில் தலா ஒன்று வீதம் ஏழு எருக்கம் இலைகளை வைத்துக்கொண்டு சூரியன் இருக்கும் திசை நோக்கி நின்று ஸ்நானம் செய்ய வேண்டும்.
எருக்க இலையின் சிறப்பு
சூரிய வழிப்பாட்டில் எருக்கம் இலைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? சூரியனார் கோயிலின் தல விருட்சம் எருக்க மரம். செடி என்று அழைக்கக்கூடிய எருக்கு பல அடி உயரம்கூட வளரும் தன்மை கொண்டது. இதன் தண்டில் செய்யப்படும் விநாயகரை எருக்க விநாயகர் என்று அழைப்பர். பீஷ்மர் பிரம்மசாரி ஆனதால் அவர் காலம் கழிந்த பின் அவருக்கு நீத்தார் கடன் யார் அளிப்பார்கள் என தர்மர், வியாசரிடம் கேட்டார். அதற்கு வியாசர் ரத சப்தமியன்று பாரத மக்கள், புண்ணிய பலன் பெற செய்துகொள்ளும் எருக்கம் இலை ஸ்நானமே தனக்கான நீத்தார் கடனையும் அளிக்கும் என்று பதிலளித்தார். ரதசப்தமியன்று ஸ்நானம் செய்யும்போது சூரிய நாராயணப் பெருமாளுடன் பீஷ்மரையும், மனதால் தியானிக்க வேண்டும். சூரியனுக்கான இந்த விரதம், உடல் நலம், மன நலம், நற்குணப் பெருக்கம், செல்வ வளம், காரிய வெற்றி ஆகியவற்றைத் தரவல்லது என்பது ஐதீகம்.
புண்ணியம் தரும் தானம்
ரதசப்தமியன்று தானங்கள் செய்தால் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தானம் என்பது பெற்றுக்கொள்பவருக்குப் பயன் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். எனவே வேனிற்காலத்தில் வருகின்ற ரதசப்தமி அன்று, குளிர்ந்த நீர், மோர், இளநீர், குடை, விசிறி, காலணி, பருத்தியாடை தயிர் சாதம் உள்ளிட்டவற்றை ஏழை, எளியோருக்கு அளித்துப் பயனடையலாம். சங்க இலக்கியம் பூம்புகார் நகரில், உச்சிக்கிழான் கொட்டம் என்ற பெயரில் சூரியன் கோயில் இருந்ததாகக் கூறுகிறது. பூனாவுக்கு அருகே உள்ள சூரியனுக்கான `கோனார்க்’ கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோயில், சூரியனுக்கு என்று அமைந்த தனிக் கோயில் ஆகும். இது தவிர சிவன் கோயில்களில் சிவ சூரியன் என்றும், விஷ்ணு கோயில்களில் சூரிய நாராயணன் என்றும் சூரியனை பக்தர்கள் வழிபடுகின்றனர். ஷண்மதம் என்று சொல்லக்கூடிய ஆறு மதங்களான வைணவம், சைவம், சாக்தம், காணாபத்தியம், கெளமாரம், செளரம் என்பனவற்றில், செளரம் சூரியனைக் குறிக்கும் மதமாகும்.
எருக்கம் இலை ஏன்?
தான் நினைத்த நேரத்தில் உயிர் துறக்கலாம் என்ற வரம் பெற்றவர் பீஷ்மர். ஆனாலும் உத்தராயண புண்ணிய காலத்திற்காகக் காத்திருந்தார். அப்போது தனது பாபங்களை முற்றிலும் துறக்க எண்ணினார். அவர் வியாசரிடம் இதுகுறித்து கேட்க, அவர் செய்த முக்கியமான பாபம் ஒன்றைச் சுட்டிக்காட்டினார் வியாசர். பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுரித்தபோது, பீஷ்மர் தடுக்காமல் வாளாவிருந்தார் என்பதே பீஷ்மர் செய்த பாபம். கண் எதிரே நடக்கும் ஒரு பாவத்தைத் தன் சக்திக்கு உட்பட்டுத் தடுக்க வேண்டும் என்பது சாஸ்திரம்.
பீஷ்மரின் புத்தி, கண்கள், தோள்கள், கால்கள் ஆகியவை இவற்றைத் தடுக்க முயலவில்லை என்பதால், தன்னை சூரியனைக் கொண்டு எரித்துவிடுமாறு கூறினார் பீஷ்மர். அர்க்கம் என்றால் சூரியன் எனப் பொருள்படும் என்பதால், புத்தியால் செய்த பாபத்திற்கு உச்சந்தலையில் ஓர் எருக்கு, கண்களுக்கு இரண்டு, தோள்களுக்கு இரண்டு, கால்களுக்கு இரண்டு என பீஷ்மர் உடலில் எருக்க இலையைப் பரப்பச் சொன்னாராம் வியாசர். அம்புப் படுக்கையில் படுத்துக்கொண்டிருந்த அவர் மீது சூரிய ஒளியும் பட பாபம் நீங்கி வைகுந்தம் ஏகினார் என்கிறது புராணம். அதன் பிறகு அறிந்தும் அறியாமலும் செய்யும் பாபம் தீர எருக்க இலை ஸ்நானம் வழக்கத்திற்கு வந்தது. சூரியனுக்கு உகந்த நாளான ரதசப்தமியன்று, அர்க்கம் என்று சூரியனின் பெயர் கொண்ட எருக்க இலை ஸ்நானம் நலம் பல விளைவிக்கும் என்பது நம்பிக்கை.
ரதசப்தமி வழிபாடு
தினம், கிழக்கு நோக்கியபடிதான் ஸ்நானம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம். ரதசப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை, உச்சம் தலையில் ஒன்று, மூடிய இரு கண்கள் மீது தலா ஒன்று வீதம் இரண்டு, இரு தோள்களில் தலா ஒன்று, இரு பாதத்தின் மேற்பகுதியில் தலா ஒன்று வீதம் வைத்துக்கொண்டு சூரியன் இருக்கும் திசை நோக்கி நின்று ஸ்நானம் செய்ய வேண்டும். அப்பொழுது பீஷ்மரையும், சூரிய நாராயணப் பெருமாளையும் மனதால் தியானிக்க வேண்டும். சூரியனுக்கான இந்த விரதம், உடல் நலம், மன நலம், நற்குணப் பெருக்கம், செல்வ வளம், காரிய வெற்றி ஆகியவற்றைத் தரவல்லது என்பது ஐதீகம்.
திருமலையில் ரதசப்தமி விழா
ரத சப்தமி திருமலை திருப்பதியில் மலையப்ப சுவாமி ஏழு வாகனங்களில் திருவீதி உலா வருவார் சூரியனுக்கு என்று தனியாக அமைக்கப்பட்டுள்ள, தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோயிலில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் ரங்கம் உட்பட பல விஷ்ணு ஆலயங்களில், சூரிய நாராயணன் என்று சூரியன் போற்றப்படுவதால், ரதசப்தமி சிறப்பாகக் கொண்டாடப்படும். பிப். 14: ரதசப்தமி
WRITE A COMMENT