Published : 18 Feb 2016 12:17 PM
Last Updated : 18 Feb 2016 12:17 PM
தாம் யார் என்பது பற்றியும், எதற்காக பூமிக்கு வந்திருக்கிறேன் என்பதையும், தன்னைப் பின்தொடர இருக்கிறவர்கள் எப்படிப்பட்ட வாழ்வை வாழ வேண்டியிருக்கும் என்பதையும், மிகத் தெளிவாகச் சொல்லிச் சென்றிருக்கிறார் இயேசுபிரான். தன்னைப் பற்றி முழுமையாக வெளிப்படுத்திவிடுதல், தனது சாவை வெளிப்படையாக அறிவித்தல் போன்ற அனைத்துமே மிகவும் துணிச்சலான செயல்கள்.
தனது இறப்பு இப்படித்தான் இருக்கும், தனக்குக் குறிக்கப்பட்ட நாள் இது என்று தெரிந்தும், துணிவுடன் மக்கள் மத்தியில் போதிப்பது மிகச் சவாலான காரியம். ஆனால், இயேசுவுக்கு அது மிக எளிதாகத் தோன்றுகிறது. தனது சாவைப்பற்றிய கவலையையோ, வருத்தத்தையோ தனது வார்த்தைகளில் அவர் வெளிப்படுத்தவில்லை.
கடவுளின் புரிதலும் துணிவும்
தனது சாவு எத்தனை கொடூரமானதாக இருக்கும் என்பது தெரிந்திருந்தும், அது அவருடைய ஆன்மிக வாழ்க்கைப் பயணத்தின் வேகத்தைக் குறைக்கவில்லை. தனது உள்ளக் கிடக்கையை அப்படியே தனது சீடர்கள் மத்தியில் பிரதிபலிக்கிறார். இயேசுவின் இந்த துணிவிற்கு என்ன காரணம்? வாழ்வின் சவால்களை எளிதாக எதிர்கொள்ள இயேசுவால் எப்படி முடிந்தது? வாழ்வைப்பற்றிய சரியான புரிதல்தான், எதனையும் சந்திக்கும் மனத்திடத்தை அவருக்குக் கொடுத்தது.
வாழ்வு என்பது கடவுளின் கொடை. அதனை மற்றவர்களுக்குப் பயன் உள்ள வகையில் வாழ வேண்டும். வாழ்வு பற்றிய இந்தத் தெளிவும் புரிதலும்தான், இயேசுவிற்கு துணிவைக் கொடுக்கிறது. தனது சாவினை இயேசு முன்னறிவித்ததை. லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து அதிகாரம் 9-ல் 22 முதல் 25 வரையிலான வசனங்கள் வழியாகப் பார்க்கலாம்.
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி, ``மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்'' என்று சொன்னார். பின்பு அவர் அனைவரையும் நோக்கிக் கூறியது: ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார். ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக்கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?” என்று கேட்டார்.
இயேசு முன்வைக்கும் புதிய சிந்தனை
பேதுரு இயேசுவை “மெசியா” என்று சொல்கிறார். இயேசுவும் தான் மெசியா என்பதை மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறார். தான் மெசியா என்பதை ஏற்றுக்கொண்ட இயேசு எப்படிப்பட்ட மெசியா என்பதையும் விளக்கிக்கூறுகிறார். வழக்கமாகப் போரை வழிநடத்திச் செல்கின்ற அரசர் பாதுகாப்பாகத்தான் இருப்பார். அரசரைப் பாதுகாப்பதற்காகப் படைவீரர்கள் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு தங்கள் உயிரைத் தியாகம் செய்வர்.
இங்கேயோ மக்களைப் பாதுகாக்க, மெசியா துன்பப்படவேண்டும், தன் உயிரைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற புதிய சிந்தனையை இயேசு முன்வைக்கிறார். மேலும் தன்னைப் பின்தொடர்கிறவர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகளையும் இயேசு விவரிக்கிறார்.
இயேசுவைப் பின்பற்ற விரும்பும் யாவரும் முதலில் தன்னலம் துறக்க வேண்டும். அடுத்து நாள்தோறும் சிலுவையைத் தூக்க வேண்டும். தன்னலம் என்பது தன்னை முன்னிறுத்துவது. தன் நலனுக்கான காரியங்களை மட்டும் செய்வது. அதற்காக மற்றவர்களைப் பயன்படுத்துவது. தனக்கு எந்த துன்பமும் வரக் கூடாது, தான் மட்டும் நன்றாக இருந்தால் போதுமானது, மற்றவர்களைப் பற்றிய கவலையும், அக்கறையும் இல்லாத மனநிலை தன்னலம். இயேசுவைப் பின்பற்ற வேண்டுமானால் இந்தத் தன்னலத்தைத் துறக்க வேண்டும். அதாவது, தன் ‘நலம்’ துறந்து மற்றவர் நலன் காக்க வேண்டும். இரண்டாவது ஒவ்வொரு நாளும் சிலுவையைத் தூக்க வேண்டும்.
சிலுவைச் சாவு என்பது யூதர்கள் அறிந்திராத ஒன்றல்ல. கொலைக் குற்றவாளிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனை இந்தச் சிலுவைச் சாவு. எவ்வளவு கொடுமையானது என்று அவர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவேதான் இயேசு இந்த வார்த்தையைப்பயன்படுத்துகிறார். அதாவது, இயேசுவைப் பின்பற்ற விரும்பினால் நாள்தோறும் இப்படிப்பட்ட சிலுவையைச் சுமக்க வேண்டியதிருக்கும். எனவே, இயேசுவைப் பின்பற்றுவதற்கு முன்னதாக நாம் இவற்றை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும்.
இயேசுவின் சீடர்களாக வாழக்கூடிய வாழ்வு எளிதான வாழ்வு அல்ல. கடினமான வாழ்வு. ஆனாலும் வாழமுடியாத வாழ்வு அல்ல. அனைவராலும் வாழக்கூடிய வாழ்வு. வாழ்ந்து காட்டப்படக்கூடிய வாழ்வு. அதுதான் நம் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கக்கூடிய வாழ்வு.
ஆனால் கடவுள் நமக்குப் பரிசளித்திக்கிற இந்த வாழ்வைப் பற்றிய தெளிவு நம்மிடம் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இயேசுவைப்போல் லட்சிய வாழ்வு வாழ்கிறபோது, அதனால் சந்திக்கிற சவால்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்? தவக்காலத்தின் மிக முக்கியமான சிந்தனை இதுதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT